"குமரியில் சரக்குபெட்டக துறைமுகம் அமையாது" -முதலமைச்சர் திட்டவட்டம்

0 2779
"குமரியில் சரக்குபெட்டக துறைமுகம் அமையாது" -முதலமைச்சர் திட்டவட்டம்

கன்னியாகுமரியில் சரக்குப்பெட்டக துறைமுகம் நிச்சயம் அமைக்கப்படாது என முதலமைச்சர் எடப்பாடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம், பத்மநாபபுரம் அதிமுக வேட்பாளர் ஜான் தங்கம், நாகர்கோவில் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி, விளவங்கோடு பாஜக வேட்பாளர் ஜெயசீலன், குளச்சல் பாஜக வேட்பாளர் ரமேஷ், கிள்ளியூர் த.மா.கா வேட்பாளர் ஜூட் தேவ் ஆகியோரை ஆதரித்து செட்டிக்குளம் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தேர்தல் உள்நோக்கத்துக்காக கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வருவதாக சிலர் தவறான செய்தியை பரப்புவதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர், கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் நிச்சயம் அமைக்கப்படமாட்டாது என உறுதிபட தெரிவித்தார்.

நகராட்சியாக இருந்த நாகர்கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அதிமுக தான் எனக் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், மிக்சி, கிரைண்டர், குடிநீர், சாலைகள் என மக்களுக்கான திட்டங்களை தான் அதிமுக நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

மின் துறையில் கூடுதல் கவனம் செலுத்தியதின் விளைவாக, தற்போது புதிய தொழிற்சாலைகள் தமிழகம் நோக்கி வருகிறது என்றும், தமிழகம் வெற்றிநடைபோடும் நிலையை அடைந்துள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார். விவசாயிகள், மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் பட்டியலிட்டு பேசினார்.

மீன் பிடி தடைக்கால நிவாரணத் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 7ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையில் 20 கோடி ரூபாயில் பாலம் அமைக்கப்படும், படகு நிறுத்து தளம் அமைக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் முதலமைச்சர் அறிவித்தார்.

தொடர்ந்து, நெல்லை ராதாபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இன்பதுரை, நாங்குநேரி அதிமுக வேட்பாளர் கணேசராஜா ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments