மக்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் தாராளமாக நிதி வழங்கி வருகிறது அதிமுக அரசு: முதலமைச்சர்

0 2201
மக்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் தாராளமாக நிதி வழங்கி வருகிறது அதிமுக அரசு: முதலமைச்சர்

தமிழக விவசாயிகளை கண்ணின் இமை போல அதிமுக அரசு பாதுகாத்து வருவதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது தாத்தா காலத்தில் இருந்தே தாம் விவசாயம் செய்து வருவதாகக் கூறினார்.

திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எப்பொழுதெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அதிமுக அரசு மக்களுக்கு தாராளமாக நிதி வழங்கி வருகிறது என முதலமைச்சர் தெரிவித்தார்.

 தமிழக வரலாற்றில் முதல் முறையாக வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான் என்று கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு திட்டம் மூலம் 9300 கோடி ரூபாய் பெற்றுத் தரப்பட்டுள்ளது என்றார். தனது தாத்தா காலத்தில் இருந்தே விவசாயம் செய்து வருகிறேன் என்று கூறிய முதலமைச்சர், விவசாயம் தனது தொழில் என்றும் கூறினார்.

 தமிழகம் 100 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உணவு தானிய உற்பத்தி செய்துள்ளது என்றும், விவசாயிகளுக்கு அரசு எதுவுமே செய்யாமல் எப்படி 100 லட்சம் மெட்ரிக் டன் உணவுப் பொருள் உற்பத்தி செய்ய முடியும்? என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சியினருக்கு கேள்வி எழுப்பினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆரணியை பிரித்து புதிய வருவாய் மாவட்டமாக அறிவிக்கப்படும் என முதலமைச்சர் கூறினார்.

 திருவண்ணாமலை மாவட்ட சுற்றுப்பயணத்தில், திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, ஆரணி, போளூர், கலசப்பாக்கம், செங்கம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி உள்ளிட்ட தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கும் அவர் வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments