ஆதரிக்க யாருமில்லை..! உணவின்றி தவித்ததால் தற்கொலை..!

0 9770
உணவின்றி தவித்த வயதான தம்பதியினர் தற்கொலை..!

சிறுவயதிலேயே 3 பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டு, ஆதரவு அளித்தவரும் உயிரிழக்க தங்களை கவனிக்க யாரும் இல்லாத காரணத்தினால், வறுமையின் பிடியில் சிக்கிய வயதான தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்ட பரிதாபம் ஈரோடு அருகே நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் திருநகர் காலனியை சேர்ந்தவர் கிஷ்ணராஜ். 74 வயதான கிருஷ்ணராஜ்க்கு 71 வயதில் ரத்தினம் என்ற மனைவி இருந்துள்ளார்.

இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர்கள் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

தங்களது 3 குழந்தைகளையும் இழந்த கிஷ்ணராஜ் - ரத்தினம் தம்பதியினர் ஜெகதீஷ் என்பவருக்கு சொந்தமான தறி குடோனில் வேலை பார்த்து வாழ்ந்து வந்துள்ளனர்.

கடந்த மாதம் ஜெகதீஷ் திடீரென இறந்து விடவே அவரது தறி குடோன் செயல்படாமல் போனது. இதனால் கிருஷ்ணராஜுக்கு வேலைப்பறிபோனது.

வயதான தனக்கு வேறெங்கும் வேலை கிடைக்காததால் கிஷ்ணராஜ் மற்றும் ரத்தினம் தம்பதியினர் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்ததாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, வேலையில்லாத சூழலில் உணவு இன்றியும் இருவரும் தவித்து வந்துள்ளனர். ஆதரிக்க பிள்ளைகளும், உறவினர்களும் இல்லாத சூழலில் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு தம்பதியினர் வந்துள்ளனர்.

தம்பதியினர் வாழ்ந்து வந்த வீட்டின் கதவு காலை 9 மணி வரை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த சத்தியமங்கலம் போலீசார் கதவை திறந்து பார்த்ததில் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருவரது உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆதரிக்க உறவுகளின்றி வறுமையின் பிடியில் சிக்கிய வயதான தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments