திருவண்ணாமலையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

0 4929
திருவண்ணாமலையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளை மற்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவின் சொந்த கிராமமான சே.கூடலூர் கிராமத்தில் உள்ள அவரது வீடு மற்றும் நண்பர்கள்,  உறவினர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கம்பன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிரானைட் ஃபேக்டரி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

எ.வ.வேலுவின் அலுவலகம், அவர் அமைத்த தேர்தல் பணிமனைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீநாத் நகரில் உள்ள எ.வ.வேலுவின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

விருந்தினர் இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கியிருக்கும் போது, அங்கு வருமான வரி சோதனை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார். சோதனை நடத்தியதில் அவர்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.

இதற்கிடையே, வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே சோதனைகள் நடைபெறுவதாக, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த வருமான வரித்துறையின் சோதனைக்கும், தேர்தலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்பது விசாரணைக்குப் பின் தெரியவரும் என்றும் சாகு தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை புகார்களின் அடிப்படையில் மேற்கொண்டு வருவதாவும், அதற்கு கோயம்புத்தூர் சம்பவமே உதாரணம் என்றும், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments