மதுரையில் ஏப்ரல் 2-ந்தேதி பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரே மேடையில் பிரசாரம்..!

தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பிரதமர் மோடியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர். வருகிற 2 ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணைந்து பிரதமரும், முதலமைச்சரும் ஆதரவு திரட்ட உள்ளனர்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற உள்ள நிலையில் வாக்கு சேகரிக்க இன்னும் 12 நாட்களே உள்ளதால் அனைத்து கட்சியினரும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதிமுக சார்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,புதன்கிழமை முதல் மீண்டும் தொகுதிகள் தோறும் சென்று ஆதரவு திரட்ட உள்ளார். இதில் கரூரில் காலை 9 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர், அங்கு போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து பேசுகிறார்.
பின்னர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை, வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரமசிவம், ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் நடராஜ், பழனி தொகுதி ரவி மனோகரன், நிலக்கோட்டை தொகுதி வேட்பாளர் தேன்மொழி, ஆத்தூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் திலகபாமா, திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் தொகுதி வேட்பாளர் நத்தம் விசுவநாதன் ஆகியோருக்கு ஆதரவு திரட்ட உள்ளதாக அதிமுக தலைமை கழக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று 25 ஆம் தேதி அன்று காலை மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டும் முதலமைச்சர் , அங்கிருந்து மேலூர், சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு, மத்தியம், தெற்கு , காரைக்குடி தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
26 ஆம் தேதி அன்று திருப்பத்தூரில் பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர் சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர்,சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம்,சாத்தூர், கோவில்பட்டி தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
இதனிடையே பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வர உள்ளதாக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார். வருகிற 30 ஆம் தேதி தாராபுரம் வரும் பிரதமர் மோடி, அந்த தொகுதியில் போட்டியிடும் மாநில பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக ரவி கூறினார்.
இதன் பின்னர் ஏப்ரல் 2 ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, மதுரை மற்றும் கன்னியாகுமரியில் பிரசாரம் செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று பிரசாரம் செய்ய உள்ளதாக ரவி தெரிவித்தார்.
Comments