வேளச்சேரி ஏரி தூர்வாரப்பட்டு படகு சவாரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - மு.க.ஸ்டாலின் உறுதி

0 1618

அதிமுகவினர் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவர்கள் வெற்றி பெற்றபின் பாஜக உறுப்பினர்களாக மாறி விடுவார்கள் என்று கூறினார்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன், விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா மற்றும் வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மௌலனாவுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசும்போது, சென்னை மாநகர மேயராக இருந்து மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைத்தவர் மா.சுப்பிரமணியன் என்று தெரிவித்தார். 

சைதாப்பேட்டை தொகுதி திமுகவின் கோட்டை என்று குறிப்பிட்ட ஸ்டாலின், கொரோனா காலத்திலும் மக்களுடன் இருந்து அந்த நோயால் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி தனது மகனையும் இழந்துள்ளார் மா.சுப்பிரமணியன் என்று கூறினார். அதிமுக வேட்பாளர் சைதை. துரைசாமியை, ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக கட்சி பாஜகவின் கிளைக்கழகமாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். பாஜக மட்டுமல்ல அதிமுகவும் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற்றுவிட கூடாது என்று கூறிய மு.க.ஸ்டாலின், அதிமுகவினர் வெற்றி பெற்றால் பாஜக உறுப்பினராக மாறி விடுவார்கள் என்றும் கூறினார்.

வேளச்சேரி ஏரி தூர்வாரப்பட்டு படகு சவாரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோயம்பேடு சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஓய்வறை கட்டி கொடுக்கப்படும் என்று கூறிய மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சியில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் வாழும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments