' ஒரு மாசத்துக்கு பத்து பாத்திரம் தேய்க்க வரமாட்டேன்!'- வீட்டு உரிமையாளர்களிடத்தில் லீவு எடுத்து விட்டு பிரசாரத்தில் தூள் கிளப்பும் எம்.எல்.ஏ வேட்பாளர்

0 44439
கலீதா மாஜ்கி

ஒரு மாதத்துக்கு பத்து பாத்திரம் தேய்க்க வரமாட்டேன் என்று விடுப்பு எடுத்து விட்டு மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் கலீதா மாஜ்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ளது. நீயா... நானா என்கிற ரீதியில் பாரதிய ஜனதாவும் திரிணாமுல் காங்கிரசும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. கடந்த 2010 ஆண்டு பொது தேர்தலில் 42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டது. இதனால், பாரதிய ஜனதா கட்சி மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தாவோ... விடுவேனா என்று பதிலுக்கு ஆக்ரோசம் காட்டிக் கொண்டிருக்கிறார். மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் படோபடம் நிறைந்த வேட்பாளர்களுக்கு மத்தியில் எளிய வீட்டு பணிப் பெண் ஒருவரும் போட்டியிடுகிறார் என்பது விசேஷமாக பார்க்கப்படுகிறது.

வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து பிழைப்பு நடத்தி வரும் கலிதா மாஜ்கி என்ற பெண்ணுக்கு பாரதிய ஜனதா கட்சி போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. இவர், ஆஷ்க்ரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அஷ்க்ரம் தொகுதிக்குட்பட்ட மஜ்பரா என்ற பகுதியில் இவர், வசித்து வருகிறார். தற்போது 32 வயதான கலீதாவின் கணவர் சுப்ரதா மாஜ்கி பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறான். கணவரின் வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லாததால், அந்த பகுதியிலுள்ள சில வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். இதனால், மாதம் 2,500 வருமானம் அவருக்கு கிடைத்துள்ளது.

பள்ளி படிப்பை முடிக்கவில்லை என்றாலும் அரசியல் அறிவில் கலிதா நிகரற்றவர். மேற்கு வங்கத்தின் அரசியல் நகர்வுகள் கலிதாவுக்கு அத்துப்படி. கடந்த 5 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். இதனால், இந்த முறை பாரதிய ஜனதா கட்சிய கலிதாவை எம்.எல்.ஏ வேட்பாளராக அறிவித்துள்ளது. பிரதமர் மோடியும் தனிப்பட்ட முறையில் கலீதாவை பாராட்டினார். 'பாரதிய ஜனதா கட்சி திறமையையும் உழைப்பையும் அங்கீகரிக்க தவறியதில்லை 'என்று கலீதா குறித்து மோடி குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்ததையடுத்து மளமளவென பிரசாரத்தில் இறங்கி விட்டார் கலீதா. முன்னதாக, தான் வீட்டு வேலை பார்த்து வந்த உரிமையாளர்களிடத்தில் சென்று , தனக்கு ஒரு மாதம் விடுப்பு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஷ்க்ரம் தொகுதியில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வசமுள்ளது. இவரை எதிர்த்து சிட்டிங் எம்.எல்.ஏ அபிதானந்தா தாண்டர் போட்டியிடுகிறார். இதனால், கலீதாவுக்கு பலத்த போட்டி இருக்கிறது. எனினும், கலீதாவின் அணுகுமுறையும் எளிமையான தோற்றமும் அவருக்கு ப்ளஸ் பாயிண்டாக இருப்பதாக சொல்கிறார்கள். மேற்கு வங்கத்தில் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அஷ்க்ரம் தொகுதியில் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments