அசாமிலும் மேற்கு வங்கத்திலும் முதற்கட்ட வாக்குப்பதிவு..!

0 2207
அசாமிலும் மேற்கு வங்கத்திலும் முதற்கட்ட வாக்குப்பதிவு..!

சாமில் 47 சட்டமன்றத் தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகளிலும் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நண்பகல் 12 மணி நிலவரப்படி அசாமில் 26 விழுக்காடும் மேற்கு வங்கத்தில் 36 விழுக்காடும் வாக்குகள் பதிவாகி இருந்தன.

126 உறுப்பினர் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக நாகான், திப்ரூகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 47 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. திப்ரூகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் அனைவருக்கும் வெப்பநிலை காணும் சோதனை செய்வதுடன், முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி ஆகியன வழங்கப்படுகின்றன.

மஜுலியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆறடி இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் வட்டமிட்டு வாக்காளர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டனர். நாகான் மாவட்டத்தில் ரூபாகி வாக்குச்சாவடியில் காலையிலேயே பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

294 உறுப்பினர் கொண்ட மேற்கு வங்கச் சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக இன்று புரூலியா, ஜார்கிராம், பங்குரா, கிழக்கு மேதினிப்பூர், மேற்கு மேதினிப்பூர் மாவட்டங்களில் உள்ள 30 சட்டப்பேரவத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா சூழலில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் வாக்காளர்களுக்கு முகக்கவசம், கையுறை ஆகியன வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

அசாம் முதலமைச்சர் சர்வானந்த சோனோவால் திப்ரூகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நூற்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். 

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் ஜார்கிராமில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். இதனிடையே கோன்டாய் என்னுமிடத்தில் பாஜகவின் சவுமேந்து அதிகாரியின் கார் மீது திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் சவுமேந்து அதிகாரி காயமின்றித் தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments