வன்கொடுமை சட்டத்தை வைத்து மிரட்டல் : இளம் வனத்துறை பெண் அதிகாரி தற்கொலை; உயரதிகாரிகள் ஒருவர் கைது!

0 9227
கைதான சிவக்குமார் , தீபாலி சவான்

உயர் அதிகாரிகளின் பாலியல் தொந்தரவு மற்றும் எஸ்.சி.எஸ்.டி சட்டத்தை வைத்து மிரட்டியதால், லேடி சிங்கம் என்று அழைக்கப்பட்ட வனத்துறை அதிகாரி தீபாலி சவான் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மெல்காத் புலிகள் காப்பக பீல்டு ஆபிசர் எம்.எஸ். ரெட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஸ்டிர மாநிலம் அமரவாதி மாவட்டத்திலுள்ள மெல்காத் புலிகள் வனச்சரணாலயத்தில் வன அதிகாரியாக பணி புரிந்து வந்தவர் தீபாலி சவான். இவரை , வனத்துறையின் லேடி சிங்கம் என்று மகாராஸ்டிரத்தில் அழைப்பார்கள். உள்ளுர் ரவுடிகளுக்கும் , அரசியல்வாதிகளுக்கும் பயப்படாமல் வனத்தை காக்கும் பணியில் புலி போல தீபாலி செயல்பட்டு வந்தார். புல்லட்டில் தனியாளாக சென்று மரத்தை வெட்டுபவர்களை தீபாலி விரட்டிய கதைகளும் உண்டு. ஆனால், ரவுடிகளை எதிர்கொள்ள தெரிந்த தீபாலிக்கு துறைக்குள் இருந்த கயவாளிகளை எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் பெரும் சோகமாக அமைந்து விட்டது.

ஆனால்,இதே வனச்சரணாலயத்தில் துணை பீல்டு ஆபிசராக இருந்த வினோத் சிவக்குமார் என்பவர் தீபாலிக்கு பல வகைகளில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அடிக்கடி மது குடித்து விட்டு கெட்ட வார்த்தைகளால் தீபாலியை திட்டுவதோடு அவரின் பணியை செய்ய விடாமல் மனதளவில் டார்ச்சர் செய்துள்ளார். பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல் அளித்துள்ளார். தீபாலியின் ஒரு மாத சம்பளத்தையும் நிறுத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 25 ஆம் அமராவாதியில் தான் வசித்து வந்த வனத்துறை குடியிருப்பிலேயே தீபாலி தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மிகவும் தைரியமான வனத்துறை அதிகாரியாக பார்க்கப்பட்ட 28 வயதேயான இளம் வனத்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஸ்டிராவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீபாலி எழுதிய தற்கொலை கடிதத்தில், தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பட்டியலிட்டிருந்தார். தன்னை மாதத்துக்கு ஒரு முறை கூட குடும்பத்தாரை சந்திக்க விட்டதில்லை. இரவு நேரத்தில் தன்னை தனியாக சந்திக்க வருமாறு சிவக்குமார் அழைத்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும் , மெல்காத் புலிகள் காப்பகத்தில் மங்கியா கிராமத்தில் சில உள்ளூர்வாசிகள் எஸ்சி-எஸ்டி சட்டத்தை வைத்து தன்னை மிரட்டியது குறித்து சிவக்குமாரிடத்தில் ஒரு முறை கூறினேன்.

அப்போது, தனக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக, எஸ்.சி-எஸ்.டி சட்டத்தின் கீழ் உன்னை சிறைக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியதாகவும் அந்த கடிதத்தில் தீபாலி குறிப்பிட்டிருந்தார். சிவக்குமார் குறித்து மெல்காத் புலிகள் காப்பகத்தின் தலைமை அதிகாரி சீனிவாச ரெட்டியிடம் பல முறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் தீபாலி கூறியிருந்தார்.

தீபாலியின் தற்கொலையை தொடர்ந்து, பெங்களூருவுக்கு தப்பிக்க முயன்ற துணை பீல்டு ஆபிசர் வினோத் சிவக்குமார் கைது செய்யப்பட்டார். மெல்காத் புலிகள் காப்பகத்தின் பீல்டு ஆபிசர் சீனிவாசரெட்டியும் திடீரென்று தலைமறைவாகவே உள்ளார். தற்போது, எம்.எஸ். ரெட்டி பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். சீனிவாச ரெட்டியையும் கைது செய்து விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments