10 பைசா செலவில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பது எப்படி? சாலையோர தள்ளுவண்டி கடைக்காரர்களுக்கு சிறப்பு பயிற்சி

0 3724
10 பைசா செலவில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பது எப்படி?

தினமும் ஐந்து பைசா- 10 பைசா செலவில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பது எப்படி? என்பது குறித்து சென்னையில் சாலையோரத் தள்ளுவண்டி கடைக்காரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புறத் தூய்மையைப் பராமரிப்பது ஆடம்பரமான விஷயம் மட்டுமல்ல, வெறும் ஐந்து பைசா பத்து பைசா செலவில் சுத்தமாக சுற்றுப்புறத்தை வைத்திருக்கலாம் என்பதை உணர்த்த சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

அசோக் நகர் பகுதியைச் சுற்றியுள்ள தள்ளுவண்டி மற்றும் சாலையோர உணவக வியாபாரிகள் இந்த நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்வில், சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சோமு, உணவு விஞ்ஞானி பசுபதி மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்று பரவி வரும் இந்த நேரத்தில், சாலையோரக் கடைகளில் உணவு உண்ண வருபவர்கள், உணவு தயாரிப்பவர்கள் அதனை விற்பவர்கள் எவ்வாறு சுத்தமாக இருக்க வேண்டும், சுகாதாரத்தைக் காக்க வேண்டும் என்பது குறித்த முக்கியமான கருத்துக்கள் சாலையோர வியாபாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

சாலையோரக் கடைகளைத் தேடி உணவு அருந்த வருபவர்கள், தும்மினாலோ, எச்சில் துப்பினாலோ, அசுத்தம் செய்தாலோ மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், மக்கள் கூடும் சாலையோர கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தொற்றைத் தடுக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத்தை காப்பது குறித்து செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

5 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கும் குளோரினை வாங்கி, பாட்டில் மூடி அளவுக்கு எடுத்து அரை பக்கெட் தண்ணீரில் கலந்து கடை நடத்தி வரும் சுற்றுப்புறங்களில் தெளித்தால், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்றுப் பரவுவதை தடுக்கும். இந்த ஒரு மூடி குளோரினுக்கு 5 பைசாவில் இருந்து 10 பைசா மட்டுமே செலவாகும் என்கின்றனர் அதிகாரிகள்.

சிறிய துண்டு எலுமிச்சை பழத்தைக் கொண்டு கை கழுவினால் தொற்று பரவாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை

தள்ளுவண்டிக் சக்கர பகுதி நாற்காலி, மேஜை போன்றவற்றில் மஞ்சள் நிற பெயிண்டை அடித்தால் எந்த தொற்றும் பரவாது.

சாலையோர உணவக கடையில் பாதுகாக்கப்படும் அரிசி, மளிகைப் பொருட்களில் காய்ந்த மிளகாயை, சிறிது சிறிதாக போட்டு வைத்தால் எலி, பூச்சிகள் எந்த விதத்திலும் உணவுப் பொருட்களை நெருங்காது, இனப்பெருக்கமும் செய்யாது என்று எடுத்துகூறிய அதிகாரிகள் கடையில் உள்ள கழிவு, குப்பைகளை எவ்வாறு முறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணையை திரும்பவும் பயன்படுத்தக் கூடாது என்றும் அதனால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்தும் விளக்கமளித்தனர்

நிகழ்ச்சியில் பங்கேற்ற சாலையோர உணவு விற்பவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் கையுறை, உணவு தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் மேலங்கி, எந்த ஒரு உணவிலும் தலைமுடி விழாமல் இருப்பதற்காக தலைக்கவசம் அடங்கிய பொருட்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments