திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் கலைஞர் பிறந்தநாளன்று கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்கப்படும்: மு.க. ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் கலைஞர் பிறந்தநாளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்துள்ளார்.
சென்னை திருநின்றவூரில் திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி தொகுதி ஆ.கிருஷ்ணசாமி, திருத்தணி தொகுதி வேட்பாளர் சந்திரன், ஆவடி தொகுதி வேட்பாளர் நாசர் ஆகியோருக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நீட் தேர்வு மற்றும் இந்தியைத் திணிக்க நடக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று, கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும் விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறினார்.
தொடர்ந்து ஆவடி, பூவிருந்தவல்லி, திருத்தணி மற்றும் திருவள்ளூர் தொகுதிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் நடக்க உள்ள நலத்திட்டப் பணிகள் குறித்தும் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார்.
Comments