வாக்குப்பதிவுக்கு 7 நாட்களே இருப்பதால் 234 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

0 2412
வாக்குப்பதிவுக்கு 7 நாட்களே இருப்பதால் 234 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரம்..! வீதி வீதியாக சுற்றிச் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு

தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயி ஒருவர் முதலமைச்சராக வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் மீண்டும் அவரை முதலமைச்சராக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயி ஒருவர் முதலமைச்சராக வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் மீண்டும் அவரை முதலமைச்சராக்க வேண்டும் என்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து விருத்தாசலம் தொகுதி பாமக வேட்பாளர் ஜே.கார்த்திகேயனை ஆதரித்து மங்கலம்பேட்டையிலும் குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயத்தை ஆதரித்து வடலூரிலும் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பாமக வேட்பாளர் கசாலியை ஆதரித்து ஜெயலலிதா வேடமிட்ட பெண் ஒருவர் பிரச்சாரம் செய்தார்

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கசாலியை ஆதரித்து ஜெயலலிதா வேடமிட்ட பெண் ஒருவர் பிரச்சாரம் செய்தார். முதலமைச்சர் வருவதற்கு முன்பு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஜெயலலிதா போலவே வேடமிட்ட பெண் ஒருவரும் பங்கேற்றார். ஜெயலலிதாவின் குரலுக்கு வாய்ஸ் கொடுப்பது அவர் வாக்கு சேகரித்ததை கூட்டத்தில் இருந்த அனைவரும் பார்த்து ரசித்தனர்.

அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு அமுதசுரபி என்றும் பாமக தேர்தல் அறிக்கை ஒரு பொக்கிஷம்: பாமக நிறுவனர் ராமதாஸ் 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.சி.வீரமணியை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். கோடியூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு அமுதசுரபி என்றும் பாமக தேர்தல் அறிக்கை ஒரு பொக்கிஷம் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து இரு கட்சிகளின் அறிக்கைகளில் உள்ள வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி, அவர் விளக்கமளித்தார். ஜோலார்பேட்டை பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திருப்பத்தூர் சென்ற அவர், அங்கு பாமக சார்பில் போட்டியிடும் டி.கே.ராஜாவுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். 

புதுச்சேரியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் - கமல்ஹாசன்

புதுச்சேரியில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்றால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுக்கு புதுச்சேரி மக்கள் வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.  முதலியார்பேட்டை தபால் நிலையம் அருகே முதலியார்பேட்டை தொகுதி வேட்பாளர் ஹரிகிருஷ்னன்  உட்பட 21 வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், புதுச்சேரியில்  திறந்தவெளி சாக்கடை, போக்குவரத்து பாதிப்பு, குடிநீர் தட்டுபாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை நமீதா பிரசாரம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரச்சாரம் மேற்கொண்டார். நமீதா பேசி முடித்தவுடன் அவரிடம் காசு கேட்டு கையேந்தி நின்ற மூதாட்டி ஒருவருக்கு சால்வையை வழங்கினார். முன்னதாக கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது அங்கு வந்த யாசகம் கேட்கும் முதியவர் ஒருவர் தாளத்திற்கு ஏற்ப நடனமாடினார்.

பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக ஏ.சி.சண்முகம் பிரச்சாரம் 

அரவக்குறிச்சி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் சின்னதாராபுரத்தில்  பிரச்சாரம் மேற்கொண்டார்.  2,000 போலீசார் அண்ணாமலைக்கு சல்யூட் அடித்த நிலையில் இப்பொழுது பொதுமக்களிடம் அவர் சல்யூட் அடிப்பதாகவும், 45 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அண்ணாமலை போன்ற நல்ல வேட்பாளரை கண்டதில்லை என்றும் சண்முகம் பேசினார்.

காங்கிரஸ் வேட்பாளருக்காக பாட்டுப்பாடி வாக்கு சேகரித்த திமுக ஒன்றிய செயலாளர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக ஒன்றிய செயலாளர் பாட்டுப்பாடி வாக்கு சேகரித்தார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செல்வபெருந்தகை தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்தார். அங்குள்ள தொண்டர் ஒருவரின் வீட்டில் அமர்ந்து செல்வப்பெருந்தகை உணவருந்தினார். அவருடன் வாக்கு சேகரிக்கச் சென்ற ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நா. கோபால் கைச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பாடல் பாடி வாக்கு சேகரித்தார். 

அமமுக வெற்றி பெற்றால் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையும் நிறைவேறும் - டிடிவி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி அமமுக வேட்பாளர் முத்துசாமியை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்கு சேகரித்தார். தேவர் சிலை முன் திறந்தவெளி வாகனத்தில் நின்று பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன், காசு பணத்துக்கு ஆசைப்பட்டால் தமிழகத்தை காப்பாற்ற இயலாது என்றார். அமமுக வெற்றி பெற்றால் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த டிடிவி தினகரன், போடிநாயக்கனூர் தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொட்டகுடி ஆற்றில் அணை கட்டப்படும் என்றார். 

அரவக்குறிச்சி தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் - அண்ணாமலை

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, கா. பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோடந்தூர், வெட்டுகட்டுவலசு, வடகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். திமுகவின் பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், தன்னை வெற்றி பெற செய்தால் அரவக்குறிச்சி தொகுதியில் பல மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று உறுதி அளித்தார்.

ஹெலிகாப்டரில் வந்த பனங்காட்டுப் படைக் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 தொகுதிகளில் போட்டியிடும் பனங்காட்டுப் படை கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். இதனை தொடர்ந்து காரில் பிரசாரத்திற்கு புறப்பட்ட அவர், திருவாடானை தொகுதி வேட்பாளர் பி.கே. பெருமாள் , ராமநாதபுரம் வேட்பாளர் மிஸ்ரா மற்றும் முதுகுளத்தூர் வேட்பாளர் சதீஷ் ஆகியோரை ஆதரித்து இரட்டையூரணி, கடுக்காய்வலசை, தாமரைக்குளம், கோரவள்ளி, ரெகுநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.

பாலக்கோடு தொகுதியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பரப்புரை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே.பி.அன்பழகன், காரிமங்கலம், நாகனம்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக ஆட்சியில் கல்வியில் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளதாக கூறிய அன்பழகன், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து ஆதரவு கோரினார்.

பொன்.ராதாகிருஷ்ணன் வென்றால் மத்திய அமைச்சர் ஆவார் - கிஷன் ரெட்டி

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் ஆவார் என அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் இரண்டாம் நாள் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். நிலையான ஊழல் இல்லாத அரசும், அமைதியான வாழ்வும் தொடர மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

கோவை தெற்கு தொகுதியில் கமலுக்கு வாக்கு சேகரித்த நடிகை சுகாசினி

மக்கள் நீதி மய்ய தலைவரும், கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளருமான கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகை சுகாசினி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பந்தய சாலையில் வாக்கிங் சென்ற நடிகை சுகாசினி, சாலையில் செல்லும்போது மக்களிடையே பேசி கமல்ஹாசனுக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை வழங்கியவர் இபிஎஸ்: சேவூர் ராமசந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான சேவூர் ராமசந்திரன் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆதனூருக்கு சென்ற அவர், வன்னியர்களுக்காக 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை வழங்கியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எனக்கூறி இரட்டை இலைக்கு வாக்கு திரட்டினார்.

ஆயிரம் விளக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு வாக்குச் சேகரிப்பு

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு, திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு,கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்திலுள்ள ஒன்று முதல் 10 தெருக்களுக்கு சென்று, துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.

போடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரச்சாரம்

போடிநாயக்கனூரில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆதரவு திரட்டினார். துரைச்சாமிபுரம் தொடங்கி குச்சனூர், மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட  கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அதிமுக அரசு செய்துள்ள நல திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார்.

பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா? - மக்கள் நீதி மய்யத்துக்கு வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி

பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா என மக்கள் நீதி மய்யத்துக்கு கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனுடன், எதிர்த்து போட்டியிடும் கமல்ஹாசன் விவாதம் செய்யத் தயாரா என சவால் விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த மக்கள் நீதி மய்யம் வானதி ஸ்ரீனிவாசனை துக்கடா அரசியல்வாதி என  விமர்சித்திருந்தது. இந்த நிலையில், வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், சாதாரண குடும்பத்தில் பிறந்து பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்களுக்கு மக்கள் நீதி மய்யம் கொடுக்கும் மரியாதை இதுதானா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்த முடியும்- என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி

புதுச்சேரி யூனியன் உழவர்கரை சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பன்னீர்செல்வத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மக்கள் நலத்திட்டங்கள் கொண்டுவர முடியும் என்றார்.

அம்பை அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடன கலைஞர்கள் வாக்கு சேகரிப்பு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவை ஆதரித்து நடன கலைஞர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அம்பாசமுத்திரம் சாலையில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போல் வேடமணிந்த இரண்டு பேர் பாடல்களுக்கு நடனமாடியவாறு வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர்.

வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளர் அம்பேத்குமாரை ஆதரித்து காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை வாக்குச்சேகரிப்பு

வந்தவாசி தி.மு.க. வேட்பாளர் அம்பேத்குமாரை ஆதரித்து காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். வந்தவாசி பஜார் வீதியில் அவர் பிரச்சாரம் செய்த போது, பாமகவினர் சிலர் அவரது வாகனத்தை மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் 3 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

புதுச்சேரியில் நீட் தேர்வு இருக்காது -திருச்சி சிவா பிரச்சாரம்

புதுச்சேரியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பிரச்சாரம் மேற்கொண்டார். முதலியார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சம்பத்தை ஆதரித்து பேசிய அவர், தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு புதுச்சேரியில் இருக்காது என்று கூறி வாக்குச்சேகரித்தார்.

ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு -திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி

காலியாக உள்ள அனைத்து அரசுப் பணியிடங்களிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகையாவை ஆதரித்து புதியம்புத்தூரில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அமைச்சர் சரோஜா வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் சரோஜா தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது பேசிய அவர், ராசிபுரத்தில் உள்ள குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும்விதமாக கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டத்தின் மூலம் சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

பேரூர் ஆதீன அடிகளாரை சந்தித்து ஆதரவு திரட்டினார் கமல்ஹாசன்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஷாஜஹானுக்கு ஆதரவாக அக்கட்சித் தலைவர் கமல் ஹாசன் வாக்கு சேகரித்தார். பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளாரை சந்தித்த அவர் தங்களது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தால் ஆதரவு வழங்கப்படும் என அடிகளார் அவரிடம் கூறினார்.

சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் நடனமாடி வாக்குசேகரிப்பு

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக், நடனமாடி கொண்டே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலணிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற அவர், அப்பகுதியில் வசிக்கும் பெண்களுடன் இணைந்து நடனமாடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட கார்த்திக், ஸ்டாலின் முதல்வர் ஆனவுடன் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.

துப்புரவு பணியாளர்களுடன் துப்புரவு பணி செய்து வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம் சின்னையா துப்புரவு பணியாளர்களுடன் துப்புரவு பணி செய்து வாக்கு சேகரித்தார்.

எம்.ஜி.ஆர் தெருவிற்கு கூட்டணி கட்சியினருடன் திறந்தவெளி வாகனத்தில் சென்ற அவர், இலவச வாஷிங் மெஷின், குடும்பத் தலைவிகளுக்கு 1500 ரூபாய் சோலார் அடுப்பு என அதிமுக தேர்தல் அறிக்கையிலுள்ள சிறப்பம்சங்களை எடுத்துக்கூறி வாக்குசேகரித்தார்.

பனியன் நிறுவனத்தில் துணி தைத்து வாக்கு சேகரிப்பு

திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் பிரச்சாரத்தின் போது பனியன் துணியை தைத்து வாக்கு சேகரித்தார். இத்தொகுதியில் போட்டியிடும் எம்.எல்.ஏ விஜயகுமார் பிச்சம்பாளையம்புதூர், ஜெ.ஜெ நகர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் வீதிவீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்திற்கு சென்ற அவர், தையல் இயந்திரத்தில் அமர்ந்து துணியை தைத்தவாறு அந்நிறுவனத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

பள்ளி மாணவர்களுடன் கம்பு சுற்றி வாக்கு சேகரிப்பு

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் பிரச்சாரத்தின் போது கம்பு சுற்றி வாக்கு சேகரித்தார். மசகாளிபாளையம், பாலன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பள்ளி மாணவர்கள் கம்பு சுற்றியவாறு அவருக்கு வாக்கு சேகரித்த நிலையில், ஜெயராமும் அவர்களுடன் இணைந்து கம்பு சுற்றினார்.

சூர்யா நகர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்: மா.சுப்பிரமணியன்

சென்னை சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியன், வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். கோட்டூர்புரம் அடுக்குமாடி குடியிருப்பு, சூர்யா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்த அவர், உதயசூரியனுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். பிரச்சாரத்தின்போது பேசிய மா. சுப்பிரமணியன், திமுக ஆட்சிக்கு வந்துவுடன் சூர்யா நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

தேநீர்க் கடையில் தேநீர் அருந்தியபடி மக்களிடம் வாக்கு சேகரிப்பு

சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா தேநீர்க் கடையில் தேநீர் அருந்தியபடி அங்கு வந்தவர்களிடம் வாக்குச் சேகரித்தார். விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட தசரதபுரத்தில் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா நிர்வாகிகளுடன் வீதிவீதியாக நடந்து சென்று வாக்குச் சேகரித்தார். சாலையோரத்தில் கீரை விற்ற பெண்ணிடமும் பேசித் தனக்கு வாக்களிக்கக் கேட்டுக்கொண்டார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திமுக வேட்பாளர் மதிவேந்தனை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், 200 தொகுதிகளில் திமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற அனைவரும் பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 4ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றார். 

அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தறி நெய்து வாக்குசேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், தறி நெய்து வாக்கு சேகரித்தார். அனகாபுத்தூர், பம்மல் பகுதிகளுக்கு சென்று நெசவாளர்களை சந்தித்த அவர், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

சென்னை புளியந்தோப்பில் அதிமுகவினர் சாலைமறியல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக துணை பொதுச் செயலர் ஆ.ராசாவை கண்டித்து, சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் சாலையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிமுகவினர் சுமார் 50 பேர் ஆ.ராசாவின் படத்தை காலால் மிதித்து, தீ வைத்து கொளுத்தினர். அதிமுகவினரின் சாலை மறியல் காரணமாக அங்கு சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து தடைபட்டது.

சிங்காநல்லூர் தொகுதி பள்ளி மாணவர்களுடன் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் கம்பு சுற்றி வாக்கு சேகரிப்பு

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் பிரச்சாரத்தின் போது கம்பு சுற்றி வாக்கு சேகரித்தார். மசகாளிபாளையம், பாலன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பள்ளி மாணவர்கள் கம்பு சுற்றியவாறு அவருக்கு வாக்கு சேகரித்த நிலையில், ஜெயராமும் அவர்களுடன் இணைந்து கம்பு சுற்றினார்.

சிலம்பம் சுற்றி அமைச்சருக்கு ஆதரவு திரட்டிய அதிமுக நிர்வாகிகள்

கடலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அமைச்சர் எம்.சி.சம்பத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வாகனத்தில் மேள, தாளங்கள் முழங்க பேரணியாக சென்ற அமைச்சர் எம்.சி.சம்பத், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுக நிர்வாகிகள் சிலம்பம் சுற்றி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினர்.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனம் ஆடி வாக்கு சேகரிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, பழங்குடி இன மக்களுடன் இணைந்து பாரம்பரிய இசைக்கு ஏற்ப நடனமாடி வாக்கு சேகரித்தார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கெம்பனூர், அட்டுக்கல் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். அட்டுகல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசை இசைத்தும், நடனம் ஆடியும் உற்சாக வரவேற்பளித்தனர். அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களுடன் இணைந்து பழங்குடியின மக்களின் இசைக்கு ஏற்ப நடனம் ஆடி இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு தேநீர் வழங்கி வாக்குசேகரிப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் திமுகவுடனான கூட்டணியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.கே.சி பாலு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். பெத்தாம்பாளையம் சாலை, திருவேங்கிடம்பாளையம் புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்த அவர், துண்டு பிரசுரங்களை வழங்கி உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து புதூர் பகுதியில் கட்டுமான பணி செய்துகொண்டிருந்த தொழிலாளர்களுக்கு தேநீர் வழங்கியும் கே.கே.சி பாலு வாக்கு சேகரித்தார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருமாறு, தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான எல்.முருகன் வீடு வீடாக சென்று அழைப்பு விடுத்தார். தாராபுரம் எம்.எஸ்.பி.நகர், அண்ணாநகர், நாச்சிமுத்துபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று அழைப்பு விடுத்த எல்.முருகன், தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கும் படி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

காரைக்குடி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஹெச்.ராஜா வாக்கு சேகரிப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஹெச்.ராஜா, திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேவகோட்டை, ராம்நகர், அமராவதிபுதூர் ஆகிய பகுதிகளுக்கு வாகனத்தில் பேரணியாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளர் பழனியாண்டி மாட்டுவண்டியில் பிரச்சாரம்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பழனியாண்டி, தான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதை உணர்த்தும் விதமாக மாட்டிவண்டியில் சென்று வாக்கு சேகரித்தார். மருதாண்ட குறிச்சி, குழுமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.

பாமகவினரின் ஒரு ஓட்டு 10 ஓட்டுக்கு சமம் என அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்

அதிமுக போட்டால் ஒரு ஓட்டு தான் ஆனால் பாமகவினர் ஒரு ஓட்டு போட்டால் 10 ஓட்டுக்கு சமம் என பேசி உத்திரமேரூர் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் வாக்கு சேகரித்தாரர். முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம்,வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட புளியம்பாக்கம், நத்தாநல்லூர், உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக பிரச்சார வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஸ்ரீவைகுண்டம் காங். வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வாக்கு சேகரித்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், இளைஞர்களுக்கு சுய உதவிக்குழு ஆரம்பிக்கப்படும், 100 நாள் வேலை திட்டம் நூற்றிஐம்பது நாளாக உயர்த்தப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை கூறி அவர் வாக்கு சேகரித்தார்.

ஆதரவாளர்கள் யாருமே இல்லாமல் கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம்

சென்னை பெரம்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பொன்னுசாமி, ஆதரவாளர்கள் யாருமே இல்லாமல் தனியாக பிரச்சாரம் செய்தார். கொடுங்கையூர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் மைக்கை பிடித்து தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். அவரது பேச்சை கேட்க ஒருவர் கூட இல்லாத நிலையில், நிழலுக்கு கடைப்பக்கம் ஒதுங்கிய கட்சியின் நான்கு தொண்டர்கள் மட்டும் கேமரா படம்பிடிப்பதை கவனித்ததும் ஓடி வந்து நின்றனர்.

திமுக ஆட்சி மலர அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகோள்: வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ பிரச்சாரம்

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட விடையூர், ஆத்துப்பக்கம், இந்திரா நகர், ராமன் கோவில், பனப்பாக்கம், செஞ்சி, சிற்றம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தார். வாகனத்தில் நின்றவாறும் வீதிகளில் நடந்தும் சென்றும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அவர் விளக்கிக் கூறினார். 

தந்தையுடன் உற்சாகமாக வந்து வாக்கு கேட்கும் அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள்கள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான விஜபாஸ்கருக்கு ஆதரவாக அவரது மகள் வாக்கு சேகரித்தார். மாங்குடி பகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஊருக்கு வெளியே கையில் கம்போடு நிற்கும் காவல்காரனாக வெயில், மழை பார்க்காமல் மக்களுக்காக் நிற்பேன் என்றார். அவரைத் தொடர்ந்து அவரது மகள்கள் இருவரும் தந்தைக்காக வாக்கு சேகரித்தனர்.

சேலம் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணியம் வாஷிங் மெஷின் மற்றும் சிலிண்டர்களுடம் பிரச்சாரம்

சேலம் தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாலசுப்ரமணியம் வாஷிங் மெஷின் மற்றும் சிலிண்டர்களுடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் மற்றும் வாஷிங்மெஷின் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை எடுத்துரைக்கும் விதமாக அவற்றை தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு தாதகாப்பட்டி பகுதியில் பாலசுப்ரமணியம் வாக்குசேகரித்தார். 

காங்கிரஸ் வேட்பாளர்கள் விஜய் வசந்த், விஜயதரணி தேர்தல் பிரச்சாரம்

காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் விஜயதரணி ஆகியோர் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். குழித்துறை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று இருவரும் பிரச்சாரம் மேற்கொண்டனர். வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அவர்களுடன் அக்கட்சியின் ஆதரவாளர்கள் திரளானோர் இருசக்கர வாகனங்களில் கலந்து கொண்டனர்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம்

நாமக்கல் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடவேண்டும் எனவும், வீடு வீடாகச் சென்று திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என தொண்டர்களை உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

அமமுக வெற்றி பெற்றால் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையும் நிறைவேறும் - டிடிவி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி அமமுக வேட்பாளர் முத்துசாமியை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்கு சேகரித்தார். தேவர் சிலை முன் திறந்தவெளி வாகனத்தில் நின்று பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன், காசு பணத்துக்கு ஆசைப்பட்டால் தமிழகத்தை காப்பாற்ற இயலாது என்றார். அமமுக வெற்றி பெற்றால் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த டிடிவி தினகரன், போடிநாயக்கனூர் தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொட்டகுடி ஆற்றில் அணை கட்டப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments