கைகலப்பு இல்லாமல் கலகலப்பு பிரச்சாரம்..!
சென்னை வியாசர்பாடியில் மசூதியில் கலகலப்பாக முடிந்த தேர்தல் பிரச்சாரம் குறித்து ஒரு செய்தி தொகுப்பு...
சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி எஸ்.ஏ காலனியில் உள்ள மசூதிக்கு வாக்கு சேகரிப்பதற்காக அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அதே நேரத்தில் திமுகவினரும் அங்கு வந்தனர். தேர்தல் நடத்தை விதிகளின் படி வழிபாட்டு தளங்களில் வாக்கு சேகரிக்க கூடாது என உத்தரவு இருப்பதால் காவல் துறையினர் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் தெரு முனையிலேயே இரு கட்சியினரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர், தொழுகை முடிந்து வந்தவர்களிடம் இரு தரப்பினரும் போட்டிப் போட்டுக் கொண்டு வாக்கு சேகரித்தனர். இதனால் மோதல் ஏற்பட்டு விடக்கூடும் என கருதி காவல் துறையினர் குவிந்தனர்.
ஆனால், அங்கு நடந்ததோ வேறு, அதிமுகவினர் போடுங்கம்மா ஓட்டு.. என குரல் கொடுக்க, உதய சூரியனை பார்த்து என திமுகவினர் முந்திக்கொண்டு கோரஷாக ஸ்கோர் செய்தனர். இதனால், குரல் கொடுத்த அதிமுக தொண்டர் கடுப்பாகி கோஷத்தை மாற்றி, நமது சின்னம்... என குரல் கொடுக்க, இரட்டை இலை என அதிமுகவினர் சொல்வதற்குள் திமுகவினர் உதய சூரியன் என கோரஷாக மீண்டும் ஸ்கோர் செய்ததால் இடமே கலகலப்பானது.
வாக்கு சேகரிக்க வந்த அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர். தனபாலன் சிரித்து கொண்டே அங்கிருந்து புறப்பட, மோதல் உருவாகுமோ என நினைத்து வந்திருந்த காவல் துறையினரும் கலைந்துச் சென்றனர்.
Comments