நெருங்கும் தேர்தல்… சூடு பிடிக்கும் பிரச்சாரம்..!

0 2265
நெருங்கும் தேர்தல்… சூடு பிடிக்கும் பிரச்சாரம்..!

மிழகத்தில் வாக்குப் பதிவுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொகுதிகள் தோறும் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வாக்கு சேகரிப்பு

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள கனிமொழி, திமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன், திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். முத்துக்கொண்டாபுரம் கோடுவள்ளி,ராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார். திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதி, பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை எடுத்துரைத்து அவர் வாக்கு சேகரித்தார்.

அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் - திருமாவளவன்

தமிழ்நாட்டில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதைவிட அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்று குற்றம்சாட்டியுள்ள திருமாவளவன் அதே நிலைதான் பாமகவுக்கும் வரும் என்று கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி விசிக வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜியை ஆதரித்து தொல் திருமாவளவன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜகவினர் கூடவே இருந்து கொண்டே குழி பறிக்கும் வல்லமை கொண்டவர்கள் என அப்போது அவர் குற்றம்சாட்டினார்.

மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளர் பூமிநாதனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரச்சாரம்

தமிழகத்தில் 90 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளர் பூமிநாதனை ஆதரித்து ஆழ்வார்புரம் பகுதியில் வைகோ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலின்  கோபுரங்களில் தெற்கு கோபுரம் தான் உயரமானது, அதேபோல் மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என வைகோ கேட்டுக் கொண்டார்.

ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஐ.பெரியசாமி அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று பித்தளைப்பட்டி கிராமத்தில் அவர் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய பெரியசாமி, திமுக ஆட்சிக்கு வந்தால் காலியாக உள்ள 3 லட்சம் அரசுக் காலிப்பணியிடங்கள் இளைஞர்களால் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்தார்.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் கே.என்.நேரு நடைபயிற்சியாளர்களிடம் வாக்கு சேகரிப்பு

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், திமுக முதன்மை செயலாளரும், வேட்பாளருமான கே.என்.நேரு, கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொண்டவர்களுக்கு துண்டு அணிவித்து ஆதரவு திரட்டிய அவருடன், இளைஞர்கள், சிறுவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

குடியாத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பரிதா தீவிர தேர்தல் பிரச்சாரம்

குடியாத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பரிதா, உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குடியாத்தம் தொகுதி முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இவர், இன்று தென்குளக்கரையில் உள்ள உழவர் சந்தைக்கு சென்றார். அங்குள்ள காய்கறி மற்றும் கீரைக்கடைகளில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டே வாடிக்கையாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
மேலும் நடைப்பயிற்சி மேற்கொள்வோரிடமும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பரிதா பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் முத்துசாமி நடந்து சென்று வாக்கு சேகரிப்பு

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கும் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான முத்துச்சாமி வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட சூரம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தொண்டர்களுடன் நடந்து சென்று மக்களை சந்தித்த அவர், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அங்கிருந்த சிறுவனுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சேலம் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.வெங்கடாசலம் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்

சேலம் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.வெங்கடாசலம் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த பின் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் கூட்டணி கட்சியினருடன் ஜாமியா மஜீத் தெரு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு நடந்து சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் எம்ஜிஆர் வேடம் அணிந்த ஒருவரும் வந்து ஆதரவு திரட்டினார்.

எடப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் சம்பத்குமார் காய்கறி வியாபாரிகளின் கால்களில் விழுந்து ஆதரவு திரட்டினார்

எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் சம்பத்குமார் நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிடும் சம்பத்குமார், கோவிலில் அனைத்து சாமிகளையும் பயபக்தியுடன் வணங்கினார். கோவில் அர்ச்சகரிடம் துண்டு பிரசுரத்தை வழங்கி ஆதரவு கோரினார். பின்னர் உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட்களில் வியாபாரிகள், பொதுமக்களின்  கால்களில் விழுந்து  உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். 

காஞ்சிபுரம் தொகுதியில் ம.நீ.ம கட்சி வேட்பாளர் கோபிநாத் பூக்கடை சத்திரத்தில் வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கோபிநாத் பூக்கடை, காய்கறி பகுதிகளுக்கு நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பூக்கடை சத்திரத்திலுள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் டார்ச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர், கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடையை மூடுவதாக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளதாக கூறினார்.

ராயபுரம் திமுக வேட்பாளர் 10,000 வாக்குகளைக் கூட பெற மாட்டார் - அமைச்சர் ஜெயக்குமார்

ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை பலவீனமான சுயேட்சையான வேட்பாளராகவே தான் பார்ப்பதாகவும், அவர் 10 ஆயிரம் வாக்குகளைக் கூட பெற மாட்டார் என்பதை, தொகுதியில் உள்ள குழந்தைகளை கேட்டால் கூட சொல்லும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் அங்கிருந்த தேனீர் கடையில் தேனீர் அருந்தி வாக்கு சேகரித்தார்.

விளவங்கோட்டில் பாஜக வேட்பாளர் ஜெயசீலன் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜெயசீலன் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திக்குறிச்சி மஹா தேவர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவ்வழியாக வந்த தூய்மை பணியாளர்களிடமும் அவர் வாக்கு சேகரித்தார்.

காஞ்சிபுரத்தில் 2வது முறையாக களம் காணும் திமுக வேட்பாளர் எழிலரசன் புல்லட் வாகனத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 2வது முறையாக களம் காணும் திமுக வேட்பாளர் எழிலரசன், புல்லட் வாகனத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தாமல், திருப்புக்குழி, மேல் ஒட்டிவாக்கம், முசரவாக்கம், கிளார், பெரும்பாக்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டணி கட்சியினருடன் சென்ற அவர், காஞ்சிபுரத்தில், அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்றும், நெசவாளர்களுக்கு பல சலுகைகள் செய்து தருவதாக உறுதியளித்து ஆதரவு திரட்டினார்.

கோவை தெற்கு தொகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்குசேகரித்த பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட சுக்ரவார்பேட்டை, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக, பாஜக ஆதரவாளர்கள் உடன் திரண்டு சென்ற பாஜக வேட்பாளர்  வானதி சீனிவாசன் மக்களை நேரடியாக சந்தித்து பாஜகவிற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது அவரை ஆதரித்து வாக்கு சேகரிக்க டெல்லியில் இருந்து வந்திருந்த பெண்கள் சுக்ரவார்பேட்டை பகுதியில் உற்சாசமாக தமிழ் மற்றும் இந்தியில் வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பூ தீவிர வாக்கு சேகரிப்பு 

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு தொண்டர்களுடன் திரண்டு சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மாடன் ஸ்கூல் ரோடு, அஜீஸ் முல்க் தெரு, குலாம் அப்பாஸ் அலி கான் தெரு,
காதர் நவாஸ் கான் ரோடு, சுதந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்த வெளி வாகனத்தில் சென்ற பாஜக வேட்பாளர் குஷ்பூ தாமரை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் பெண்ணுரிமை காக்க தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

வேளச்சேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக் தீவிர வாக்கு சேகரிப்பு

வேளச்சேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.கே.அசோக் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அவருடன் அக்கட்சியின் ஆதரவாளர்கள் 500 இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்துக்கணிப்பை தான் நம்புவதில்லை எனவும் மக்கள் கணிப்பையே நம்புவதாகவும் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் துர்கா ஸ்டாலின் பிரச்சாரம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜமுனா பாய் நகர், ஸ்டேட் பாங்க் காலனி ,கென்னடி ஸ்கொயர், காமராஜ் நகர், பந்தர் கார்டன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்பகுதியிலுள்ள மகளிர் குழுக்களுடன் அவர் கலந்துரையாடலும் நடத்தினார். கொளத்தூர் தொகுதியில் தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைத்ததற்கு நன்றி தெரிவித்த அப்பகுதி பெண்கள், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் ஓய்வூதியம் கிடைக்க ஸ்டாலின் வழி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் மேள தாளம் முழங்க தொண்டர்களுடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

சென்னை எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன், மேள தாளம் முழங்க கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். புரசைவாக்கம் வடமலை தெரு, தாண்டவராயன் தெரு , தாணா தெரு, வெங்கடேசன் தெரு பகுதிகளில் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார்.

சங்கராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயசூரியன் தீவிர வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உதயசூரியன் ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக சார்பில் 6-வது முறையாக போட்டியிடும் அவர், மாத்தூர், மண்மலை, செல்லம்பட்டு, பால்ராம் பட்டு, கரடிசித்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று ஆதரவு திரட்டினார். அப்போது தெரு தெருவாக சென்ற அவருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

எழும்பூர் தொகுதி ம.நீ.ம. வேட்பாளர் பிரியதர்சினி மீன் வறுவல் செய்து கொடுத்து பெண்களிடம் வாக்கு சேகரிப்பு

சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்சினி, நரியங்காடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மீன் வறுத்து கொடுத்து வாக்கு சேகரித்தார். கட்சி நிர்வாகிகளுடன் டார்ச் லைட்டுடன் சென்று பிரயதர்சினி வாக்கு சேகரித்தார். அப்போது சமையல் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் கரண்டியை வாங்கி சிறிது நேரம் குழம்பு வைத்தார். கோலா மீன் வறுவலில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரிடம் கரண்டியை வாங்கி பிரியதர்சினி மீன் வறுத்தார். பின்னர் வறுத்த மீன்களை எடுத்து கொண்டே அங்கிருந்த குடியிருப்புவாசிகளிடம் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார்.

மாதவரம் தொகுதியில் வீதிவீதியாக வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் மூர்த்தி

மாதவரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மூர்த்தி அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக செங்குன்றத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அதிமுக தேர்தல் பணிமணையை மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனையடுத்து அப்பகுதிகளில் வீதிவீதியாக சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வந்தவாசியில் வீதிவீதியாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் அம்பேத்குமார்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அம்பேத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆரியத்தூர், வழுர், விழுதுப்பட்டு, கீழ்கொடுங்கலூர் மங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பகுதிகளில் வீதிவீதியாக திறந்த வாகனத்தில் சென்று அம்பேத்குமார் வாக்கு சேகரித்தார்.

பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்எஸ்எம் ஆனந்தன் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்எஸ்எம் ஆனந்தன், கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருப்பூர் மாநகராட்சி 52 மற்றும் 53வது வார்டுகளுக்குட்பட்ட ஐஸ்வர்யா நகர், கிருஷ்ணா நகர் பகுதிகளுக்கு சென்ற அவருக்கு, ஆரத்தி எடுத்து, சால்வை, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் வாக்காளர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார்.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் கேள்வி கேட்ட மூதாட்டிக்கு பொறுமையாக பதிலளித்து வாக்கு சேகரிப்பு

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன், தேர்ந்தெடுத்தால் தொகுதிக்கு என்ன செய்வீர்கள் எனக் கேட்ட மூதாட்டிக்கு பொறுமையாக பதிலளித்து வாக்கு சேகரித்தார். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பிரதான சாலையில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

அதைத் தொடர்ந்து வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டிய எழிலன், பேரறிஞர் அண்ணா வசித்த இல்லத்திற்கு சென்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்தார். இதனிடையே, ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து மு.க.தமிழரசு கோபாலபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கடலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஐயப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு

கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐயப்பன் தொண்டர்கள் புடை சூழ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.கடலூர் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம், வன்னியர்பாளையம்,  மணலி   எஸ்டேட், மரிய சூசை நகர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினர், தொண்டர்கள் உடன் சென்று மக்களை சந்தித்த அவர்  உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பாளையங்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் அப்துல் வஹாப் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பு 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அப்துல் வஹாப் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கைலாசபுரம், கணேசபுரம், சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வீடுவீடாக சென்று திமுக தேர்தல் அறிக்கையை எடுத்துக் கூறியும் அதன் துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி  வேட்பாளர் சிவசங்கரி தொண்டர்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு

தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளர் சிவசங்கரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மென்பொறியாளரான இவர் தொகுதிக்குட்பட்ட பாண்டி பஜார் சாலையில் மேள தாளங்கள் முழங்க தொண்டர்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். திநகர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஜெ.கருணாநிதியும், அதிமுக சார்பில் சத்ய நாராயணனும் போட்டியிடுகின்றனர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ. வேலு தீவிர பிரச்சாரம்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எ.வ. வேலு, திருவண்ணாமலை நகரப் பகுதியில் உள்ள 39 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜீப்பில் வீதி வீதியாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். திருவண்ணாமலை மலையடிவார பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிஅளித்தார். திமுக பிரச்சார பாடலுக்கு நடன கலைஞர்கள் உற்சாக நடனம் ஆடி வாக்கு சேகரித்தனர்.

தியாகராய நகர் தொகுதியில் வீதிவீதியாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் கருணாநிதி

சென்னையில் தியாகராயநகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கருணாநிதி அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேற்கு மாம்பலம், காந்தி தெரு, சேசன் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் வீதிவீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன் திரளான கூட்டணிக்கட்சியினர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஆரணி புதிய வருவாய் மாவட்டமாக தரம் உயர்த்தப்படும் என உறுதி கொடுத்து அதிமுக வேட்பாளரர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பிரச்சாரம்

ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், பையூர் முத்தாலம்மன் திருகோவிலில் சாமிதரிசனம் செய்த பின் பிரச்சாரத்தை தொடங்கினார். திறந்த வேனில் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தார். அப்போது பேசிய அமைச்சர் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆரணி புதிய வருவாய் மாவட்டமாக தரம் உயர்த்தப்படும் என்று உறுதி அளித்தார்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதி  திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா உணவகத்தில் தோசை சுட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பு

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா உணவகத்தில் தோசை சுட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொகுதிக்கு உட்பட சின்மயாநகர், வேதா நகர் பகுதிகளில் தாரை தப்பட்டை முழங்க ஆதரவாளர்களுடன் திரண்டு சென்ற பிரபாகர ராஜா மக்களை சந்தித்து உதய சூரியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த சிறிய உணவகத்திற்கு சென்ற அவர் பக்குவமாக தோசை சுட்டு பிரச்சாரம் செய்தார்.

மேலும் விருகம்பாக்கம் பகுதி மக்களை நேரில் சந்தித்த பிரபாகர் ராஜா, வீடுகளின் படிக்கட்டில் அமர்ந்து குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதாக கூறி வாக்கு சேகரித்தார்.

அதிமுக, திமுக மாறி, மாறி ஆட்சிக்கு வந்தும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை - செங்கல்பட்டு தொகுதியில் அமமுக வேட்பாளர் சதீஷ்குமார் வாக்கு சேகரிப்பு 

செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சதீஷ்குமார், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செங்கல்பட்டு, ராஜாஜி வீதி, பேருந்து நிலையம், அண்ணா சாலை,காந்தி சாலை, சுண்ணாம்பு தெரு ஆகிய பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி ஆதரவு திரட்டிய அவர், அதிமுக, திமுக கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என கூறி வாக்கு சேகரித்தர்.

திருப்பூர் தெற்கு தொகுதியில் முன்னாள் மேயரும் அமமுக வேட்பாளரான விசாலாட்சி தேர்தல் பிரச்சாரம்

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் பிரிவு, காளிபாளையம்  பகுதிகளில் கூட்டணி கட்சியினர், தொண்டர்களுடன் திறந்த வெளி வாகனத்தில் சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தார். மேலும் அங்கிருந்த விவசாய பணியாளர்களிடம் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுகொண்ட அவர் பிறந்தநாள் கொண்டாடிய சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார்.

குமாரபாளையத்தில் அமைச்சர் தங்கமணி தீவிர பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் காணும் அமைச்சர் தங்கமணி, தமது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக நான்காவது முறையாக தங்கமணி போட்டியிடுகிறார். திருவள்ளுவர்நகர், நடராஜன் நகர், கம்பன் நகர், பாலிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக தேர்தல் அறிக்கையை எடுத்து கூறியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் அவர் தீவிர வாக்கு சேகரிப்பு நடத்தினார்.

ராசிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக  வேட்பாளர் மதிவேந்தனை ஆதரித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  கோனேரிப்பட்டி, வி.நகர் பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார்.  இதனையடுத்து, கூட்டணி கட்சியினருடன் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டனர். 

அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும் - ஓ.எஸ்.மணியன்

அதிமுக மீண்டும் ஆட்க்கு வந்தால் ஏழை மீனவர்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தரப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பிரச்சாரம் செய்தார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து கீழையூர் ஒன்றியம் செருதூர், பிரதாபராம்புரம் உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சர் பேசினார். அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கான உதவித் தொகை 7ஆயிரத்து 500 ரூபாய் ஆக உயர்த்தப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி அவர் வாக்கு சேகரித்தார்.

அதிமுக வேட்பாளர் எம்.எல்.ஏ.சத்ய நாராயணன் தீவிர வாக்கு சேகரிப்பு 

தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சத்ய நாரயணன் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். தற்போதைய எம்.எல்.ஏ.வான சத்ய நாராயணன் மீண்டும் திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் மாம்பழம் சாலை, நேரு நகர், வண்டிகாரன் நகர் பகுதிகளில் மேள தாளம் முழங்க மக்களை சந்தித்து வாக்கு சேகரித்த அவர், அதிமுக வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

நாகப்பட்டினம் தொகுதியில் பார்கவுன்சில் நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ்

நாகப்பட்டினம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் ஆளூர் ஷாநவாஸ் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிடும் அவர், மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு பார்கவுன்சில் நிர்வாகிகளை சந்தித்து பானை சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

"அவசியம் மாஸ்க் போடுங்க உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க" - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளர் 

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன், சிறுவர் சிறுமிகளுக்கு முககவசம் அணிவித்து, "அவசியம் மாஸ்க் போடுங்க உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க" என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கும்பகோணம் பேட்டை, ஆற்றங்கரை தெரு பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அவர், கொரோனா அதிகமாக பரவி வருவதால், அனைவரும் பாதுகாப்புடன் முக்கவசம் அணிந்து வெளியே வருமாறு அறிவுறுத்தினார். பின்னர் தேர்தல் துண்டு பிரசுரங்களுடன் மாஸ்க் வழங்கி அன்பழகன் ஆதரவு திரட்டினார்.

துரைமுருகனை ஆதரித்து வேலூரில் கே.எஸ்.அழகிரி பிரச்சாரம்

காட்பாடியில் போட்டியிடும் திமுக பொதுச்செயலர் துரைமுருகனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பிரச்சாரம் செய்தார்.வேலூர் சேண்பாக்கம் பகுதியில் வேன் மூலம் பிரச்சாரம் செய்த அவர், துரைமுருகன் காட்பாடி தொகுதிக்கு கிடைத்த முத்து, வைடூரியம் போன்றவர் என்றார்.

திமுக மற்றும் கூட்டணிகட்சிகளின் தேர்தல் அறிக்கை தமிழக வளர்ச்சிக்கானது என குறிப்பிட்ட அழகிரி, தமிழகத்தின் அடையாளத்தை மாற்ற துடிப்பவர்களுக்கு அதிமுக அரசு துணை போவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மக்கள் மத்தியில் சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அதிமுக கூட்டணி வேட்பாளர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் மக்கள் மத்தியில் சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்தார். அதிமுக கூட்டணியில் உள்ள மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார் கும்பகோணம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தொகுதிக்கு உட்பட்ட அசூர் ஊராட்சியில் ஆதரவாளர்களுடன் மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் மக்கள் மத்தியில் சிலம்பம் சுற்றி அசத்தினார்.

எடப்பாடி தொகுதியில் கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்து ஆதரவு திரட்டிய அதிமுகவினர்

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் கரும்பு ஜூஸ் போடும் எந்திரத்தில் ஜூஸ் போட்டு கொடுத்து அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியான எடப்பாடியில், அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பேருந்து நிலையத்தில் காய்கறி மார்க்கெட்டிலும் சுமை தூக்குவோர் சங்கத்தினரிடமும் ஆதரவு திரட்டினர். கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்து அதிமுக அரசின் சாதனைகளையும், தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

செங்கம் சட்டமன்ற தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் எம்.பி.கிரி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் எம்.பி.கிரி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செங்கம் தொகுதிக்குட்பட்ட கீழ் வணக்கம்பாடி, தரடாப்பட்டு, கன்னகந்தல், நெடுங்காவடி, கோவிந்தன்பட்டு ஆகிய பகுதிகளுக்கு சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வால்பாறையில்  தேயிலை தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்த CPI வேட்பாளர் எம்.ஆறுமுகம்

வால்பாறை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எம்.ஆறுமுகம் தேயிலைத் தோட்டங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். திமுக கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிடும் அவர், முன்னதாக அங்குள்ள முனீஸ்வரன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தைத் துவங்கினார். இதனையடுத்து நல்லகாத்து எஸ்டேட், சோலையாறு, கெஜமுடி, சங்கிலிரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கும் சென்று தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் பாமக ஆதரவாளரை திமுக பிரமுகர் கத்தியால் தாக்கியதாக புகார் 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் பாமக ஆதரவாளரை திமுகவை சேர்ந்த நபர் தாக்கியதாக கூறி அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக கூட்டணியில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா, கூத்தம்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பாமகவை சேர்ந்த ஹக்கீம் என்பவரை திமுக பிரமுகர் ஒருவர் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக திமுக பிரமுகரை கைது செய்யக்கோரி பாமக வேட்பாளர் திலகபாமா உள்ளிட்ட அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ரகசியம் உள்ளதாக பிரச்சாரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

படித்த இளைஞர்கள் 10 லட்சம் பேருக்கு அடுத்த ஆண்டு அரசு பணி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில்  போட்டியிடும் அமைச்சர் செங்கோட்டையன்  தொகுதிக்குட்பட்ட பகுதிகளான காரப்பாடி ஆயிபாளையம், பழனிகவுண்டன்பாளையம், இந்திரா நகர், குருமந்தூர் ,நடுபாளையம் ஆகிய பகுதிகளில்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது  பேசிய அவர் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனிப்பான ஒரு ரகசியம் உள்ளதாக  தெரிவித்தார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரம் 

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும்  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மேள தாளத்துடன் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பூச்சி நாயக்கன்பட்டி, ஆர்வி நகர், முகமதியா புரம் பாறைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், படித்த பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக பட்டு சேலை, குத்துவிளக்கு, பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை அதிமுக அரசு வழங்கும் என்று தெரிவித்தார்.

திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசுவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசுவை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காரியாபட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய உதயநிதி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வை வெற்றிபெற செய்ததைப் போல், இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வை வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள திட்டங்களை எடுத்துரைத்து ஆதரவு திரட்டினார்.

அதனைத் தொடர்ந்து சாத்தூர் மதிமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர். ரகுமானை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். 

ராயபுரம் தொகுதி வீடுவீடாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி

ராயபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிங்காரத்தோட்டம், ஆதாம் சாகிப் தெரு, எம்.சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்த மூர்த்தியுடன் திரளான கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அதிமுகவின் திட்டங்களை விளக்கி வாக்கு சேகரிப்பு 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், ப.குமார் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். உக்கடை அரியமங்கலம், மலையடிவாரம், பாரதியார் தெரு, அம்மா குளம், அரியமங்கலம் மந்தை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று, அதிமுகவின் திட்டங்களை விளக்கி ஆதரவு திரட்டினார். அப்போது, புங்களாயி அம்மன் கோவில் தெருவின் குறுக்கே செல்லும் கழிவு நீர் வாய்க்கால் உடைந்து பள்ளம் ஏற்பட்டிருந்ததால், தொண்டர்கள் அதில் விழாமல் இருக்க சிறுவர்கள் கை கோர்த்து நின்று பாதுகாப்பு அளித்தனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில்  நடனமாடி எபினேசருக்கு வாக்கு சேகரித்த பெண்கள்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் பிரச்சாரத்தின் போது பெண்கள் நடனமாடி வாக்கு சேகரித்தனர்.
கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகர், குமரன் நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வீதிவீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட எபினேசர், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தனக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

விருத்தாச்சலம் தனி மாவட்டம் அமைக்கப்படும் என பிரேமலதா பிரச்சாரம் 

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்தார். விருத்தாசலத்தில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த அவர், விருத்தாசலத்தை சிறந்த தொகுதியாக மாற்றுவேன் என்றும் வெற்றி பெற்றால் விருத்தாசலம் தனி மாவட்டமாக உருவாக்கப்படும் எனவும் கூறினார்.

தொடர்ந்து அவர் பிரச்சாரவாகனத்தில் இருந்தவாறே தமக்கு ஆதரவு திரட்டினார். அப்போது வானில் கருடன் பறந்தது. உடனே கண்மூடி இறைவணக்கம் செய்த அவர் கருடன் பறப்பதை மக்களிடம் சுட்டிக்காட்டினார். பண்டாரம்குப்பம், செம்பளாகுறிச்சி, பெரியவடவாடி, விஜயமாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று பிரேமலதா தமக்கு ஆதரவு திரட்டினார்.

பரி வேட்டை நடத்த அனுமதி பெற்றுத் தருவதாக திருப்பத்தூர் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் மருது அழகுராஜ், பள்ளத்தூர், மனசை, வடகுடி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தான் வெற்றி பெற்றால் பரி வேட்டை நடத்த அரசிடம் அனுமதி பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

சுட்டெரிக்கும் வெயிலிலும் வீதி வீதியாக நடந்து சென்று ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் சின்னதுரை பிரச்சாரம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் தனி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சின்னதுரை திறந்த வேன் மற்றும் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில் வீதி, சிவன் கோவில் தெரு, கடலூர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களும் கோஷங்கள் எழுப்பியவாறு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

”திருச்செங்கோட்டை புதிய மாவட்டமாக்க பாடுபடுவேன்” - கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பிரச்சாரம்

தமிழகத்தில் நடைபெறுகிற தேர்தல் திமுகவிற்கும், பாஜகவிற்குமான போட்டி என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். திருச்செங்கோடு தொகுதியில், திமுக கூட்டணியின் சார்பில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஈஸ்வரன் வையப்பமலை பேருந்து நிலைய பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன், திருச்செங்கோட்டை புதிய மாவட்டமாக உருவாக்க பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார்.

மக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் - மண்ணச்சநல்லூரில் அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதி பிரச்சாரம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் பரஞ்ஜோதி திருவாசி ஊராட்சியில் உள்ள பாலாம்பிகை அம்மன் கோவிலில் வழிபட்ட பின் பிரச்சாரத்தை தொடங்கினார். தான் சாதாரன குடும்பத்தில் பிறந்த விவசாயி எனத் தெரிவித்த பரஞ்ஜோதி, தன்னை எப்போது வேண்டுமானாலும் மக்கள் சந்திக்கலாம் உறுதி அளித்தார்.

அருப்புக்கோட்டையில் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக-காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கைகலப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக-காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் திருக்கோவில் பேருந்து நிறுத்தத்தில் பிரச்சாரத்திற்காக திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கூடியிருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது. அங்கிருந்த மற்றவர்கள் கைகலப்பில் ஈடுபட்டவர்களை விலக்கி விட்டனர்.

வெற்றி பெற்றால் அடிப்படைத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்குறுதி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்னிலை, மலையம்பாளையம், துக்காச்சி, பரமத்தி மற்றும் கோடந்தூர் பகுதிகளில் பிரச்சாரத்திற்கு சென்ற அவர் வாக்குபெட்டியில் முதல் சின்னமான தாமரை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற வைத்தால் அடிப்படைத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தார்.

போடியில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பரப்புரை

போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். போடி தேவர்திடல் முன் அதிமுக, பாஜக, தமாக கட்சி தொண்டர்கள் மற்றும் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் உடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஜி.கே.வாசன், தமிழக அரசின் 10 ஆண்டு கால சிறப்புகளையும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் குறிப்பிட்டு மக்கள் மத்தியில் பேசினார்.

அதைத்தொடர்ந்து, மக்கள் சேவையாற்றி வரும் அதிமுக அரசுக்கு வாக்களித்து மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டார்.

திருத்துறைப்பூண்டி தொகுதியில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து

திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் மாரிமுத்து அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிடும் அவர், ஆட்டூர் ரோடு, எடத்தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். வீதிவீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருடன், திரளான கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்கு கேட்கச் சென்ற திமுக எம்எல்ஏ இன்பசேகரனிடம் பெண்கள் கேள்வி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்ற திமுக வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான இன்பசேகரனை சூழ்ந்துகொண்டு பெண்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். பென்னாகரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ இன்பசேகரனுக்கு அங்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தனது ஆதரவாளர்களுடன் வாக்கு கேட்கச் சென்ற இன்பசேகரனுக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைத்துக்கொண்டே, தங்கள் பகுதியில் சரிவர தண்ணீர் வருவதில்லை என அவர்கள் முறையிட்டனர். இதனை எதிர்பார்க்காத இன்பசேகரன் அங்கிருந்து சிரித்துக்கொண்டே நகர, மற்றொரு பெண்கள் குழு சூழ்ந்துகொண்டு “இதற்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்துதான் எம்.எல்.ஏ வரப்போகிறார்” என சளைக்காமல் குற்றம்சாட்டினர்.

ராதாபுரத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு தேவாலயம் மற்றும் தர்காவுக்குச் சென்று இறை வழிபாடு

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திமுக சார்பில் போட்டியிடும் அப்பாவு வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்துக்கு இடையே சின்னம்மாள்புரத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலும், துலுக்கர்பட்டியில் உள்ள தர்காவிலும் அப்பாவு இறை வழிபாடு மேற்கொண்டார்.

வயலில் நாற்று நட்டு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் தமிழரசி 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழரசி வயலில் நாற்று நட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருப்புவனம், மணலூர் பகுதிகளில் தொண்டர்களுடன் வாக்கு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளர் தமிழரசி, அங்கு வயல்வெளியில் விவசாய பணியாளர்கள் நடவு செய்து கொண்டிருப்பதை பார்த்து தானும் வயலில் இறங்கி நாற்று நடவும் பணியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து, அனைவரிடமும் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் தீவிர பிரச்சாரம் 

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் திப்பிரமலை பகுதியில், திறந்தவெளி வாகனத்தில் சென்று, தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பொன்.ராதாகிருஷ்ணனுடன், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி த.மா.கா வேட்பாளர் ஜூட் தேவ்-வும் பரப்புரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், குளச்சலில் சரக்கு பெட்டக மாற்று முனையும் அமையுமா? என்ற கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்தார். 

அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் தீவிர பிரச்சாரம் 

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரும் சுற்றுலாத் துறை அமைச்சருமான வெல்ல மண்டி நடராஜன், மண்ணின் மைந்தன் என்பதால் தனக்கே வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தார். பாலக்கரை, முதலியார் சரித்திரம், பருப்புக்கார தெரு, மல்லிகைபுரம் ஆகிய பகுதிகளில் அதிமுக பிரமுகர்கள், கூட்டணி கட்சி தொண்டர்களுடன் சென்று அவர் வாக்கு சேகரித்தார். இம்முறையும் தன்னை வெற்றிபெறச் செய்தால் திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் என அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் வாக்குறுதி அளித்தார்.

திருப்பரங்குன்ற அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா நெசவாளர் வீட்டில், தறி நெய்து வாக்கு சேகரிப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா நிலையூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கைத்தறி நகரில் நெசவாளர் ஒருவர் வீட்டில் ராஜன் செல்லப்பா தறி நெய்தார்.

பின்னர் நெசவாளர்களுக்கு மத்தியில் பேசிய அவர், அரசு அவர்களுக்கு வழங்கும் நிதியை உயர்த்தி தர வழிவகை செய்வதாக உறுதி அளித்தார்.

அதிமுக வேட்பாளர் தானேஷ் மக்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரிப்பு 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தானேஷ் மக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாயனூர், மணவாசி, மேட்டு திருக்காம்புலியூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு தொண்டர்களுடன் சென்ற அதிமுக வேட்பாளர் தானேஷ் மக்களின் காலில் விழுந்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்களிடம் பேசிய அவர் மக்களுக்கு நல்லது செய்ய தனக்கு ஒரு வாய்ப்பு தரும்படி கேட்டுக்கொண்டார்.

கொ.ம.தே.க வேட்பாளர் பாலு வீடுகள், கடைகளுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் திமுக கூட்டணியைச் சேர்ந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் பாலு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெருந்துறை கோட்டை மேடு காலனி பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கி அவர் பிரச்சாரம் செய்தார்.

ஒரு யோகியைப் போல் 24 மணி நேரமும் ஒரே சிந்தனையோடு இருந்தால் வெற்றி- துரைமுருகன் பேச்சு

தேர்தலில் நிற்பவர்களும், தேர்தல் பணி செய்பவர்களும் ஒரு யோகியைப் போல் 24 மணி நேரமும் அதே சிந்தனையோடு இருந்தால் வெற்றி பெற முடியும் வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தி இருக்கிறார். குடியாத்தம் தொகுதி திமுக வேட்பாளர் அமலு அறிமுக கூட்டத்தில் பேசிய துரைமுருகன், இந்த சட்டமன்ற தேர்தல் இந்திய அளவில் ஒரு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேர்தலாக அமையும் என்றார்.

கிராமப்புறங்களில் திறந்த வாகனத்தில் சென்றபடி திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்முடி பிரச்சாரம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடி அந்திலி, பரனூர், ஆற்காடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் பின்தொடர திறந்த வாகனத்தில் சென்றபடி திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆவடியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் க.பாண்டியராஜனுக்காக அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

சென்னை ஆவடி அதிமுக வேட்பாளர் அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் அம்பத்தூர் அதிமுக வேட்பாளர் வி.அலெக்சாண்டர் ஆகியோரை ஆதரித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆவடி எம்.ஜி.ஆர் திடலில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி அதிமுக ஆட்சி என்று கூறி வாக்கு சேகரித்தார்.

 ஓட்டலில் தோசை சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா உணவகத்தில் தோசை சுட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட சின்மயாநகர், வேதா நகர் பகுதிகளில் தாரை தப்பட்டை முழங்க ஆதரவாளர்களுடன் திரண்டு சென்ற பிரபாகர ராஜா மக்களை சந்தித்து உதய சூரியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த சிறிய உணவகத்திற்கு சென்ற அவர் தோசை சுட்டு பிரச்சாரம் செய்தார்.

சுதர்சனத்திற்கு ஆதரவாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பரப்புரை

சென்னை மாதவரம் தொகுதி திமுக வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான சுதர்சனத்தை ஆதரித்து, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா  வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட ஆ.ராசா, திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் அனைத்தும், மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றித்தரப்படும் என உறுதி அளித்தார்.

மூதாட்டிகள் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர பரப்புரை

மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பொட்டிபுரம், சித்திரெட்டிப்பட்டி, மீனாட்சிபுரம், செளடார்பட்டி, வலையபட்டி, பூசலப்புரம், மதிப்பனூர், நாகையாபுரம், இடையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மூதாட்டிகள் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்று வாக்குசேகரித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு, முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என உறுதியளித்தார். 

"முருகனை வழிபடுபவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையேயான தேர்தலே இது" - சி.டி.ரவி

வரவிருக்கும் தேர்தல் முருகனை வழிபடுபவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடைபெறக் கூடிய தேர்தல் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். திருவையாறு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து செங்கிப்பட்டி கடைவீதியில் சி.டி.ரவி திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இத்தேர்தல் திமுக, காங்கிரஸ் கூட்டணியினருக்கு எதிராக நடக்கும் தேர்தல் அல்ல என்றும் முருகனை வழிபடுபவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் எனவும் அவர் தெரிவித்தார்.

மக்களவை தொகுதி இடைத்தேர்தல் காங். வேட்பாளர் விஜய் வசந்த்  திறந்த வாகனத்தில் பிரச்சாரம்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடை தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் இணைந்து வாக்கு சேகரித்தனர். திறந்த வாகனத்தில் கருங்கல், பாலப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று, வழிநெடுகிலும் தாரை தப்பட்டை முழங்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

விசிக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடும்படி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வேண்டுகோள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி ஜெகத்ரட்சகன் அரக்கோணத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கௌதம சன்னா-வை அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், கௌதம சன்னாவின் வெற்றிக்கு பாடும்படி திமுக மற்றும் கூட்டணி கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார்.

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவை ஆதரித்து திமுக எம்பி கனிமொழி பிரச்சாரம்

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும், முதன்மை செயலாளருமான கே.என்.நேருவை ஆதரித்து திமுக எம்பி கனிமொழி உறையூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய குற்றங்களை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக நீதிமன்றம் அமைக்கப்படும் என்றார். மாணவர்களுக்கு 10 GB இணைய வசதியுடன் டேப்லட் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

திருவிக நகர் தமாக வேட்பாளர் பிஎல் கல்யாணி காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்

சென்னை திருவிக நகர் தமாக வேட்பாளர் பிஎல் கல்யாணி வயதான வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். அதிமுக கூட்டணியில் திருவிக நகர் தொகுதி தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் சார்பாக போட்டியிடும் பி.எல்.கல்யாணி கன்னிகாபுரம் பகுதியில் தமக்கு ஆதரவு திரட்டினார். அப்போது வயதானவர்களை கண்டதும் அவர்களின் காலில் அவர் விழுந்தார். அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அவருடன் சேர்ந்து வாக்கு சேகரித்தனர்.

வெற்றி பெற்றால் தொகுதியில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவேன் - மன்சூர் அலிகான்

கோவையில் பதிவு எண் இல்லாத டிவிஎஸ் ”எக்ஸ் எல் சூப்பர்” வண்டியில் தலைக்கவசம் அணியாமல் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான், கார்ப்பரேட் நிறுவனங்களை விரட்டுவதே தனது நோக்கம் என்று கூறி கலகலப்பூட்டினார். தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் அவர், . செல்வபுரம் பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இனி தாம் டிவிஎஸ் ”எக்ஸ் எல் சூப்பர்”ல் தான் செல்ல உள்ளதாக மன்சூர் கூறினார்.

ஏன் தலைக்கவசம் அணியவில்லை என்று கேள்விக்கு பதில் அளித்த அவர், தலைக்கவசம் அணிந்தால் தம்மை யாருக்கும் தெரியாது என்றும் வேகமாகச் செல்லவில்லை என்றும் சிறுவர்களைப் போல் பேசி சிரிப்பு மூட்டினார்.

சைதாப்பேட்டையில், திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியம் பிரச்சாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியத்திற்கு வித்தியாசமான முறையில் மோட்டார் எந்திரம் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. வெங்கடாபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மா.சுப்ரமணியம் வாக்கு சேகரிக்க சென்ற போது, அப்பகுதி இளைஞர்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எந்திரம் மூலம் மாடியில் இருந்து ரோஜா இதழ்களைத் தூவினர்.

மயிலாப்பூரில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரத்தில் நடனமாடிய பெண்கள்

சென்னை மயிலாப்பூரில் அதிமுக வேட்பாளர் நட்ராஜ் பிரச்சாரம் செய்த போது வாத்தியங்களின் இசைக்கு ஏற்றவாறு வயதான பெண்கள் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.

நட்ராஜ், மயிலை இஸ்மாயில் கிரவுண்ட் குடிசைப்பகுதி, பிஎம் தர்கா மெயின் ரோடு, துலுக்காணம் தோட்டம் உள்ளிட்ட இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார். நடராஜின் மீது வீடுகளின் மேலிருந்து பூக்களை தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

"அதிமுக சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது"- அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் பிரச்சாரம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சாணார்பட்டி மற்றும் சுற்று வட்டார கிரமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஆவினிபட்டியில், திண்டுக்கல் மாவட்ட பூசாரிகள் பேரமைப்பு சார்பாக அவருக்கு கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மருநூத்து கிராமத்தில் உள்ள முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் அவர் வழிபட்டார். அப்போது பேசிய நத்தம் விஸ்வநாதன், அதிமுக அரசு சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்வதாகத் தெரிவித்தார்

டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த அமமுக மயிலை வேட்பாளர்

மயிலாப்பூர் அமமுக வேட்பாளர் கார்த்திக் டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்தார். தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் வாக்கு சேகரிக்க வந்த அவர், அங்கிருந்த டீக்கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கு டீ போட்டு கொடுத்து தமக்கு ஆதரவு திரட்டினார்.

டீக்கடை மாஸ்டருக்கும் அமமுக வேட்பாளர் டீ போட்டு கொடுத்து அசத்தியதால் அவருடன் பிரச்சாரத்திற்கு வந்தவர்கள் ஆரவார குரல் எழுப்பினர்.

நடிகை குட்டி பத்மினி, அர்ஜுன் சம்பத் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரசாரம்

சென்னை துறைமுகம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் சந்தானகிருஷ்ணன், ஸ்டான்லி மருத்துவமனை அருகே வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அதே தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வினோஜ் செல்வம் காமராஜபுரத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து நடிகை குட்டி பத்மினி மற்றும் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிரசாரம் மேற்கொண்டனர். அப்பகுதி மக்கள் குட்டி பத்மினியுடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

வில்லிவாக்கத்தில், திமுக வேட்பாளர் வெற்றியழகன் வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம்

சென்னை வில்லிவாக்கத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றியழகன் தொண்டர்கள் புடைசூழ திறந்த வாகனத்தில் சென்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாரதி நகரில் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், முறையாக குடிநீர் கிடைக்காத பகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைக்கவும், பழுதடைந்த சாலைகளை மேம்படுத்தவும் வழிவகை செய்வதாக அவர் உறுதியளித்தார். வெற்றியழகன் மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு வாக்கு சேகரிப்பு

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு, தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். ஆயிரம்விளக்கு தொகுதிக்கு உட்பட்ட கிரீம்ஸ் ரோடு சாலை, மற்றும் ராமசாமி தெரு உள்ளிட்ட பகுதிகளில், வீதி வீதியாக, தெரு, தெருவாகச் சென்று, பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார்.

திறந்தவெளி வாகனத்தில் செல்லும் நடிகை குஷ்பு, குறுகலான தெருக்களில் நடந்து சென்று, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து, பரப்புரை மேற்கொண்டார். குஷ்புவுடன், பாஜக, பாமக, த.மா.கா நிர்வாகிகள் மட்டும் உடன் சென்று, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 24 மணி நேர குடிநீர் - அமைச்சர் செல்லூர் ராஜு உறுதி

மதுரை மேற்குத் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜு, தெருக்கள்தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பழங்காநத்தம், அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றவர், அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் சென்று அவரது பாதத்தில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர், விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வீடுகள் தோறும் இலவசமாக 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் குழந்தைகளுக்கு சாக்லேட்; முதியவர்களுக்கு சால்வை அணிவித்து பிரச்சாரம்

மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள குடிசை பகுதிகளுக்குச் சென்று வாக்குகள் சேகரித்தார். கையில் சாக்லேட் பாக்கெட்டுகளுடன் சென்று அவற்றை சிறுவர்களுக்கு வழங்கியும், முதியவர்களுக்கு சால்வைகள் அணிவித்தும் அவர் வாக்கு சேகரித்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்ற அவர், திமுகவின் வாக்குறுதிகளை குடிசைவாசிகளிடம் எடுத்துக் கூறி, தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அமைச்சர் தங்கமணி பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான தங்கமணி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தட்டாங்குட்டையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகால தமிழக அரசின் சாதனைகளையும் அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள பல்வேறு அம்சங்களையும் மக்களிடத்தில் கொண்டு சென்று, தம்மை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுகொண்டார்.

திருப்பத்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ நல்லத்தம்பி கட்சியின் பிரச்சார பாடலுக்கு நடனமாடி வாக்கு சேகரிப்பு

திருப்பத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக எம்.எல்.ஏ நல்லத்தம்பி, கட்சியின் பிரச்சார பாடலுக்கு நடனமாடி வாக்கு சேகரித்தார். திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பா.முத்தம்பட்டி என்ற கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற நல்லத்தம்பி, திமுகவின் தேர்தல் பிரச்சாரப் பாடலான “ஸ்டாலின் தா வராரு, விடியல் தரப் போறாரு” என்ற பாடலுக்கு முதலில் வாகனத்தில் இருந்தவாறு நடமாடினார்.

தொடர்ந்து வாகனத்தில் இருந்து இறங்கி வந்து மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து குத்தாட்டம் போட்டார்.

பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பிரச்சாரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சித் தொகுதி அதிமுக வேட்பாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், தனது தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொள்ளாச்சி நகர் பகுதிக்குட்பட்ட சேரன் நகர், பெரியார் காலனி, மணியகாரர் காலனி, வால்பாறை சாலை போன்ற பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

திருவல்லிக்கேணி தொகுதி ஐஜேகே வேட்பாளர் முகம்மது இத்ரீஸ் நடன கலைஞர்களுடன் சென்று ஆடிப்பாடி வாக்குசேகரிப்பு

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஐஜேகே வேட்பாளர் முகம்மது இத்ரீஸ் நடன கலைஞர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் ஐ.ஜே.கே.வுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமது சின்னத்தை பிரபலபடுத்தும் நோக்கில், திருவல்லிக்கேணி பகுதியில், நடன கலைஞர்களுடன் சென்று வீதியில் குத்தாட்டம் போட்டபடி, ஐ.ஜே.கே வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்காக தீவிரமாக வாக்குசேகரிக்கும் துர்கா ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் விநாயகர் கோயிலில் வழிபாடு செய்து பின்னர் வாக்கு சேகரித்தார். கொளத்தூர் அமிர்தம்மாள் நகரில் குடியிருப்பு வாசிகளை திரட்டி ஸ்டாலின் தொகுதிக்கு செய்த திட்டங்கள் குறித்து விளக்கிய அவர், செய்ய வேண்டியவை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டார். துர்கா ஸ்டாலின், கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியிலும் பரப்புரை மேற்கொண்டார். வீதி, வீதியாகச் சென்று, மு.க.ஸ்டாலினுக்காக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

பனையூர் பாபுவுக்கு ஆதரவாக வி.சி.க தலைவர் திருமாவளவன் பிரச்சாரம்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக கூட்டணி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபுவை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரித்தார். பவுஞ்சர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு வாக்கு சேகரித்த அவர், பனையூர் பாபு பணம் சம்பாதிக்க பொது வாழ்வுக்கு வரவில்லை என்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர் வந்துள்ளார் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments