மருந்தை விட்டுச்சென்ற மூதாட்டி...போலீஸ் கேட்டுக்கொண்டதால் பேருந்தை விரட்டி சென்று கொடுத்த இளைஞர்

0 2822

பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞரை நிறுத்தி, போலீஸ் ஒருவர், மூதாட்டியிடம் மருந்து பாட்டில் கொடுக்கச் சொன்ன வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக ஹெல்மெட் அணியாமல் லைசன்ஸ் இல்லாமல் செல்பவர்களை போலீசார் மடக்கிப் பிடிப்பது வழக்கம். ஆனால் இங்கு , காவல்துறை அதிகாரி ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை திடீரென நிறுத்தி, மூதாட்டி ஒருவருக்கு உதவி செய்யும்படி கேட்டுக்கொண்ட சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த அனி அருண்((Anny Arun)) என்ற இளைஞர் ஒருவர், பாண்டிச்சேரியிலிருந்து தென்காசிக்குத் தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு காவல்துறை அதிகாரி அவரை வழியில் நிறுத்தினார். அதன்பின் அந்த அதிகாரி, அரசு பேருந்து ஒன்றை கை காட்டி, "இதே போல் ஒரு பேருந்து முன்னே சென்றுகொண்டிருக்கிறது, அதில் உள்ள மூதாட்டி ஒருவர் இந்த மருந்து பாட்டிலை விட்டுச் சென்றுவிட்டார், நீங்கள் பேருந்தை பின் தொடர்ந்து சென்று இதைக் கொடுத்து விட முடியுமா?" என்று கேட்டார்.

சற்றும் தாமதிக்காது அருண் , மருந்தை வாங்கிக்கொண்டு பைக்கில் புறப்பட்டார். சிறிது தூரத்தில் ஒரு அரசு பேருந்து அவர் கண்ணில் தென்பட்டது. பேருந்து ஓட்டுநரிடம், அருண் செய்கை காட்ட, ஓட்டுநரும், பேருந்தை ஓரம் நிறுத்தினார். பின்னர் மூதாட்டியிடம் மருந்தை கொடுத்திவிட்டு, மீண்டும் பைக்கில் சென்றார் அருண்.

இந்த காட்சிகள் அனைத்தையும் தனது செல்போனில் பதிவு செய்த அருண், தற்போது அதனை தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த மூதாட்டி, காவல் துறை அதிகாரிக்குத் தெரிந்தவரா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை . இருப்பினும் பெருந்தன்மையுடன் மூதாட்டிக்கு உதவிய காவல் துறை அதிகாரி, அருண் மற்றும் பேருந்து ஓட்டுனரை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments