பரிதாபப்பட்டு வேலைக்கு சேர்த்த மாதவரம் பெண்... இரக்கமே இல்லாமல் கொன்று விட்டு நகையுடன் தப்பிய தம்பதி கைது!

0 281568
கைதான தம்பதி

கொரோனா ஊரடங்கால் கஷ்டப்படுவதாகவும் ஏதாவது வேலை தருமாறு கேட்டு வந்த தம்பதிக்கு வேலை கொடுத்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன் , மனைவி கைது செய்யப்பட்டனர்.

சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் 5- வது பிரதான சாலையை சேர்ந்தவர் ரவி. இவர் சௌகார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். புனேவில் மகன் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில்,கலைவாணி வீட்டுக்கு ராகேஷ் என்பவர் பெயிண்டிங் வேலைக்கு வந்துள்ளார். அப்போது, கலைவாணியிடத்தில் அறிமுகமாகி தான் கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாவும் தனக்கு ஒரு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பரிதாபமாக கூறியுள்ளான். கணவர் வேலைக்கு சென்ற பிறகு, தனியாக இருக்கும் கலைவாணியும் 'தனக்கு பாதுகாப்பாக இருக்கட்டும்' என்ற எண்ணத்தில் அவனை வீட்டு காவலாளி வேலைக்கு வைத்துள்ளார். தொடர்ந்து, தன் மனைவி ரேவதியையும் அழைத்து வந்து கலைவாணி வீட்டில் பணிப் பெண் வேலைக்கு ராகேஷ் சேர்த்துள்ளான்.

கணவன் மனைவி இருவரும் கலைவாணி வீட்டிலேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில், கலைவாணியிடத்தில் ஏராளமான நகைகள் இருப்பதை ராகேசும் அவன் மனைவி ரேவதியும் தெரிந்து கொண்டனர். தொடர்ந்து இரு நாள்களுக்கு முன்பு கலைவாணியை இருவரும் சேர்ந்து கை கால் வாய் கட்டி போட்டு இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர், வீட்டில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ, 10,000 பணத்தை திருடி சென்றுள்ளனர். மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர். ராணிப்பேட்டை வாலாஜாபாத் போன்ற பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த நிலையில், காணாமல் போன தம்பதி பெங்களூரில் இருப்பதாக தகவர் கிடைத்தது. உடனடியாக , அங்கு சென்ன தனிப்படை போலீஸார் கே. ஆர் புரத்தில் பதுங்கியிருந்த தம்பதியை கைது செய்தனர. பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து அவர்களிடத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது, '' வீட்டு வேலைக்கு மற்றும் காவலாளி வேலைக்கு யாரை சேர்ந்தாலும் காவல்துறையிடம் தகவல் கூற வேண்டும். ஆதார்கார்டு , வாக்காளர் அட்டையின் ஜெராக்ஸ்களை வாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் . அப்போதுதான், எங்களால் தகுந்த பாதுகாப்போ அல்லது உதவிக்கோ உடனடியாக வர முடியும் என்கின்றனர்.

பரிதாபப்பட்டு தங்குவதற்கு இடம் கொடுத்தும் வேலையும் கொடுத்து பார்த்துக் கொண்ட கலைவாணியை தம்பதி கொலை செய்த சம்பவம் மாதவரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments