விமானத்தில் இன்ப சுற்றுலா சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்...உற்சாகமாக ஒரு பயணம்

0 5374

சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் விமானம் மூலம் இன்ப சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட சம்பவம் மாணவர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிப் பருவ காலங்களில் இன்ப சுற்றுலா செல்வதென்றாலே தனி குஷி தான். Homework , Classwork என்று எந்த கெடுபிடியும் இன்றி , நண்பர்களுடன் ஆனந்தமாக வெளியில் செல்ல யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் சேலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டபுள் குஷி. ஏனென்றால், அவர்களுக்கு விமானத்தில் இன்ப சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் , சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ், தனியார் விமானச் சேவை நிறுவனமான ட்ரூஜெட் 'சேலம்-சென்னை' இடையிலான விமான போக்குவரத்தைத் தொடங்கியது.

வெற்றிகரமாக 3 ஆண்டுகள் தாண்டி 4வது ஆண்டில் கால் பதிக்கும் ட்ரூஜெட் நிறுவனத்தின் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், ஊழியர்கள் அனைவரும் உற்சாகமாக கேக் வெட்டினர்

இதனைத் தொடர்ந்து, காமலாபுரம் அரசுப் பள்ளி மாணவர்களை இன்ப சுற்றுலா அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, மாணவர்களைச் சேலத்திலிருந்து சென்னைக்கு இலவசமாக அழைத்துச் செல்ல ட்ரூஜெட் நிறுவனம் ஏற்பாடு செய்தது.

இதனைத் தொடர்ந்து, 21 மாணவர்களுடன், ட்ரூஜெட் விமானம் சென்னைக்குப் புறப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஆசிரியர்கள் சிலரும் மாணவர்களுடன் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . மேலும், கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் முககவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மறுநாள் காலை மீண்டும், சென்னையிலிருந்து சேலத்திற்கு மாணவர்களை அழைத்து வர ட்ரூஜெட் விமானம் ஏற்பாடு செய்துள்ளது .

இதனை பற்றி மாணவர்கள் கூறுகையில், தாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments