ஏப்ரல் 1 தேதியிலிருந்து 45 வயதுடையோருக்கும் கொரோனா தடுப்பூசி போடலாம்: மத்திய அரசு அறிவிப்பு

0 1903

ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிப் போட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். மருத்துவ நிபுணர்கள் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்புக் குழுவினரின் பரிந்துரையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், நாள்பட்ட நோய்கள் உடைய 50 வயதைக் கடந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதுவரை நான்கு கோடியே எண்பது லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறைச் செயலர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார். இரண்டாவது டோஸ் 80 லட்சம் பேருக்கு போடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் கொரோனா பரவல் ஆறேழு மாநிலங்களில் அதிகரித்த சூழலில் தினசரி பாதிப்புகள் 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்தி வரும் அரசு, அதற்கான வயது வரம்பை குறைத்துள்ளது.

போதுமான தடுப்பூசிகள் கைவசம் இருப்பதால் அது பற்றிய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஒவ்வொருவரும் இரண்டு தடுப்பூசிகள் போட வேண்டியது கட்டாயம் என்ற போதும் இரண்டாவது தடுப்பூசிக்கான இடைவெளியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 6 வாரங்களில் இருந்து எட்டு வாரங்களுக்குள் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments