அனல் பறக்கும் பிரச்சாரம்..! சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!

0 2053
அனல் பறக்கும் பிரச்சாரம்..! சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொகுதிகள் தோறும் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

1000 ஆண்டு பழமையான உய்யக்கொண்டான் கால்வாய் சீரமைக்கப்படும் - திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு வாக்கு உறுதி

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு, ஆழ்வார்தோப்பு, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஆயிரம் ஆண்டு பழமையான உய்யக்கொண்டான் கால்வாயில் சாக்கடை நீர் கலப்பதால் மாசடைந்து கொசுத் தொல்லை மற்றும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயத்தை சுட்டிக்காட்டிய கே.என்.நேரு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கால்வாய் தூர்வாரப்பட்டு மக்கள் குளிப்பதற்கு ஏற்றதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பேட்மிட்டன் விளையாடி கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், பேட்மிட்டன் விளையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பந்தய சாலை பகுதியில் வாக்கிங் சென்றவர்களிடம் தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது முதியவர் ஒருவர் கையில் கீரை கட்டுடன் வானதி சீனிவாசனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். பின்னர் விளையாட்டு திடலில் சிறிது நேரம் பேட்மின்டன் விளையாடிய வானதி சீனிவாசன், அங்கிருந்தவர்களிடம் ஆதரவு திரட்டினார்.

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு 

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் செங்கோட்டையன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கொன்னமடை, மாரியம்மன் கோவில் வீதி, சத்யாநகர் ,சந்தன நகர், குப்பிபாளையம், இச்சிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக ஆதரவாளர்களுடன் சென்ற அமைச்சர், இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், மாணவர்களின் நலன் கருதி தொழில்நுட்ப கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் நிலையே தற்போது நிலவுகிறது -தொல்‍.திருமாவளவன்

தமிழகத்தின்அனைத்துத் சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் நிலையே தற்போது நிலவுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்தலைவர் தொல்‍.திருமாவளவன் தெரிவித்துள்ளார்‍. விழுப்புரத்தில் திமுக வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், இத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்போ, ஆட்சிக்கு வருவதற்கான அறிகுறியே எங்கும் தென்படவில்லை எனக் கூறினார். 

ராயபுரம் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்திற்கு முன்னதாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக வெற்றி பெறும் என்கிற கருத்து கணிப்பு வெறும் கருத்து திணிப்பு தான், அதிமுக தான் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனத் தெரிவித்தார். மேலும், சசிகலா குறித்து துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். கூறிய கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அது அவருடைய சொந்த கருத்து என்றார்.

போடிநாயக்கனூர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று ஓ.பி.எஸ் வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடிநாயக்கனூர் நகராட்சியின் 2ஆவது வார்டு முதல் 18ஆவது வார்டு வரையிலான பகுதிகளில் ஓ.பி.எஸ் பரப்புரை மேற்கொண்டார். உச்சமகாளியம்மன் கோவிலில் வழிபாடு செய்த ஓ.பி.எஸ், ஆட்டோ, மற்றும் திறந்தவெளி வாகனத்தில் சென்று, போடி நகரில் தமக்கு வாக்கு கோரினார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக புடைசூழ சென்று, துணை முதல்வர் ஓ.பி.எஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ரிஷிவந்தியம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்தோஷ் தீவிர பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்தோஷ், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருபாளபந்தல், தோப்புச்சேரி, நரியந்தல், மாடம்பூண்டி, அறுதங்குடி, கணகனந்தல் உள்ளிட்ட கிராமங்களுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்றும், வீதி வீதியாக நடந்து சென்றும் சந்தோஷ் வாக்கு சேகரித்தார். 

திருச்சி மேற்கு அதிமுக வேட்பாளர் பத்மநாதன் ஆரத்தி எடுத்த பெண்களின் காலில் விழுந்து வணங்கி வாக்கு சேகரிப்பு

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பத்மநாதன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த பத்மநாதன், பிரச்சாரத்தின் போது தனக்கு ஆரத்தி எடுத்த பெண்களின் காலில் விழுந்து வணங்கி வாக்கு சேகரித்தார். 

பல்லாவரம் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் டீக்கடைக்கு சென்று டீ குடித்துக்கொண்டே பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிட்லபாக்கம் ராஜேந்திரன், இறகு பந்து விளையாடி வாக்கு சேகரித்தார். குரோம்பேட்டை இறகுபந்து விளையாட்டு தளத்திற்கு சென்ற அவர், அங்கிருந்த விளையாட்டு வீரர்களுடன் இறகுபந்து விளையாடி, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து அருகிலிருந்த டீக்கடைக்கு சென்ற வேட்பாளர் ரஜேந்திரன், அங்கு வந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, டீ குடித்துக்கொண்டே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பழனி திமுக வேட்பாளர் செந்தில்குமார் வீதி வீதியாக சென்று திமுக தேர்தல் அறிக்கைகளை கூறி வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட அடிவாரம், பூங்கா ரோடு, இட்டேரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று திமுகவின் தேர்தல் அறிக்கைகளை விளக்கி கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

திருச்செங்கோட்டில் களம்காணும் பாஜக வேட்பாளர் பொன்.சரஸ்வதி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன் சரஸ்வதியை ஆதரித்து அக்கட்சியின் துணைத்தலைவர் விபி துரைசாமி வாக்கு சேகரித்தார். கருவேப்பம்பட்டி, பால்மடை, குட்டிமேய்க்கபட்டி, சிந்தம்பலயம், கருமாபுரம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், 12,500 கோடி ரூபாய் விவசாய கடன் மற்றும் நகை கடனை மக்களுக்காக தள்ளுபடி செய்த அரசு அதிமுக அரசுதான் என சுட்டிக்காட்டினார்.

செங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் நைனா கண்ணு பருத்தி தோட்டத்தில் கலை வெட்டி வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதியில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர் எம்.எஸ். நைனா கண்ணு, பருத்தி தோட்டத்தில் பெண்களுடன் கலை வெட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிருஷ்ணாபுரம், நேருநகர், தளவாய் நாயக்கன் பேட்டை பகுதிகளுக்கு  தொண்டர்களுடன்  நடந்து சென்று அவர்,  பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பெண்களுடன் பருத்தி  தோட்டத்தில் கலை வெட்டி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

திருவள்ளூர் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் டீ கடையில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பூண்டி மேற்கு ஒன்றிய பகுதிகளில் ஊர்வலமாகவும், திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்றும் வாக்கு சேகரித்த அவர், பூண்டியை சுற்றுலா தளமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். பிரச்சாரத்தின் போது டீ கடைக்கு சென்ற வி.ஜி.ராஜேந்திரன், கடையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்களுக்கு டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தார். 

