அனல் பறக்கும் பிரச்சாரம்..! அரசியல் கட்சி வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

0 1734
அனல் பறக்கும் பிரச்சாரம்..! அரசியல் கட்சி வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் மக்களுடன் இறகு பந்து விளையாடி வாக்கு சேகரிப்பு

சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் பொதுமக்களுடன் இறகு பந்து விளையாடி வாக்கு சேகரித்தார். கொண்டிதோப்பு பகுதியில் உள்ள சிவஞானம் பூங்காவிற்கு சென்ற அவர், மக்களுடன் இறகு பந்து விளையாடியும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் பிரச்சாரம் செய்தார்.

அதைத்தொடர்ந்து அதேபகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்ற அவர் ஆதரவாளர் ஒருவருக்கு டீ போட்டு கொடுத்து பாஜகவிற்கு ஆதரவு திரட்டினார்.

”குழாய் வரியை குறைத்து வசூலிக்க நடவடிக்கை” - துரைமுருகன் வாக்குறுதி 

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பழைய காட்பாடி கோட்டை அம்மன் கோவில் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், மீண்டும் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றால் குழாய் வரி 50 ரூபாயாக குறைத்து வசூலிக்க நடவடிக்கை எடுப்பேன் எனக்கூறி ஆதரவு திரட்டினார்.

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு வீதிவீதியாக திறந்த வாகனத்தில் சென்று தேர்தல் பிரச்சாரம்

திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கே.என்.நேரு அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இத்தொகுதிக்குட்பட்ட தென்னூர், கீரைக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அவருடன் திரளான கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். முன்னதாக அப்பகுதியிலுள்ள கோவில் மற்றும் தேவாலயத்தில் வழிபாடு நடத்திய பின்னர் திமுக வேட்பாளர் கே.என்.நேரு தனது பிரச்சாரத்தைத் துவங்கினார்.

அம்பத்தூர் தொகுதி திமுக வெட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பிரச்சாரம்

 அம்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜோசப் சாமுவேல் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவரை ஆதரித்து திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு விஜயலட்சுமி புரம், பானு நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் சென்ற அவர்கள், வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய டி.ஆர்.பாலு திமுக தேர்தல் அறிக்கையின் அம்சங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் வேலு வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு

கமல்ஹாசனுடன் நடித்த ஒரே காரணத்துக்காக நடிகை ஸ்ரீபிரியாவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக திமுக வேட்பாளர் வேலு தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வேலு மந்தைவெளியில் உள்ள செல்வவிநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடத்திய பின் பரப்புரையைத் தொடங்கினார். வீடுவீடாகச் சென்று உறுதிமொழிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார்.

அந்தியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகவேலை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பு 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சண்முகவேலை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட பொலவக்காளிபாளையம், பழையூர், தாசம்பாளையம், இந்தரா நகர், புலியகாட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் சென்ற அவர், மக்களிடையே அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவுக்கு பாஜகவின் எச்.ராஜா எச்சரிக்கை

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரைத் தரக்குறைவாகப் பேசியதற்காக திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பேசிய அவர், முதலமைச்சரின் தாயார் பற்றித் தரக்குறைவாகப் பேசியதற்காக ஆ.ராசா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவரை நகரவிடாமல் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஆட்டோ ஓட்டியும் வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஓ.எம்.ஆர். சாலை, மேட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஆட்டோ ஓட்டியும் வாக்கு சேகரித்தார். இதேபோல் டீ கடை ஒன்றில் தேநீர் அருந்தியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 45 கி.மீ நடைபயணப் பிரச்சாரம்

திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் வகையில் 45 கிலோமீட்டர் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். டி. கல்லுப்பட்டியில் தொடங்கிய இந்த பிரச்சார நடைபயணம் 324 கிராமங்கள் வழியே சென்று திருமங்கலத்தில் நிறைவு பெறுகிறது. இதில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் ஆயிரக்கணக்கான அதிமுகவினர், கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் இதுவரை அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு 6 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது என்றார். 2006-ல் திமுக ஆட்சியில் ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது என கேள்வி எழுப்பிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுகவின் தேர்தல் அறிக்கையை செல்லாத ரூபாய் நோட்டு எனவும் விமர்சித்தார்.

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பிரச்சாரம்

கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி ஸ்கூட்டியில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். ராஜவீதி தேர்முட்டி பகுதியில் தொடங்கிய இருசக்கர வாகன பேரணி ஒப்பணக்கார வீதி வழியாக தெப்பக்குளம் மைதானத்தை வந்தடைந்தது. இதில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் அமைச்சர் ஸ்மிருதி இராணி, நடிகை காயத்ரி ரகுராம்ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ராமநாதபுரம் பகுதியில் வானதி ஸ்ரீனிவாசன், மாட்டு வண்டியை இயக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாகை தொகுதி விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாசை ஆதரித்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

நாகை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாசை ஆதரித்து, திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சீராளம்மன் ஆலயத்தில் இருந்து கையில் மண் பானையுடன் பேரணியாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வீடு வீடாக வாக்கு சேகரித்தனர்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதிவீதியாக அதிமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்குச் சேகரிப்பு

கரூரில் போக்குவரத்துத் துறை அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்த ஜீப்பில் வீதிவீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார். தாந்தோன்றிமலையில் வீதிவீதியாகச் சென்று அதிமுக அரசின் சாதனைகளையும், நிறைவேற்ற உள்ள திட்டங்களையும் பரப்புரை செய்து வாக்குச் சேகரித்தார். கடந்த பத்தாண்டுகளாக அதிமுக அரசு சிறப்பாகச் செயல்பட்டதால்தான் மக்களிடையே எந்த எதிர்ப்புமின்றி வாக்குக் கேட்கச் செல்ல முடிவதாகத் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் கல்யாணி மீன்பாடி வண்டி ஓட்டியும், இட்லி அவித்து கொடுத்தும் வாக்கு சேகரிப்பு

சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கல்யாணி, மீன்பாடி வண்டி ஓட்டி ஆதரவு திரட்டினார். கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு புரசைவாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அங்குள்ள சாலையோர கடையில் இட்லி அவித்துக் கொடுத்து பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்திற்கு வந்திருந்த மகளிரணியினர் ஆடிய ஆட்டத்தால் அந்த இடமே கலகலப்பானது.

"சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை" - லட்சிய திமுக கட்சி தலைவர் டி.ராஜேந்தர் அறிவிப்பு

வருகிற சட்டமன்ற தேர்தலில் லட்சிய தி.மு.க. கட்சி யாருக்கும் ஆதரவு அளிக்காது என அக்கட்சியின் தலைவரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் அதிமுக அரசின் சாதனைகளையும், வாக்குறுதிகளையும் கூறி தீவிர பிரச்சாரம்

திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளரான அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மேலசிந்தாமணி கவுண்டர் தோப்பு நடுத்தெரு உள்ளிட்ட இடங்களில் கட்சியினர் புடைசூழ தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, இந்த தொகுதிக்கு தம்மால் இயன்ற பல திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக வெல்லமண்டி நடராஜன் கூறினார். மீண்டும் வாய்ப்பு அளித்தால் தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்த பாடுபடுவேன் என கூறி அவர் ஆதரவு திரட்டினார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பழனி சிலம்பம் சுற்றி வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பழனி மக்கள் மத்தியில் சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்தார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வான பழனி குன்றத்தூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சிலம்பம் சுற்றி இரட்டை இலைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அனைத்து வசதிகளுடன் புதிய விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும் என உறுதியளித்தார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுகவின் திட்டங்களை அட்டைப்படங்களால் விளக்கிப் பரப்புரை

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்களைப் படங்களுடன் விளக்கிப் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பரப்புரை செய்து வரும் அவர், அதிமுக நிறைவேற்றுவதாகக் கூறியுள்ள உறுதிமொழிகளை மக்களுக்கு எளிதில் விளக்கும் வகையில் அட்டைப் படங்களாக அச்சிட்டு அதைக் காட்டி வாக்குச் சேகரித்தார். ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள், சோலார் அடுப்பு, வாஷிங்க மெசின் ஆகியவற்றை வழங்குவதாக அதிமுக உறுதியளித்துள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி ஆதரவு திரட்டினார்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி ஆதரவு திரட்டினார். கோவைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்ற மன்சூர் அலிகான், அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் இணைந்து பேட்டிங், பவுலிங் செய்து வாக்கு சேகரித்தார்.

ஹெச்.ராஜாவிற்கு ஆதரவாக சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பிரச்சாரம் 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவிற்கு ஆதரவாக சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். காரைக்குடி தொகுதிக்குட்பட்ட வாட்டர் டேங்க் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி ஹெச்.ராஜாவிற்காக வாக்கு சேகரித்தார்.

விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் இளைஞர்களுடன் கேரம் போர்டு விளையாடி வாக்கு சேகரிப்பு

விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா இளைஞர்களுடன் கேரம் போர்டு விளையாடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோயம்பேடு பள்ளிக்கூட தெருவில் கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் நடந்து சென்று மக்களை சந்தித்த அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அங்கு இளைஞர்களுடன் கேரம் போர்டு விளையாடிய பிரபாகர ராஜா, உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

பழங்குடியின மக்களுக்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவோம் - கமல் 

நீலகிரி மாவட்டம் உதகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். உதகை தொகுதி வேட்பாளர் மருத்துவர். சுரேஷ்பாபு, கூடலூர் தொகுதி வேட்பாளர் பாபு ஆகியோரை ஆதரித்து கமல் வாக்கு சேகரித்தார். மக்களுக்கான ஆதாரச் சேவைகளை பெறுவது அவர்களின் உரிமை என்றும் அதனை வழங்குவது அரசின் கடமை என்றும் கூறிய கமல், தங்களது வேட்பாளர்கள் வென்றால் அதனை கட்டாயமாகச் செய்வார்கள் என்றார். 

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிச்சயம் : அமைச்சர் ஓ. எஸ்.மணியன் வாக்குறுதி

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஓ. எஸ். மணியன், திறந்த வேனில் கிராமம், கிராமமாக சென்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குரவப்புலம் உள்ளிட்ட  பல இடங்களில் வாக்காளர்களை சந்தித்து, ஆதரவு திரட்டிய ஓ. எஸ்.மணியன், அதிமுக ஆட்சி தொடர்ந்தால், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் நிச்சயம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.  

குமாரபாளையம் அதிமுக வேட்பாளர் மின்துறை அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரிப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் தங்கமணி, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பள்ளிப்பாளையம், மணல்மேடு, அழகப்பா நகர், பாதரை ,நெட்டவேலம்பாளையம், அண்ணாநகர், சின்ன ஆனங்கூர், பழைய பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்த வேனில் சென்ற அவர், தொகுதிக்கு தாம் செய்த திட்டங்களையும் கொண்டுவரவுள்ள திட்டங்களையும் பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார். 

234 தொகுதி வேட்பாளர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்படுமா?-பிரேமலதா

கொரோனாவை காரணம் காட்டி,தன்னை தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல விடாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் சதி செய்ததாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் புகார் கூறியிருக்கிறார்‍. விருதாச்சலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைக் கூறினார்‍.

அரக்கோணம் தொகுதி வி.சி.க வேட்பாளர் கௌதம சன்னா பரப்புரை

அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கௌதம சன்னா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிருஷ்ணாம்பேட்டை, கிரிபில்ஸ்பேட்டை, சோமசுந்தரம் நகர், அச்சமநாயுடு கண்டிகை,  பழனிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்  வீதி வீதியாக  நடந்து சென்றும், பின்னர் திறந்தவெளி வாகனத்திலும் சென்றும் வாக்கு சேகரித்தார்.

தர்பூசணி வியாபாரம் செய்து வாக்கு சேகரித்த ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் பழனி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட மதுரமங்கலம் கிராமத்தில் தர்பூசணி விற்பனை செய்து அதிமுக வேட்பாளரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான பழனி வாக்கு சேகரித்தார். மதுரமங்கலம் கிராமத்தில் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அங்கு தள்ளுவண்டியில் தர்பூசணி வியாபாரம் செய்பவரிடம் கத்தியை வாங்கி தர்பூசணியை அறுத்துக் கொடுத்து திடீர் வியாபாரியானார். முன்னதாக குன்றத்தூரில் வாக்கு சேகரித்த பழனி, அங்குள்ள மைதானத்தில் சிலம்பம் விளையாடிய சிறுவர்களிடமிருந்து சிலம்பத்தை வாங்கி லாவகமாகச் சுற்றி அசத்தினார்.

உடற்பயிற்சி கூடத்தில் பளு தூக்கி வாக்கு சேகரிக்கும்  திமுக வேட்பாளர் 

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் உடற்பயிற்சி கூடத்தில் பளு தூக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவெற்றியூர் சாத்து மாநகர்,  காலடிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கே.பி.சங்கர், அங்குள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்குள் சென்று பளு தூக்கி வாக்கு சேகரித்தார். 

சிவகங்கை சிபிஐ வேட்பாளர் குணசேகரன் தேர்தல் பிரச்சாரம்

சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரன் தேர்தல் பிரச்சாரத்தில்   ஈடுபட்டார். மதகுபட்டி, ஒக்கூர், பிறவலூர், கருங்காலக்குடி, மேலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டணி கட்சியினருடன் சென்ற அவர் திமுக தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடையே எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். 

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு நடிகையு கௌதமிவாக்கு சேகரிப்பு  

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான கௌதமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பரமத்தி ஒன்றிய பகுதிகளான புதுக்கநல்லி, காருடையம் பாளையம், பரமத்தி மற்றும் நெடுங்கூர் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், காவல்துறை பணியைத் துறந்து மக்கள் சேவைக்காக வந்துள்ள அண்ணாமலை நிச்சயமாக தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றார். 

சென்னை ஆலந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதி வாக்கு சேகரிப்பு

சென்னை ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர், தாம் வாகை சூடினால், இலவச வீட்டுமனைப்பட்டா, மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்கு தடையின்றி சென்றுவர சாலை வசதி ஆகியவை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். 

வந்தவாசி திமுக வேட்பாளர் அம்பேத்குமார் நிலக்கடலை அறுவடை செய்தும், வடை சுட்டும் வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி திமுக வேட்பாளர் அம்பேத்குமார், நிலக்கடலை அறுவடை செய்தும், வடை சுட்டும்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ரங்கராஜபுரம் கிராமத்தில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்ட அவர் விவசாய நிலத்தில் இறங்கி நிலக்கடலை அறுவடை செய்து அங்கு அறுவடையில் ஈடுபட்ட விவசாயிகளிடம் ஆதரவு திரட்டினார். தொடர்ந்து நல்லூர் பகுதியில் வடை சுட்டு அப்பகுதி மக்களிடம் வியாபாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

 அமைச்சர் ராஜலட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பு 

சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜலட்சுமி வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரான ராஜலட்சுமி சங்கர நாராயண சுவாமி கோவில் பகுதி, பூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு நடந்து சென்று வியாபாரிகள் மற்றும் மக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேர்தல் பிரச்சாரம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து விஜய பிரபாகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன், பேசிய விஜய பிரபாகரன், தன்னை சாதாரண பையனாக எடை போட வேண்டாம் என ஆவேசம் காட்டினார்.

 

தொடர்ந்து, பவானிசாகர் தொகுதியில் தேமுதிக வெற்றி பெற்றால் நிறைவேற்றப்படும் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை படிக்க முடியாமல் திணறிய விஜயபிரபாகரன், ஹேண்ட் ரைட்டிங் புரியவில்லை எனக்கூறி பாதியிலேயே நிறுத்தினார்.

கிராமம் கிராமமாக சென்று அமைச்சர் காமராஜ் தீவிர ஓட்டு வேட்டை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் அதிமுக சார்பில் 3 - வது முறையாக களமிறங்கி உள்ள உணவு அமைச்சர் காமராஜ், கிராமம், கிராமமாக சென்று ஆதரவு திரட்டினார். இசைக்குழுவினர் முன்னே செல்ல, வேட்பாளர் காமராஜ், திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார். அதிமுகவின் சாதனைகளை பட்டியிலிட்ட காமராஜ்,  தமிழகத்தில் ஆட்சி தொடர, ஆதரவு தருமாறு, கேட்டுக்கொண்டார். 

ச.ம.க மாநில மகளிரணித் தலைவியும் நடிகையுமான ராதிகா பிரச்சாரம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சேகரை ஆதரித்து செய்துங்கநல்லூரில் நடிகை ராதிகா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின்போது திமுகவையும் அதிமுகவையும் விமர்சித்த ராதிகா, மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு  ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தாயகம் கவியை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். கடந்த முறையை விட கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் தாகயம் கவியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், திரு.வி.நகர் தொகுதியில் திமுகவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்றார். 

 கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பிரச்சாரம் 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மங்களம் பகுதியில் வாக்கு சேகரித்த அவர், தன்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தால், மக்களுக்கு சேவை செய்ய பதவியை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளதாக  கூறினார். 

கோவை தெற்கு தொகுதி மநீம வேட்பாளர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக சுஹாசினி பிரச்சாரம்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனுக்கு ஆதரவாக அவரது அண்ணன் மகளும், நடிகையுமான சுகாசினி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சுக்கிரவார்பேட்டை, டி.கே.மார்கெட், கிருஷ்ணப்பா குடியிருப்பு, பட்டு பூச்சி குடியிருப்பு, பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் சென்று பிரச்சாரம் மேற்கொண்ட சுஹாசினி, டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார். 

எடப்பாடி தொகுதியில் முதல்வரை ஆதரித்து அன்புமணி இராமதாஸ் பரப்புரை

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜலகண்டாபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இ.பி.எஸ்.க்காக வாக்கு சேகரித்த அன்புமணி, 70 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விவசாயி தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்துள்ளதாக புகழாரம் சூட்டினார். எடப்பாடி தொகுதியில் மீண்டும் களமிறங்கும் இ.பி.எஸ், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் கூறினார். 

ஜான் பாண்டியனை ஆதரித்து கூட்டம் - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்பு

தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியின் படி, 107 நலத் திட்டங்கள் நிறைவேற்றித்தரப்படும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனை ஆதரித்து, சென்னை வேப்பேரி மகாராஷ்டிரா பவனில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இதனை தெரிவித்தார். மேலும், பெண்களின் கண்ணியத்தை காக்க அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து சென்னை துறைமுகம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து பூக்கடை காவல் நிலையம் முன்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

 பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து பேசுகையில் கண்கலங்கிய வேட்பாளர் 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி பாமக வேட்பாளர் ராஜேந்திரன், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குறித்து பேசும்போது கண்கலங்கினார். புதுப்பாளையம் கிராமத்துக்கு வாக்கு சேகரிப்புக்காக வந்த ராஜேந்திரன், வீதி வீதியாகவும் வீடு வீடாகவும் சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் மக்களிடையே பேசத் தொடங்கிய ராஜேந்திரன், தனக்கு வாய்ப்பளித்த பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து பேசும்போது கண்கலங்கினார். 

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ பிரச்சாரம்

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன், நகரின் 19 மற்றும் 20வது வார்டுகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தபால் தெரு, லட்சுமிபுரம், பூங்கோதை நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்த அவர், அப்பகுதியில் நிலுவையிலுள்ள திட்டங்களை விரைவாக முடித்து செயல்பாட்டுக்குக் கொண்டுவர திமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். 

திருவிக நகர், ஆர்.கே. நகர், பெரம்பூர் தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

சென்னையில் பல்வேறு தொகுதிகளில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிரசாரத்தில் ஈடுபட்டார்.  சென்னை - திருவிக நகரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தாயகம் கவியை ஆதரித்து திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்த உதயநிதி, தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலர, ஆதரவு தருமாறு, வாக்காளர்களை, கேட்டுக்கொண்டார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எபநேசருக்கு ஆதரவாகவும் உதயநிதி பிரசாரம் செய்தார். இதுதவிர, பெரம்பூர் திமுக வேட்பாளர் R.D. சேகருக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளிலும் உதயநிதி, திறந்த வேனில் சென்று, தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு கன்னடத்தில் பேசி வாக்கு சேகரித்த சித்தராமையா

கோடான கோடி வணக்கங்கள் செலுத்தி கேட்டுக்கொள்கிறேன், தமிழகத்தில் பாஜகவை வளரவிடாதீர்கள் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேட்டுக்கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமச்சந்திரன் மற்றும் ஓசூர் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் ஆகியோரை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் அது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால்தான் என்று கூறிய சித்தராமையா, விவசாயிகள், நடுத்தர மக்கள் மீது அக்கறை இல்லாத பாஜகவை தமிழகத்தில் வளர விடாதீர்கள் என்றார். 

 உங்களுக்கு தெரியுமா., நான் வெஜிடேரியன் தான் - நடிகை நமீதா

மதுரை வடக்கு தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து, நடிகை நமீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுரை கருப்பாயூரணி, சீமான் நகர், கோமதிபுரம், அண்ணா நகர் உள்ளிட்ட  பகுதிகளில்  வீதி வீதியாக சென்று நமீதா வாக்கு சேகரித்தார். அதிமுக மற்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றப்படும் எனக் கூறி நடிகை நமீதா பரப்புரை மேற்கொண்டார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments