தமிழகம் என்று சொன்னால் தொழில் நிறுவனங்கள் ஓடிப் போகும் நிலை தற்போது உள்ளது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பாழ்பட்டும், பின்தங்கியும் இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை திருநின்றவூரில் திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி தொகுதி ஆ.கிருஷ்ணசாமி, திருத்தணி தொகுதி வேட்பாளர் சந்திரன், ஆவடி தொகுதி வேட்பாளர் நாசர் ஆகியோருக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சென்னை என்பது திமுகவின் கோட்டை என்று கூறியவர், சென்னையில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
விவசாயத்தைப் பொறுத்தவரை 20 மாநிலங்களில் தமிழகம் 19வது இடத்தில் இருப்பதாகக் கூறிய ஸ்டாலின், பல்வேறு சாதனைகளுக்காக திமுக ஆட்சியில் வாங்கிய விருதுகளையும் அவர் பட்டியலிட்டார்.
தமிழ்நாடு என்று சொன்னால் தொழில் நிறுவனங்கள் ஓடிப் போகும் நிலை தற்போது உள்ளதாகக் குற்றம் சாட்டிய ஸ்டாலின், தான் தொழில்துறை அமைச்சராக இருந்த போது ஸ்ரீபெரும்புதூர் முதல் சென்னை காஞ்சிபுரம் வரையிலும், சென்னையில் இருந்து சோழிங்கநல்லூர் வரை பல்வேறு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படாததால் இன்றைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா 2வது அலை தொடங்கியுள்ளதால் அனைவரும் தயவு செய்து முகக்கவசம் அணிந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.
Comments