திருவாரூர் தேரின் ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம்... ஆச்சரியப்படுத்தும் ஆசியாவின் பிரம்மாண்டத் தேர்!

0 28119
திருவாரூர் ஆழித்தேரில் பொருத்தப்படும் ஹைட்ராலிக் பிரேக்

ஆசியாவின் வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் ஆழித்தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேர் சக்கரத்துக்கு ஹட்ராலிக் பிரேக் பொருத்தும் பணி உட்பட பல்வேறு பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

திருவிழாக்கள் என்றாலே பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் தேர்கள்தான் நினைவுக்கு வரும். தேரோட்டத்தில் உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேருக்கு நிச்சயம் சிறப்பிடம் உண்டு.  ஆசியாவின் மிகப்பெரிய தேர் என்ற வரலாற்று சிறப்புமிக்கது திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின்  ஆழித்தேர்.  திருவாரூர் ஆழித்தேர் 96 அடி உயரமும், 360 டன் எடையும் கொண்டது. ஆசியாவிலேயே மிகப் பெரியது.  ஆயிரம் ஆண்டுகளுக்கு  மேல் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்ட விழா வரும் 25ம் தேதி நடைபெறுகிறது. வருடாவரும் பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து செல்லும்  திருவாரூர் ஆழித்தேரோட்டம்  கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகவும் வருத்தமடைந்தனர்.

இந்த நிலையில் , பக்தர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த ஆழித்தேரோட்டம் இந்த ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் 30 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட நட்சத்திர நாளான பங்குனி ஆயில்ய நட்சத்திர நாளில் இந்த வருட தேரோட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

image

இதனையடுத்து,  பிரம்மாண்ட அதிசயிக்க வைக்கும் அழித்தேரில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆழித்தேரில் உள்ள மர சிற்பங்களுக்கு ஆயில் ஸ்ப்ரே அடிப்பது, 66 உயரத்திற்கு 2600 மூங்கிள்களால் அமைக்கப்பட்ட கூம்பு  பகுதியில் வண்ண தேர்சீலைகள் கட்டுவது போன்ற பணிகள் நடைபெறுகின்றன. முக்கியமாக ஆழித்தேரின் இரும்பு ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணி கவனமுடன் நடைபெற்று வருகிறது. பல நுண்ணிய கலைவேலைப்பாடுகள் கொண்ட இந்த தேரை 400 அடி நீளம் கொண்ட வடத்தை பிடித்து மக்கள் இழுத்து செல்வர். சிமெண்ட் ரோட்டில், ராட்சத இரும்பு சக்கரங்களுடன் இயங்கும் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுப்பதால் சில சமயங்களில் தேரை கட்டுபடுத்துவது கடினமானதாக இருக்கும்.

எனவே தேர் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிரேக்கை பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனம் தயாரித்து பொருத்தப்பட்டுள்ளது. தேர் ஓடும் போது, பிரேக் பிடிக்க பயிற்சி பெற்றவர்கள் தேரின் மீது இருப்பார்கள். ஏதாவது, எமர்ஜென்ஸி நேரத்தில் இந்த பிரேக் பயன்படுத்தப்படும். ஆழித் தேருடன் செல்லும் விநாயகர், சுப்ரமணியர், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் பவனி வரும் குட்டி  தேர்களுக்கும் அலங்கார தட்டிகள் கட்டுவது, தேர்சக்கரங்களும் வண்ண பெயிண்ட் அடிப்பது என வேலைகள்  நடைபெற்று வருகிறது.

கொரோனாவின் தாக்கமும் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் பலவித  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. ஆழித்தேரோட்டத்தின் முக்கிய நிகழ்ச்சியான அருள்மிகு தியாகராஜ சுவாமி ஆலய மூலஸ்தானத்தில் இருந்து ஆழித்தேருக்கு பரிவாரங்களுடன் எழுந்தருளும் நிகழ்வு வரும் புதன்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு அருள்மிகு வினாயகர், சுப்ரமணியர் ஆகிய தேர்கள் வடம்பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து காலை 7.31 மணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி ஆழித்தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படவுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments