சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது அதிமுக மட்டும்தான் - முதலமைச்சர்

சட்டசபைத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக, தி.மு.க. அவதூறு கருத்துகளை பரப்புவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், விவசாய பணிகளுக்கு அதிமுக அரசு ஏராளமான நன்மைகளைச் செய்துவருவதாகக் குறிப்பிட்டார். விவசாயத்தைப் பாதுகாக்கும் வகையில் செயல்பட்ட நீர்மேலாண்மைத் திட்டத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது அதிமுக மட்டும்தான் என்று கூறிய முதலமைச்சர், ஹஜ் பயணம் செல்ல 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதையும், சென்னையில் ஹஜ் பயணிகளுக்கு தங்குவதற்கு 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டப்படுவதையும் குறிப்பிட்டுப் பேசினார். சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக, தி.மு.க. அவதூறு கருத்துகளை பரப்புவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று குறிப்பிட்டார். திட்டங்களுக்கு அனுமதி, நிதியை மத்திய அரசு வழங்குவதால் அதனுடன் சுமூகமான உறவு வைத்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 77 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டதாகத் தெரிவித்த முதலமைச்சர், அதில் 5 லட்சத்து 25 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
Comments