திருச்சியில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்: வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினரின் நடமாட்டத்தை தெரிந்து கொள்ள அத்தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு கவர்களில் வைத்து பதவிக்கு ஏற்ப லஞ்சப்பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை காவல் நிலையம், தில்லைநகர், உறையூர் மற்றும் புத்தூர் காவல் நிலையங்களில் இரண்டாயிரம் ரூபாய் அடங்கிய கவர்கள் காவலர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காவலர் முதல் ஆய்வாளர் வரை அவரவர் பதவிக்கு ஏற்ப 2,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கவர் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதனுக்கு கிடைத்த தகவலின்பேரில், திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் உதவி ஆணையர்கள் 8 பேர் தலைமையில், போலீசார் தீவிர ஆய்வு நடத்தினர். உறையூர் காவல்நிலையத்தில் ஆய்வு நடத்திய உதவி கமிஷனர் வீரமணி தலைமையிலான போலீசாரிடம் தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் 50 ஆயிரம் ரூபாய் சிக்கியதாக கூறப்படுகிறது.
யார் பணம் கொடுத்தது? என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கையை, தேர்தல் பார்வையாளரிடம் காவல் ஆணையர் லோகநாதன் நேற்றிரவு வழங்கியுள்ளார். முன்னதாக, தில்லை நகர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார், எழுத்தர் சுகந்தி, அரசு மருத்துவமனை காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் ஸ்டெல்லா, நிலைய எழுத்தர் சிறப்பு ஆய்வாளர் பாலாஜி, நுண்ணறிவு பிரிவு காவலர்கள் சங்கர் மற்றும் கலியமூர்த்தி ஆகிய 6 பேரை பணி இடைநீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். இந்நிலையில், சிபிசிஐடி கண்காணிப்பாளர் ரவி தலைமையில் ஒரு டிஎஸ்பி, இரண்டு ஆய்வாளர்கள் மற்றும் 6 காவலர்கள் என 10 பேர் அடங்கிய குழு விசாரணையைத் துவங்கியுள்ளது.
Comments