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சுந்தர் தீவிர தேர்தல் பிரச்சாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உத்திரமேரூரின் தற்போதைய எம்.எல்.ஏ.வான சுந்தர் தொகுதிக்கு உட்பட்ட ஐயன்குளம், அரசன்தாங்கள் , களக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொண்டர்களுடன் சென்று மக்களை சந்தித்த அவர் உதய சூரியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக ஆட்சியில் 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

அதிமுகவினரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு திமுகவுக்கு வாக்களியுங்கள்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கும் காரம்பாக்கம் கணபதி, அதிகாலை முதலே வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அயப்பாக்கம் ஸ்ரீனிவாச நகர், ஐயப்பா நகர்,பவானி நகர்,தெரு வீதி அம்மன் கோவில் தெரு,அபர்ணா நகர்,எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்ற அவர், வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மதுரவாயல் அதிமுக வேட்பாளர் அமைச்சர் பெஞ்சமின் பணம் கொடுத்தால், அதனை வாங்கிக்கொண்டு திமுகவிற்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

சிங்காநல்லூர் திமுக வேட்பாளர் கார்த்திக் பெண்கள், தொண்டர்களுடன் சேர்ந்து நடனமாடி வாக்கு சேகரிப்பு

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கார்த்திக், பிரச்சாரத்தின் போது நடனமாடி வாக்காளர்களை உற்சாகப்படுத்தினார்.நீலிகோணாம் பாளையம், மதுரை வீரன் கோயில் ஆகிய பகுதியில் அருந்ததியின மக்களை சந்தித்து திமுக வேட்பாளர் கார்த்திக் வாக்கு சேகரித்தார். அப்போது, அங்கிருந்த பெண்கள் சிலர் உற்சாக மிகுதியில் நடனமாடினர். அவர்களுடன் இணைந்து கார்த்திக்கும் நடனமாடி ஆதரவு திரட்டினார். 

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது யாரும் வீண் பழி சுமத்தவில்லை - கடம்பூர் ராஜூ

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது யாரும் வீண் பழி சுமத்தவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு விமர்சனங்கள் வந்த காரணத்தினால், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது என்றார். அதிமுகவில் சசிகலாவை இணைப்பது பற்றி முதல்வரும், துணை முதல்வரும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

தருமபுரி பாமக வேட்பாளர் எஸ்பி வெங்கடேஸ்வரம் வீடு வீடாக சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

தருமபுரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் எஸ்பி வெங்கடேஸ்வரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். மதிகோன்பாளையம், சந்தைப்பேட்டை, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு ஆதரவாளர்களுடன் நடந்து சென்ற அவர், அதிமுக தேர்தல் அறிக்கையிலுள்ள சிறப்பம்சங்களை எடுத்துக்கூறி மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜன் மீன் விற்பனை செய்து கொடுத்து வாக்கு சேகரிப்பு

சென்னை மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜன் மீன் விற்பனை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களை நேரடியாக சந்தித்து துண்டுப் பிரச்சுரங்கள் கொடுத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கோபிசெட்டிபாளையம் திமுக வேட்பாளர் மணிமாறன் தீவிர தேர்தல் பிரச்சாரம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மணிமாறன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட நல்லகவுண்டபாளையம், வெள்ளாங்காட்டுப்பாளையம், கல்லூரி பிரிவு, பாலாஜி நகர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார்.

வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் வெற்றியழகன் வீதி வீதியாக நடந்து சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பு

சென்னை வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் வெற்றியழகன், அயனாவரம் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார். திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பின்னர் வீடு வீடாக நடந்து சென்று மக்களை சந்தித்த அவர், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆயிரம்விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலன் ் தீவிர பிரச்சாரம்

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலன் சூளைமேட்டில் பரப்புரை செய்து வாக்குச் சேகரித்தார். சூளைமேட்டில் வீதிவீதியாகச் சென்று பரப்புரை செய்த எழிலன், பொதுமக்களிடமும் வணிகர்களிடமும் துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். தான் வெற்றிபெற்றவுடன் மக்களின் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் என அப்போது உறுதியளித்தார்.

அரவக்குறிச்சி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்திராநகர், வேலன் செட்டியூர், சூரப்பநாயக்கனூர் மற்றும் தெத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பத்து வருடங்களாக காவல்துறையில் பணியாற்றிவிட்டு தேர்தல் களத்திற்கு வந்துள்ளதாக கூறினார். வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால், மத்திய அரசிடம் நேரடியாக திட்டங்களை கேட்டு மக்களின் அடிப்படை பிரச்சினையை தீர்த்து வைப்பேன் என உறுதியளித்து வாக்கு சேகரித்தார்.

திமுக கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து வைகோ பிரசாரம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து வைகோ பிரசாரம் மேற்கொண்டார். பயணியர் விடுதி முன்பு திறந்தவெளி வேனில் நின்றபடி பேசி சீனீவாசனுக்கு வைகோ வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு வீட்டில் வருமான துறை சோதனை நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

குடியாத்தம் தொகுதியில் சலவை தொழிலாளிக்கு துணியை அயன் செய்து கொடுத்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பரிதா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பரிதா, சலவை தொழிலாளிக்கு துணி அயன் செய்து கொடுத்து ஆதரவு திரட்டினார். சட்டையை புரட்டி புரட்டி தேய்து, அழகாக மடித்துக் கொடுத்த அயர்ன் லேடியை சுற்றியிருந்தவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

மாஸ்க் வழங்க முடியாதவர்கள் எப்படி வாஷிங் மெஷின் வழங்குவார்கள் ? மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீபிரியாவை ஆதரித்து ராதிகா சரத்குமார் பிரச்சாரம் 

சென்னை மைலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் ஸ்ரீபிரியாவை ஆதரித்து ராதிகா சரத்குமார் வாக்கு சேகரித்தார். பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள சீனிவாசபுரத்தில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், கொரோனா காலத்தில் முக கவசத்தையே இலவசமாக வழங்க முடியாதவர்கள் எப்படி வாஷிங் மெஷின் போன்ற இலவச பொருட்களை வழங்குவார்கள் என கேள்வி எழுப்பினார்.

வீதிவீதியாக திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட ராதிகா சரத்குமாருக்கு ஒருவர் இடைவிடாமல் குடைபிடித்து சென்றார். பிரச்சாரத்திற்கு ஸ்ரீபிரியா வராததால் அவருடைய உருவப்படத்துடன் மக்கள் நீதி மய்யத்தினர் வாக்குசேகரித்தனர்.

எடப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் சம்பத்குமார் டீக்கடையில் டீ ஆத்திக் கொடுத்து வாக்கு சேகரிப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சம்பத்குமார், டீக்கடையில் டீ ஆத்திக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் சம்பத்குமார், தாவாந்தெரு, உத்தண்டிகாடு, கா.புதூர், ஹவுசிங் போர்டு, நெசவாளர் காலனி, ஜலகண்டாபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னையா தீவிர வாக்குசேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சின்னையா, ஆதரவாளர்கள் புடைசூழ வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தார். மாடம்பாக்கம் பேரூராட்சி சுதர்சன் நகர்,நூத்தஞ்சேரி, ஏ.எல்.எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்ற சின்னையாவுக்கு ஆதரவாக அதிமுக தொண்டர் ஒருவர் இரட்டை இலை சின்னம் வடிவில் சிகை அலங்காரம் செய்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி தீவிர வாக்கு சேகரிப்பு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விளவங்கோடு தொகுதியில் 3வது முறையாக களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி, தொகுதிக்கு உட்பட்ட மேல்புறம் சந்திப்பில் உள்ள கடைகளுக்கு சென்று வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து தொண்டர்களுடன் திறந்த வெளி வாகனத்தில் சென்ற அவர், தொகுதிக்கு செய்துள்ள நலத்திட்டங்களை எடுத்துக்கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கரூர் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர தேர்தல் பிரச்சாரம்

கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கருர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, டபுள் டேங்க், ராஜா நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

சென்னை ஆர்கே நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் பெண்ணின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பு 

சென்னை ஆர்கே நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜே. ஜே. எபினேசர் மேளதாளங்கள் முழங்க வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். கொருக்குப்பேட்டை எழில் நகர், மூப்பனார் நகர், கருமாரி அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளை சந்தித்த , துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு திரட்டியதுடன், மணலி சாலையில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்து, அங்கிருந்தவர்களிடம் உதயசூரியனுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து வீட்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்த பெண் ஒருவர் காலில் விழுந்த ஜே. ஜே. எபினேசர், தன்னை வெற்றிப்பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

அதிமுக மீதான அதிருப்தியால் திமுக கூட்டணி வெற்றி பெறும் - தொல்‍.திருமாவளவன்

தமிழக மக்களை காப்பாற்ற மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவது அவசியம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்‍.திருமாவளவன் தெரிவித்துள்ளார்‍.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட அவர், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் இதனால் இந்த தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனக் கூறினார்

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு திறந்தவெளி ஆட்டோவில் சென்ற படி வாக்கு சேகரிப்பு 

சென்னை ஆயிரம்விளக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு நுங்கம்பாக்கத்தில் திறந்த ஆட்டோவில் வீதிவீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். நுங்கம்பாக்கம், குட்டி தெரு, சிவசண்முகம் தெரு, ஸ்டெர்லிங் சாலை ஆகிய பகுதிகளில் திறந்த ஆட்டோவில் சென்று தாமரைச் சின்னத்தில் வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்டுக்கொண்டார். தான் வெற்றிபெற்றால் தொகுதியில் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை ஆதரித்து கேரள  முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி தேர்தல் பிரச்சாரம்

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு ஆதரவாக கேரள  முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் ராமநாதபுரம் ஓலம்பஸ் பகுதியில் மயூரா ஜெயக்குமாரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.

மக்களே எஜமானர்கள்...நான் உங்கள் வேலைக்காரன் எனக்கூறி  விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக நடிகர் மயில்சாமி வாக்கு சேகரிப்பு

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கும், நடிகர் மயில்சாமி, விசில் அடித்தப்படியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விருகம்பாக்கம், சின்மயா நகர், நடேசன் நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், மக்களே எஜமானர்கள்...நான் உங்கள் வேலைக்காரன் எனக் கூறி விசில் அடித்தபடியே வாக்கு சேகரித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - உதயநிதி ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி கீதா ஜீவன் ஆகிய திமுக வேட்பாளர்களை ஆதரித்து, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த உடன், தங்கள் கட்சியின் தொலைநோக்குத் திட்டங்களான ஸ்டாலினின் 7 உறுதி மொழிகள் நிறைவேற்றப்படும் என உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

இதேபோன்று, ஒட்டப்பிடாரம் திமுக வேட்பாளர் சண்முகம், விளாத்திக்குளம் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் ஆகியோரை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் வாக்கு கோரினார்.

கொத்தவால் சாவடி மார்க்கெட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்கு சேகரித்த துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம்

சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம், கொத்தவால் சாவடி மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினார். அதிமுக மற்றும் பாஜக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி அவர் வாக்கு சேகரித்தார். மார்கெட்டில் உருவாகும் காய்கறி மற்றும் இதர குப்பை கழிவுகளை அகற்றும் பணியிலும் அந்த கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணியிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்தார்.

குறிஞ்சிபாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை ஆதரித்து திமுக எம்.பி.கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, அக்கட்சியின் மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வாக்கு சேகரித்தார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்த அவர், இந்த தேர்தல் தமிழகத்தை மீட்பதற்கான தேர்தல் என்றும் குறிப்பிட்டார். முன்னதாக, புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை.கி.சரவணனை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.

காங்கிரஸ்- மனித நேய மக்கள் கட்சியினர் இடையே வாக்குவாதம் 

சிவகங்கை அருகே இஸ்லாமியர்களிடம் ஆதரவு திரட்ட சென்ற காங்கிரஸ் கட்சியினருக்கும் மனித நேய மக்கள் கட்சியினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாங்குடியை ஆதரித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாக்கு சேகரித்தார்.  இஸ்லாமியர்களின் ஆதரவை திரட்ட மீனாட்சிபுரத்தில் உள்ள லைலா முஸ்தபா அல்ஜிம்மா பள்ளிவாசலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியிலுள்ள மனிதநேய மக்கள் கட்சியினர், கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு உரிய மரியாதை தரவில்லை எனக்கூறி மனித நேய மக்கள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ப.சிதம்பரம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அதிமுக அரசின் சாதனைகளை கூறி ஈரோடு மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் தேர்தல் பிரச்சாரம்

ஈரோடு மேற்கு தொகுதியில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜெகநாதபுரம் காலனி, பாரதிபுரம் சாஸ்திரி ரோடு, சூரம்பட்டி, அண்ணா வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்த அவர் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமினை ஆதரித்து சின்னத்திரை நடிகை தீபா வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பெஞ்சமினுக்கு ஆதரவாக சின்னத்திரை நடிகை தீபா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் பெஞ்சமினுடன் திறந்தவெளி வாகனத்தில் சென்ற நடிகை தீபா,  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வாக்கு சேகரிப்பு

சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம், கொத்தவால் சாவடி மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினார். அதிமுக மற்றும் பாஜக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி அவர் வாக்கு சேகரித்தார். மார்கெட்டில் உருவாகும் காய்கறி மற்றும் இதர குப்பை கழிவுகளை அகற்றும் பணியிலும் அந்த கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணியிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்தார்.

புவனகிரி திமுக வேட்பாளர் துரை.கி.சரவணனை ஆதரித்து திமுக எம்.பி. கனிமொழி கடலூர் மாவட்டத்தில் வாக்குசேகரிப்பு

கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை.கி.சரவணனை ஆதரித்து அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி வாக்கு சேகரித்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதியோர் உதவித் தொகை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், கல்விக்கடன் ரத்து செய்யப்படும், நகை கடன் ரத்து செய்யப்படும், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்பட்டு, தினக்கூலி 300 ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட திமுகவின் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்தார்.

ஓட்டுக்கு ஐயாயிரம், பத்தாயிரம் என மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கும் நிலையில் தான் உள்ளனர் - சரத்குமார்

தமிழகத்தை மாறிமாறி ஆண்ட இரு கட்சிகளும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லை என்றும், வாக்களிக்கப் பணம் வாங்கும் நிலையில் தான் மக்கள் உள்ளனர் என்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து சரத்குமார் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர் நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆன பின்னரும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை எனத் தெரிவித்தார்.

வில்லிவாக்கத்தில் அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகர் வாக்கு சேகரிப்பு

சென்னை வில்லிவாக்கம் அதிமுக வேட்பாளர் ஜேசிடி பிரபாகர் ராஜமங்களம், பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சமூக சேவகர் ரமா காந்தன் இல்லத்துக்கு சென்ற ஜே.சி.டி.பிரபாகர், அவருக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றார்.

பெருந்துறை  அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெருந்துறை தொகுதிக்குட்பட்ட  காஞ்சிகோயில்,பள்ளபாளையம், பாலசுந்தரபுரம், ஊனாங்காட்டு வலசு, அய்யன் வலசு பகுதிகளில் கூட்டணி கட்சியினர் மற்றும் தொண்டர்களுடன் சென்ற அவர் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மக்களிடையே கூறி வாக்கு சேகரித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் காங்., வேட்பாளர் செல்வ பெருந்தகை தேர்தல் பிரச்சாரம் 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்வ பெருந்தகை மாங்காடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினர்களுடன் திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக மாங்காடு பேரூராட்சியில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பணிமனை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிமுக செய்த நலத்திட்ட உதவிகளை எடுத்துக்கூறி திமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பிரச்சாரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன் ராஜா மில் ரோடு, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். குமரன் நகர் பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவர், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் பொள்ளாச்சி நகர் பகுதியில் அனைத்து நலத்திட்ட உதவிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக கூறிய பொள்ளாச்சி ஜெயராமன், இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். 

உத்திரமேரூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், வி. சோமசுந்தரத்தை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரச்சாரம்

நெசவாளர் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய பெருமை அதிமுக ஆட்சியைச் சேரும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன்தெரிவித்துள்ளார்‍. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், வி. சோமசுந்தரத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர்,முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களைப் போல் இரு மடங்கு திட்டங்களை தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தியதாகவும், மகளிர்க்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து பெண்களின்முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதாகவும்  தெரிவித்தார்

தாராபுரம் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து நடிகை காயத்ரி ரகுராம் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சி தலைவர் எல்.முருகனுக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் வாக்கு சேகரித்தார். தாராபுரம் நகர பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தாராபுரம் பகுதி மக்களின் வாழ்வாதரம் உயரவேண்டுமானால் எல்.முருகனை சட்டமன்றத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும் எனக் கூறினார்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கைகளை எடுத்துரைத்து திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் சீனிவாசன் வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆர்.எம் காலனி, அசோக் நகர், வண்டி பாதை, இராமநாதபுரம், மேற்கு மருதாணி குளம் உள்ளிட்ட  பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்தார். மேலும், மக்களுக்கான திட்டங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றையும் சிந்தித்து, தொலைநோக்கு திட்டத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்படுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பேருந்தில் பயணம் செய்து திருத்துறைப்பூண்டி அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் தேர்தல் பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் பேருந்தில் பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட விலக்குடி கடைத்தெருவில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த அவர், அந்த வழியாக வந்த மினி பேருந்தில் ஏறி பயணிகளிடம் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார். 

பணபலம்&அதிகாரத்தை பயனபடுத்தி தேர்தலை சந்திக்க திட்டமா ? - துறைமுகம் திமுக வேட்பாளர் சேகர்பாபு குற்றச்சாட்டு

சில கட்சிகள் பணம் பலம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை சந்திக்க திட்டமிட்டுளதாக திமுகவின் துறைமுகம் தொகுதி வேட்பாளர் பி.கே சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்த தபால் வாக்குகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 20 நாட்களாக பாய் தலைகாணியோடு, ஆர்.எஸ். எஸ் அமைப்பினர் மற்றும் வட மாநிலத்தவர்கள் துறைமுகம் தொகுதியை சுற்றி சூழ்ந்துள்ளதால் தொகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் தாமரை மலரும், தமிழகம் வளரும் - நடிகை நமீதா

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக நடிகை நமீதா வாக்கு சேகரித்தார். ஏ.வி.எம். கார்னர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் நின்று பேசிய அவர், அண்ணாமலை காவல்துறையில் பணியாற்றியதை சுட்டிக்காட்டி, ஒரு சிங்கம் எம்.எல்.ஏ.வாக வந்தால் எப்படி இருக்கும் எனக்கூறி வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் தாமரை மலர்ந்து, தமிழகமும் வளரும் என நடிகை நமீதா நம்பிக்கை தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா தேர்தல் பிரச்சாரம் 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனான திருமகன் ஈ.வெ.ரா, கந்தசாமி வீதி, ஜீவா நகர், ராஜகணபதி நகர், செங்கோட்டையன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். கூட்டணி கட்சியினருடன் மக்களை சந்தித்த அவர், அனைவரையும் கை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

சங்கராபுரத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ராஜா வாக்குசேகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ராஜா, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தெங்கியானதம், கடத்தூர், ஏர்வாய் பட்டினம், வடக்கநந்தல் உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்ற அவர், மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு திரட்டினார்.

தளி தொகுதி பாஜக வேட்பாளர் நாகேஷ் குமார் தேர்தல் பிரச்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நாகேஷ் குமார் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட பைரமங்கலம், காருகொண்டபள்ளி, அக்கொண்டப்பள்ளி, எம்.அக்ரகாரம், குந்துமாரணப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் திறந்தவெளி வாகனத்தில் சென்றும், ஊர்வலமாக நடந்து சென்றும் வாக்கு சேகரித்தார். 

பொள்ளாச்சி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன் மேளதாளங்களுடன் வீடு வீடாக நடந்து சென்று வாக்குசேகரிப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் வரதராஜன், வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். மேளதாளங்கள் முழங்க அழகாபுரி வீதி, ராஜரத்தினம் வீதி, கம்பவுண்டர் வீதி, நேதாஜி ரோடு சேர்மன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட வரதராஜன், இரட்டை இலைக்கு வாக்கு திரட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 2-ம் தேதி  தேர்தல் பிரச்சாரத்திற்காக கன்னியாகுமரி  வர உள்ளதாக  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

பிரதமர் நரேந்திர மோடி வரும் 2-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக கன்னியாகுமரி வர உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்தெரிவித்துள்ளார்‍. இத்தொகுதியின் எம்.பி. எச்‍.வசந்தகுமாரின்மறைவால் இங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,பா.ஜ.க சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன்மீண்டும் போட்டியிடுகிறார்.இதனையொட்டி குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்‍. வாகனத்தில் வீதி வீதியாக சென்றும் அவர் பரப்புரை மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வாக்கு சேகரிக்க சென்ற சபாநாயகர் தனபாலிடம் பெண்கள் கேள்வி

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் சபாநாயகர் தனபாலிடம், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என அப்பகுதி பெண்கள் சிலர் கேள்வி எழுப்பினர். வெங்கமேடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அனைத்து பகுதிகளுக்கும் நீர் கிடைக்க 360 கோடி ரூபாயில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். அப்போது, குறுக்கிட்ட பெண்கள் சிலர் தண்ணீரே வருவதில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தனர். அவர்களை அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் தனியாக அழைத்து சென்று சமாதானப்படுத்தினார்.

குடியாத்தம் அமமுக வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன் ஊதுபத்தி தொழிற்சாலை ஊழியர்களிடம் சென்று வாக்கு சேகரிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் களமிறங்கும் ஜெயந்தி பத்மநாபன், வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். குடியாத்தம் காந்திநகரில் உள்ள ஊதுபத்தி தொழிற்சாலைக்கு சென்ற அவர், அங்கிருந்த தொழிலாளர்களிடம் குக்கர் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் தீவிர தேர்தல் பிரச்சாரம்

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  தண்டையார்பேட்டை நேதாஜி நகர், வினோபா நகர், கருணாநிதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேள தாளங்கள் முழங்க கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வீதி வீதியாக நடந்து சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாகச் சென்று மக்களிடையே வாக்கு சேகரிப்பு

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் களம் காணும் திமுக வேட்பாளர் முத்துசாமி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். தொட்டாம்பட்டி, தெற்குபள்ளம், சடையம்பாளையம், கங்காபுரம், கொங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்த அவர் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். மேலும் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்த அவர் திமுக ஆட்சிக்கு பின் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். 

பிரச்சாரக் கூட்டத்திற்குள் அரிவாளுடன் புகுந்து தாக்குதல் நடத்திய நபர்?

சென்னை பெரம்பூரில் அதிமுகவின் பிரச்சாரக் கூட்டத்திற்குள் அரிவாளுடன் புகுந்து தாக்குதல் நடத்திய நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், வியாசர்பாடி உதயசூரியன் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நபர் ஒருவர் அரிவாளுடன் கூட்டத்திற்குள் புகுந்து என்.ஆர். தனபாலன் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற அதிமுக நிர்வாகி சிவக்குமாருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள், தாக்குதல் நடத்திய நபரை பிடித்து எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர், எம்ஜிஆர் வேடமணிந்து வந்த நபருடன் சென்று வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வண்டலூர், மண்ணிவாக்கம், ஓட்டேரி, மாணிக்கம் சாலை, ஜலகண்டர் சாலை உள்ளிட்ட இடங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் பேரணியாக சென்ற அவர், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கோரினார். அப்போது, அதிமுக வேட்பாளர் கஜேந்திரனுடன் எம்ஜிஆர் வேடமணிந்து வந்த நபர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.

கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பதால் பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் பிரச்சாரம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்‍. கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை என முடிவுகள் வெளியான நிலையில், இன்று அவர் புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்‍. சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளோடு, வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்து மக்களிடம் பிரேமலதா விஜயகாந்த் வாக்குச் சேகரித்தார்

மளிகை கடையில் பொட்டலம் போட்டுக் கொடுத்து மநீம வேட்பாளர் பொன்னுசாமி தேர்தல் பிரச்சாரம்

சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பொன்னுசாமி, மளிகை கடையில் பொட்டலம் போட்டு வாக்கு சேகரித்தார். ஏற்கனவே மளிகை கடை வைத்து நடத்தியவர் என்பதால் பேப்பர் பொட்டலம் போட்டு, ஆதரவு திரட்டினார்.
பின்னர் வாழை இலை கடைக்கு சென்று இலையை நறுக்கிய போது, பொன்னுசாமி தனது கையை நறுக்கிக் கொண்டதால், வாழை இலை வியாபாரிக்கு சங்கடமானது. காயம்பட்ட வேட்பாளரின் கையில் விபூதியை வைத்து துணியால் வியாபாரி கட்டுப்போட்டு விட்டார்.

கலசப்பாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் விவசாயி மகன் என்று கூறி பசு மாட்டில் பால் கறந்து வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு விவசாயி ஒருவரது மாட்டில் பால் கறந்து கொடுத்து ஆதரவு திரட்டினார். தான் விவசாயி மகன் என்று கூறி பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

பூந்தமல்லி பாமக வேட்பாளர் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதியில் அதிமுகவுடனான கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் ராஜமன்னார் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரித்தார். நசரத்பேட்டை,வரதராஜபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் சென்ற அவர், மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

அரக்கோணம் வி.சி.க வேட்பாளர் கௌதம சன்னா தாரை தப்பட்டை முழங்க கலைக்குழு மூலம் தீவிர வாக்கு சேகரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கௌதம சன்னா கலைக்குழு மூலம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அரக்கோணம் நகர்புறத்தில் தாரை தப்பட்டை முழங்க பிரசார பாடல்களை பாடிய கலைக்குழுவினர் மூலம் கௌதம சன்னா வாக்கு சேகரித்தார்.

 

செய்யூர் தொகுதி வி.சி.க வேட்பாளர் வயல்வெளியில் வேலை செய்த விவசாயிகளிடம் தேர்தல் பிரச்சாரம்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபு, திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளிடம், பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஜோலார்பேட்டை அதிமுக வேட்பாளர் கே.சி. வீரமணி திறந்தவெளி வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே.சி வீரமணி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சின்னவேப்பம்பட்டு, செட்டியப்பணுர், நெக்குந்தி, மண்டல வாடி, பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடியே சென்று வாக்கு சேகரித்தார்.

 "அப்பா விட்டு சென்ற பணிகளை தொடர வாய்ப்பு தாருங்கள்" : விஜய்வசந்த் தேர்தல் பிரச்சாரம்

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மறைந்த எம்.பி. வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த், திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அப்பா விட்டு சென்ற பணிகளை தொடர தனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்டுக்கொண்டார்.

பணப்பட்டுவாடாவை தட்டிக்கேட்ட தங்களை தாக்கியதாக திமுகவினர் புகார்

ஆர்கே நகர் அதிமுக வேட்பாளர் பணப்பட்டுவாடா செய்ததாகவும், அதை தட்டிக் கேட்ட தங்களை தங்களை தாக்கியதாகவும் அளித்த புகாரில், நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, திமுகவினர் 50 க்கும் மேற்பட்டோர் ஆர்கே நகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தங்களது புகாரின் அடிப்படையில் ஆர்கே நகர் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜஷை கைது செய்ய வேண்டும் என முற்றுகை போராட்டம் நடத்திய திமுகவினர் வலியுறுத்தினர்.

தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகித்து பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மகேஷ் குமார், வீதி, வீதியாக சென்று, ஆதரவு திரட்டினார். ஏனாத்தூர்,கட்டவாக்கம், செட்டியார் பேட்டை, அண்ணா நகர்,சிருவாக்கம் உள்ளிட 25 க்கும் மேற்பட்ட பகுதிகளில் பாமக வேட்பாளர், ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை, வீடு, வீடாக விநியோகித்து, ஆதரவு திரட்டினார்.

ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அடிகுழாயில் தண்ணீர் அடித்துக்கொடுத்து வாக்கு சேகரிப்பு

சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐடிரீம்ஸ் மூர்த்தி, அடிகுழாயில் தண்ணீர் அடித்துக்கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை எதிர்த்து களமிறங்கியிருக்கும் திமுக வேட்பாளர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி, பனைமரம் தொட்டி, வடக்கு மாதா ஸ்கொயர் சந்து, கிழக்கு மாதா கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளி வாகனத்திலும், பின்னர் நடந்து சென்றும் வாக்கு சேகரித்தார்.

திருத்தணி தொகுதி திமுக வேட்பாளர் நெசவாளர்களிடம் குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரிப்பு 

திருத்தணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரன் வீதி வீதியாக நடந்து சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொதட்டூர்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் தொண்டர்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், நெசவாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதைத்தொடந்து, திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

கடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்ட குழுவினருடன் சென்று வாக்கு சேகரிப்பு

கடலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.சி.சம்பத் நகரப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுப்பாளையம், வன்னியர்பாளையம்,வண்ணார பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் ஆதரவு திரட்டினார். அப்போது, இளைஞர்கள் சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களை கவரும் வகையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருத்தணி தொகுதி தேமுதிக வேட்பாளர் இஸ்லாமியர்கள் அணிவித்த தொப்பியுடன் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் கிருஷ்ணமூர்த்தி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருத்தணி ஒன்றியம் மூஸ்லீம் நகரில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர் கிருஷ்ணமூர்த்திக்கு, இஸ்லாமியர்கள் தொப்பி அணிவித்தனர். இதையடுத்து தொப்பியுடன் வீடு வீடாக நடந்து சென்று கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரித்தார்.

வைகோவின் மகன் துரை வையாபுரி மல்லை சத்யாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் மல்லை சத்யாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மல்லை சத்யாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

கோவை அதிமுக வேட்பாளர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரசாரம்

கோவை கவுண்டம்பாளையத்தில்அதிமுக சார்பில் போட்டியிடும் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்‍. துடியலூர், ஜி.என்.மில்ஸ், வி.சி.எஸ்.நகர், அப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து அவர் ஆதரவு திரட்டினார்‍. சிறுவர்களுடன்செல்பி எடுத்தும்,அதிமுகவின் சாதனைகளைக் கூறியும் அவர் இரட்டை இலைச் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளரை ஆதரித்து நடிகை ராதிகா தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் போட்டியிடும், ஐ.ஜே.கே வேட்பாளர் முகம்மது இத்ரீசை ஆதரித்து, சமத்துவ மக்கள் கட்சியின் மகளிரணிச் செயலாளரும், நடிகையுமான ராதிகா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி ஹைரோடு உள்ளிட்ட இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் சென்று பரப்புரை மேற்கொண்ட ராதிகா, தங்கள் கூட்டணி, ஊழலுக்கு எதிரான கூட்டணி எனக் கூறினார். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், நடிகை ராதிகா தெரிவித்தார்.

எம்ஜிஆர் மற்றும் விவசாயி போல் வேடமணிந்து மாதவரம் தொகுதி வேட்பாளருக்கு அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

சென்னை மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மாதவரம் மூர்த்தி, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்‍.பொன்னியம்மன் மேடு,தணிகாச்சலம் நகர், சாரதி நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்றும், வீதி வீதியாகச் சென்றும் அவர் பரப்புரை மேற்கொண்டார் . முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் விவசாயியைப் போல் வேடமணிந்து, மாதவரம் மூர்த்திக்கு அதிமுகவினர் ஆதரவு திரட்டினார்‍

 

கேவி குப்பத்தில் புரட்சி பாரதம் கட்சித்தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி வாக்கு சேகரிப்பு

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புரட்சிபாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தீவீர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கே வி குப்பம் தொகுதிக்குட்பட்ட பாண்டியன் நகர், காளியம்மன் பட்டி, சாமியார் மலை உள்ளிட்ட நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்திலும், பின்னர் வீடு வீடாக நடந்து சென்றும் துண்டுப்பிரசுரங்களை வழங்கி அவர் வாக்கு சேகரித்தார்.

சமத்துவபுரங்களை சீரமைக்க பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கப்படும் - ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர்

 தமிழகத்தில் சமத்துவபுரங்களை சீரமைக்க திமுக ஆட்சி அமைந்தவுடன், முதல் பட்ஜெட்டிலேயே, தனியாக நிதி ஒதுக்கப்படும் என ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர், செம்பட்டி அருகே உள்ள சமத்துவபுரத்தில் வாக்காளர்களை சந்தித்து பேசிய போது இதனை தெரிவித்தார். தமிழகத்தில் 150 சமத்துவபுரங்களில் 15 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருவதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா தீவிர வாக்கு சேகரிப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜா இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சங்கரன்கோவில் விஐபி நகரில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், தொடர்ந்து அங்குள்ள பங்கில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டும் விதமாக இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி வாக்கு சேகரித்தார்.

இதனைத்தொடர்ந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று ஆதரவு திரட்டிய அவர், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி மையத்திற்கு சென்று மாணவ மாணவிகளிடம் வாக்கு சேகரித்தார்.

ஒகேனக்கல் உபரிநீரை ஏரிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை - அன்புமணி இராமதாஸ்

தருமபுரி மாவட்டத்தில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பாமக இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர்.அன்புமணி இராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி, தருமபுரி பாமக வேட்பாளர் வெங்கடேஸ்வரன், பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.அன்பழகன், பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக தலைவர் ஜி.கே.மணியை ஆதரித்து, வாக்கு கோரினார்.

தேர்தல் பரப்புரை கூட்டங்களுக்கு வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கொரோனா பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால், அதனை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

 வந்தவாசி தொகுதி பாமக வேட்பாளர் 13 மொழிகளில் பேசி வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் முரளி சங்கர், பல மொழிகளில் பேசி, தமக்கு ஆதரவு திரட்டினார். படூர், சத்தியவாடி, மாவளவாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது படூர் கிராமத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களிடம் 13 மொழிகளில் தமக்கு பேச தெரியும் என்று கூறியதோடு, 13 மொழிகள் பேசி காண்பித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கோரினார்.

காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் தெலுங்கு மொழி பேசுவோர் அதிகமுள்ள பகுதியில் தெலுங்கில் பரப்புரை

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் ராமு, தண்டல கிருஷ்ணாபுரம், சேனூர், கரசமங்கலம், மகிமண்டலம், அம்மோர்பள்ளி, முத்தரசி குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வீரபத்திரபுரம், சிங்கார ரெட்டியூர் பகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் உள்ளதால், அங்கு தெலுங்கு மொழியில், அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி பேசி வாக்கு சேகரித்தார்.

இதேபோன்று, மெட்டுக்குளம் பகுதியிலும் தெலுங்கில் பேசி, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு, காட்பாடி அதிமுக வேட்பாளர் ராமு பரப்புரை மேற்கொண்டார்.

கம்பம் தொகுதி சுற்று வட்டாரப் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ் பாத்திமா தீவிர வாக்குச் சேகரிப்பு 

தேனி மாவட்டம் கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ் பாத்திமா சின்னமனூர் வாரச் சந்தை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சின்னமனூர் தேரடி பகுதி, பள்ளிவாசல் சாலை, பஞ்சாயத்து யூனியன் ஆபிஸ் தெரு, அரசு மருத்துவமனை வீதி உள்ளிட்ட பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்குச் சேகரித்தார்.

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவன் வாக்குச் சேகரிப்பு

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கீதா ஜீவன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். லூர்தம்மாள் புரம், முருகன் தியேட்டர், சென்மேரிஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்ற அவர், அரசின் திட்டங்கள் மீன மக்களுக்கு சென்று சேர பாடுபடுவதாக உறுதி அளித்தார்.

ஆவடி தொகுதி தேமுதிக வேட்பாளர் சங்கரை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சங்கரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வாக்குச் சேகரித்தார். ஆவடி எம்ஜிஆர் திடலுக்கு வந்த அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கைகளை காட்டி ஆதரவு திரட்டினார்.

கேரள செல்லும் சாக்குலுத்து மெட்டு சாலை 100% சீரமைப்பு  

கேரள செல்லும் சாக்குலுத்து மெட்டு சாலை சீரமைப்பு உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை வழங்கி கம்பம் அதிமுக வேட்பாளர் சையது கான் வாக்கு சேகரித்தார். தேவாரம் அருகே உள்ள டீ மீனாட்சிபுரம், டீ மேட்டுப்பட்டி, ரெங்கநாதபுரம், சொக்கலிங்கபுரம், தம்பி நாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி ,சிண்டலச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் வாக்குச் சேகரிப்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கபாண்டியன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் அதற்கு உறுதுணையாக தம்மை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பின்னர் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லை எனப் புகார் தெரிவித்தார்.

கலைஞர் பிறந்த நாளன்று பொது மக்களுக்கு ரூ.4,000 கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என கம்பம் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் வாக்குறுதி 

கலைஞர் பிறந்த நாளன்று பொது மக்களுக்கு கொரோனா நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்குவது, கல்விக் கடன் ரத்து, விவசாய கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி தேனி மாவட்டம் கம்பம் தொகுதி திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார். சின்னமனூர் கண்ணாடி கடை தெரு, முத்தாலம்மன் கோவில் நகர், ஓடைப்பட்டி சாலை, சின்னமனூர் அரசு மருத்துவமனை, மார்க்கையன்கோட்டை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

சானிடைசர், முகக் கவசம் வழங்கி பெரம்பூர் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் தீவிர வாக்குச் சேகரிப்பு  

பொதுமக்களுக்கு சானிடைசர் மற்றும் முக கவசம் வழங்கி சென்னை அடுத்த பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் நூதன பிரச்சாரம் செய்தார். வியாசர்பாடி, பி.வி. காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக பி.வி.காலனி பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கலைஞரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் எழிலசரன் டிராக்டரில் சென்று வாக்குச் சேகரிப்பு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எழிலசரன் டிராக்டரில் சென்று வாக்குச் சேகரித்தார். வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம், புதுப்பாக்கம், வேளியூர், ஊவேரி, படுநெல்லி உள்ளிட்ட கிராமங்களில் கூட்டணி கட்சியினருடன் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது புள்ளலூர் கிராமத்தில் டிராக்டர் ஓட்டி சென்று அவர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக மாற்றி சம்பள உயர்வு வழங்கப்படும் - மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் சதர்சனம் தீவிர பிரச்சாரம்

100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றுவது, சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், கொசஸ்தலை ஆற்றில் பாலம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் சுதர்சனம் பிரச்சாரம் செய்தார். ஆத்தூர், புதூர், புதிய எருமை வெட்டி பாளையம் பழைய எருமை வெட்டி பாளையம் ஆகிய பகுதிகளில் பெண்கள் அவரை வரவேற்றனர். 

1000 கிலோ ஆப்பிள் மாலையை வழங்கி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

சென்னை பல்லாவரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் திறந்த வாகனத்தில் சென்றபடி குரோம்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக நிர்வாகிகள் அவருக்கு ஆயிரம் கிலோ எடையிலான ராட்சத ஆப்பிள் மாலையை கிரேன் மூலம் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வாக்கு கேட்டு வந்த வேட்பாளருக்கு முத்தம் கொடுத்து ஆதரவு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளருக்கு பெண்கள் முத்தம் கொடுத்து ஆதரவு அளித்து உள்ளனர். தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கயல்விழி கோவிந்தாபுரம், சத்திரம், கொட்டாமுத்தாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பொன்னாடை அணிவித்தும் ஆதரவு அளித்தனர்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு தேர்தல் பரப்புரை

தென்காசியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடாரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு பிரச்சாரம் மேற்கொண்டார். நகர் பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றார்.

குன்னூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கப்பச்சி வினோத் நடனமாடி வாக்குச் சேகரிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கப்பச்சி வினோத் நடனமாடி வாக்குச் சேகரித்தார். கோத்தகிரி பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், சுள்ளிகூடு கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் படுகர் இன மக்களோடு ஊர்வலமாக சென்று, அவர்களோடு பாரம்பரிய நடனம் ஆடி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் பட்டா வழங்கப்படும் - திருவொற்றியூர் திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் பிரச்சாரம்

திமுக ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் பூங்காவனபுர மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று கூறி திருவொற்றியூர் திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் வாக்கு சேகரித்தார். திருவள்ளூர் அடுத்த திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட கிராம தெரு, காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பூங்காவனபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக கே.பி.சங்கருக்கு மேள தாளங்கள் முழங்க பொன்னாடை அணிவித்து ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

வாக்காளர்களுக்கு தேவையானது இலவச பொருட்கள் அல்ல; கவுரவம் - சாத்தூரில் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவிபச்சமுத்து பரப்புரை

வாக்காளர்களுக்கு தேவையானது இலவச பொருட்கள் அல்ல கௌரவம் என்றும் அந்த கௌரவத்தை இந்திய ஜனநாயக கட்சி அளிக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்தார். சாத்தூர் பகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் பாரதியை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.

அதிமுக வேட்பாளர் ரவிசந்திரன் பிரச்சாரக் கூட்டத்தில் சலசலப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர்.கே. ரவிசந்திரன் பிரச்சாரக் கூட்டத்தில் அமமுக வேட்பாளரை ஆதரித்து வாழ்த்து முழக்கங்களை எழுப்பியதால் இருதரப்புக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. நேற்று இரவு துலுக்கன்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. ரவிசந்திரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு தரப்பினர் அமமுக வேட்பாளர் ராஜவர்மன் வாழ்க எனக் கூறி கோஷமிட்டனர். இதனால் இருதரப்பும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிபட்டியில், அதிமுக வேட்பாளர் லோகிராஜன் தீவிர தேர்தல் பிரச்சாரம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், அதிமுக சார்பில் போட்டியிடும் லோகிராஜன் திறந்த வாகனத்தில் சென்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆண்டிபட்டியில் வெற்றி பெற்றதை போல் தம்மையும் வெற்றி பெற வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். தான் வெற்றி பெற்றால், எம்.ஜி.ஆரின் கனவுத்திட்டமான திப்பரவு அணைத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படும் என்றார்.

பர்கூர் தொகுதி அமமுக வேட்பாளர் கணேச குமாரை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் கணேச குமாரை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா முன்பு போட்டியிட்ட பர்கூர் தொகுதியில், அமமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

ராசிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மதிவேந்தன் தீவிர வாக்குச் சேகரிப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மதிவேந்தன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மெட்டாலா, ஆயில்பட்டி, மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் திமுக தேர்தல் வாக்குறுதிகளைக் கூறி அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மாவட்டந்தோறும் பெண்கள் பாதுகாப்பிற்காக தனி நீதிமன்றம் - பண்ருட்டியில், திமுக எம்.பி கனிமொழி வாக்கு சேகரிப்பு

பண்ருட்டியில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை ஆதரித்து கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழக வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்கள் எடுத்துக்கொள்வதாகவும், வங்கிகளில் ஹிந்தி பேசுபவர்கள் தான் வேலையில் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மாவட்டந்தோறும் பெண்கள் பாதுகாப்பிற்காக தனி நீதிமன்றம் உருவாக்கப்படும் என்றார்.

குமாரபாளையம் தொகுதியில் அமைச்சர் தங்கமணி வீடு வீடாக சென்று வாக்குச் சேகரிப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் மின்துறை அமைச்சர் தங்கமணி வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார். பள்ளிபாளையம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட சின்ன வீதி, மசூதி வீதி, தோல் மண்டி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் சென்ற அவர், அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வாக்காளர்களிடம் கூறி பிரச்சாரம் செய்தார்.

ராசிபுரம் பகுதியில் அமைச்சர் சரோஜா தீவிர வாக்குச் சேகரிப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் சரோஜா தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மூலகுறிச்சி, ஊடந்தாங்கள் உள்ளிட்ட இடங்களில் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அமைச்சர் சரோஜா, விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளதாகக் கூறினார். மேலும் அதிமுக அரசு மீண்டும் அமைந்ததும் தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments