Zoho -வில் செக்யூரிட்டியாக சேர்ந்து ஓஹோனு மாறிய சாப்ட்வேர் இன்ஜினியர்... திறமைக்கே முதலிடம் என கூறும் ஊழியர்

0 1469

திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும் வாழக்கையில் முன்னேறிவிடலாம் என்பதற்கு உதாரணமாக ZOHO வில் பணிபுரிந்த செக்யூரிட்டி ஒருவர் அதே நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக மாறிய கதை, கேட்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியப் பன்னாட்டு நிறுவனமான சோஹோ, சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு, டோனி தாமஸ் என்பவருடன் இணைந்து 1996 ஆம் ஆண்டு , மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான சோஹோவை தொடங்கினர். தற்போது அமரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உட்பட 7 நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகில் இருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்குச் சவால் விடும் அளவிற்கு சோஹோ வளர்ச்சி அடைந்துள்ளது.

சோஹோ நிறுவனத்தில் திறமை உள்ளவர்களுக்கு எப்போதுமே வாய்ப்பிருக்கும் என்று அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

அதை நிரூபிக்கும் வகையில், சோஹோவில் செக்யூரிட்டியாக பணியாற்றிய நபர் ஒருவர் அங்கு மென்பொருள் பொறியாளராக மாறிய கதை தற்போது இணையத்தில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

2013 ஆம் ஆண்டில், வெறும் 1000 ரூபாய் பணத்துடன் வேலை தேடி வீட்டை விட்டு வெளியேறினார் அப்துல் அலிம் . 10 ஆம் வகுப்பு வரை படித்த அவருக்கு, சோஹோவில் செக்யூரிட்டி வேலை கிடைத்தது. அப்போது அங்கு வேலை செய்த வந்த ஷிபு அலெக்சிஸ் என்ற ஊழியர் , அப்துலிடம் நட்பாகப் பழகி வந்துள்ளார். ஷிபுவிற்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, திடீரென ஒரு நாள் அப்துலிடம் அவர் படிப்பைக் குறித்து விசாரித்துள்ளார். அப்துல் தனக்குக் கணினி பற்றி அதிகம் தெரியாது என்றும், பள்ளியில் HTML கொஞ்சம் படித்ததாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்ட ஷிபு, மேலும் கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தால் தன்னை வந்து சந்திக்கும்படி கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

அதை கேட்டதும் , அப்துல் அலிமிற்கும் மென்பொருள் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை வந்தது. இதனைத் தொடர்ந்து, தினமும் தனது 12 மணி நேர செக்யூரிட்டி பணியை முடித்துவிட்டு, ஷிபுவிடம் கோடிங் கற்று வந்துள்ளார் அப்துல். நாள் அடைவில் கோடிங்கில் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. 8 மாதங்கள் கழித்து சொந்தமாக ஆப் ஒன்றை உருவாக்கினார் அப்துல். அப்துலின் திறமையைக் கண்டு ஆச்சரியமடைந்த ஷிபு, சோஹோவில் திறமைக்கே முதலிடம் என்றும், கல்லூரி பட்டம் தேவையில்லை என்றும் கூறி அப்துல் உருவாக்கிய ஆப்பை தனது மேனேஜரிடம் காண்பித்தார். அப்துலின் ஆர்வத்தைக் கண்டு வியந்த ஷிபுவின் மேனேஜர் அப்துலை ஒரு நேர்காணலுக்கு அழைத்தார். அதில் சிறப்பாக அப்துல் பதில் அளித்ததால் சோஹோவில் கோடராக ஆக பணியில் அமர்த்தப்பட்டார். 8 வருடங்கள் கழித்து தனது வெற்றி பயணத்தைப் பற்றிய கதையை linkedin பக்கத்தில் தற்போது பதிவேற்றம் செய்துள்ளார் அப்துல்.

இதனைத் தொடர்ந்து அப்துல் அலிமிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments