ஸ்மிஜா கே. மோகன் .... இத்தனை இக்கட்டிலும் ஒரு பெண்ணால் இவ்வளவு நேர்மையாக இருக்க முடியுமா?

0 9958
ஸ்மிஜா கே. மோகன்

கேரளாவில் கடனுக்கு வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு 6 கோடி முதல் பரிசு விழுந்திருந்த நிலையில், அந்த சீட்டை வாங்கியவரிடத்தில் ஒப்படைத்த பெண் முகவர் ஸ்மிஜா மோகனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

எர்ணாகுளம் அருகேயுள்ள பட்டிமட்டம் என்ற இடத்தில் பாக்கியலக்ஷ்மி லாட்டரி ஏஜன்சியில் டிக்கெட்டுகளை ஸ்மிஜா மோகன் என்பவர் லாட்டரிகளை விற்று வருகிறார். இவரிடத்தில் சந்திரன் என்பவர் கடனுக்கு லாட்டரி டிக்கெட் வாங்குவது வாடிக்கையாக இருந்துள்ளது. பல முறை, ஸ்மிஜாவிடத்தில் கடனுக்கு லாட்டரிகளை பெற்று விட்டு பிறகு பணம் இருக்கும் போது கொடுப்பது சந்திரனின் வழக்கம். சில நாள்களுக்கு முன்பு கேரள மாநில கோடை கால பம்பர் பரிசுக்கான லாட்டரி டிக்கெட்டை ஸ்மிஜாவிடத்தில் போன் வழியாக சந்திரன் புக் செய்துள்ளார். குறிப்பிட்ட எண்ணை போனிலேயே ஸ்மிஜா தெரிவிக்க எஸ்.டி 316142 என்ற எண்ணுடைய லாட்டரி டிக்கெட்டை சந்திரன் தேர்வு செய்துள்ளார். ஆனால், அந்த டிக்கெட் ஸ்மிஜா வசமே இருந்தது.

இந்த நிலையில், ஸ்மிஜா சந்திரனுக்காக வாங்கி வைத்திருந்த டிக்கெட்டுக்கு கேரள கோடைகால லாட்டரியில் முதல் பரிசான ரூ. 6 கோடி விழுந்தது. இதையடுத்து, உடனடியாக சந்திரனை நேரில் அழைத்த ஸ்மிஜா, தன் வசமிருந்த டிக்கெட்டை அவரிடத்தில் ஒப்படைத்தார். கடனுக்காக வாங்கிய டிக்கெட்டாக இருந்தாலும், துளி பணத்துக்கு கூட ஆசைப்படாமல் தன்னிடத்தில் டிக்கெட்டை கொடுத்த ஸ்மிஜாவுக்கு கண்ணீருடன் சந்திரன் நன்றி தெரிவித்தார். டிக்கெட் விலை 200 ரூபாயையும் உடனே கொடுத்தார். பின்னர், அந்த டிக்கெட்டை குட்டமசேரி பகுதியிலுள்ள எஸ்.பி.ஐ வங்கியில் டெபாசிட் செய்தார். எர்ணாகுளத்திலுள்ள டான்பாஸ்கோ பள்ளியில் சந்திரன் பூங்கா பராமரிப்பாளராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு, லீலா என்ற மனைவியும் சலிதா, அனிதா என்ற மகள்களும் அஞ்சித் என்ற மகனும் உண்டு. 'தன் மூத்த மகள் வீடு கட்டி வருகிறார். அவருக்கு உதவ வேண்டுமென்றும் இளையமகள் அனிதாவை நன்கு படிக்க வைக்க வேண்டுமென்பதும் தன் விருப்பம் என்கிறார் சந்திரன். இதறகு, முன் பல முறை லாட்டரி டிக்கெட்டுகளை சந்திரன் வாங்கியிருந்தாலும் ஆறுதல் பரிசுதான் கிடைத்து வந்துள்ளது. முதன்முறையாக இவ்வளவு பெரிய தொகையை பரிசாக பெற்றுள்ளார்.

ஆனால், டிக்கெட்டை நேர்மையாக ஒப்படைத்த ஸ்மிதா மோகனின் கதைதான் பரிதாபக்கரமானது. இவரின், மூத்த மகன் 13 வயது மூளையில் கட்டி ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறான். இரண்டு வயது இளையமகனுக்கு புற்றுநோய் பாதித்துள்ளது. இதற்கான , சிகிச்சைக்கு பல லட்ச ரூபாய் ஸ்மிதாவுக்கு தேவைப்படுகிறது. ஆனாலும், இத்தகைய இக்கட்டான சூழலிலும் சந்திரன் கடனுக்கு வாங்கிய டிக்கெட்டை அவரிடத்தில் ஒப்படைத்த ஸ்மிதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments