விக்கிரவாண்டி : 20 வயதுக்குள் 2 கொலைகள்... தகாத உறவால் தடம் மாறிய கல்லூரி மாணவர்!

0 106168
சுஜிதா மேரி, கொல்லப்பட்ட லியோபால்( உள்படத்தில் ராதாகிருஷ்ணன் )

விழுப்புரம் அருகே தகாத உறவு காரணமாக கணவரை கொலை செய்த மனைவி மற்றும் அவரின் ஆண் நண்பர் கேரளாவில் பிடிபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் காலனியை சேர்ந்தவர் லியோபால் வேன் டிரைவராக இவர் வேலை பார்த்து வந்துள்ளார். லியோபாலுக்கு சுஜித்தாமேரி என்ற மனைவியும் மகன் , மகள் உள்ளனர். லியோபால், சுஜித்தா மேரி காதல் திருமணம் செய்தவர்கள். அளவான குடும்பம் , அன்பான வாழ்க்கை என்று போய் கொண்டிருந்தது. சென்னையில் வசித்து வந்த லியோபாலுக்கு கொரோனா காரணமாக வேலை போனது. இதனால், இந்த தம்பதி சொந்த ஊருக்கே சென்று குழந்தைகளுடன் வசிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், லியோபால் வாழ்க்கையில் பக்கத்து வீட்டு இளைஞர் ராதாகிருஷ்ணனால் புயல் வீச தொடங்கியது.

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதும் லியோபால் சென்னை வந்து மீண்டும் கார் ஓட்ட தொடங்கியுள்ளார். மனைவி சுஜித்தா மேரி சொந்த ஊரில் வசித்துள்ளார். அப்போது, பி.காம் இரண்டாமாண்டு படித்து வரும் ராதாகிருஷ்ணனுக்கும் லியோ பாலின் மனைவி சுஜித்தாமேரிக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. லியோபால் இதை தெரிந்து கொண்டு மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும், சுஜித்ராமேரி ராதாகிருஷ்ணனுடனான தொடர்பை கைவிடவில்லை. இதனால், சொந்த ஊருக்கே திரும்பி மனைவியுடன் லியோபால் வசிக்க தொடங்கினார். இதனால், சுஜித்தா மேரியும் ராதாகிருஷ்ணனும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தங்கள் உறவுக்கு தடையாக இருக்கும் லியோபாலை கொலை செய்யவும் இருவரும் திட்டமிட்டனர்.

இந்த நிலையில், மது போதையில் வீட்டுக்கு வந்து உறங்கிக் கொண்டிருந்த லியோபாலை ராதாகிருஷ்ணன் இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டு தோட்டத்துக்குள் குழி தோண்டி லியோபாலின் உடலை இருவரும் சேர்ந்து புதைத்து விட்டனர். பின்னர், சென்னையில் வசித்து வரும் தன் மாமனார் சகாயராஜை தொடர்பு கொண்டு, கணவர் லியோபாலை பல நாள்களாக காணவில்லை என்று கூறி சுஜித்தா மேரி நாடகமாடியுள்ளார். இதையடுத்து, சகாயராஜ் போலீஸில் புகார் கொடுக்கலாம் என்று மருமகளிடத்தில் கூறியுள்ளார். தொடர்ந்து, சென்னையிலிருந்து விக்கிரவாண்டியிலுள்ள மருமகள் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால், வீட்டில் சுஜித்ராமேரி இல்லை. குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளன. குழந்தைகளிடத்தில் விசாரித்த போது, 'அம்மாவை காணவில்லை ' என்று அப்பாவியாக கூறின.

வீட்டு தோட்டத்தில் புதியதாக அரையும் குறையுமாக பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை பார்த்த சகாயராஜ், இது குறித்து போலீசில் புகார் அளித்தார். பள்ளத்தை தோண்டி பார்த்த போது, உள்ளே லியோபாலின் சடலம் இருந்தது. விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமைறைவான ராதாகிருஷ்ணன் , சுஜித்தாமேரியை தேடி வந்தனர். இந்த நிலையில், கேரளாவில் ராதாகிருஷ்ணன் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தில் ,'ஏற்கனவே ஒரு கொலை செய்துள்ளேன். அதே பாணியில் லியோபாலை கொலை செய்தேன் ' என்று கூறியுள்ளான். இதனால், ராதாகிருஷ்ணன் இதற்கு முன்னதாக யாரை கொலை செய்தான் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

படிக்க வேண்டிய வயதில் படிக்காமல், தகாத உறவில் ஈடுபட்டு ஒரு குடும்பத்தையே நாசப்படுத்திய ராதாகிருஷ்ணனும் குழந்தைகளை பற்றி யோசிக்காமல் கணவனை கொலை செய்த துணை செய்த சுஜித்தா மேரிக்கும் சட்டம்தான் தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று லியோபாலின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர். தற்போது, லியோபாலின் குழந்தைகள்  தாத்தா குடும்பத்தின் பராமரிப்பில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments