திமுக ஆட்சியில் தொடங்கி வைத்த நலத்திட்டங்கள் பலவற்றை அதிமுக அரசு முடக்கியுள்ளது - மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் பலவற்றை அதிமுக அரசு முடக்கி வைத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, கோட்டை மைதானத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்திற்கு செய்யப்பட்ட பல்வேறு சாதனைகளையும், நலத்திட்டங்களையும் பட்டியலிட்டார்.
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் முடக்கப்பட்டதாகத் தெரிவித்த ஸ்டாலின், தகவல் தொழில்நுட்பப் பூங்கா, சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை போன்றவற்றை மேம்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டார்.
கொங்கு வேளாளர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததாகவும், இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்ததாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். திமுக ஆட்சியமைத்தால் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
முன்னதாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப்பிரச்சாரம் செய்தார். அப்போது, தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.
Comments