முகக்கவசம் அணியாமல் வந்த இளைஞர்: அபராதம் செலுத்தாமல் சாலையில் அமர்ந்து தர்ணா!

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் முகக்கவசம் அணியாமல் வந்த இளைஞருக்கு சுகாதாரத்துறையினர் 200 ரூபாய் அபராதம் விதித்த நிலையில், அதனை கட்ட மறுத்த அந்த இளைஞர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
வேடசந்தூர் ஆத்துமேட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார துறையினர் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த இளைஞருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து முகக்கவசத்தை வழங்கினர். அபராதத்தை கட்ட மறுத்த அந்த இளைஞர் சுகாதாரத்துறையினர் லஞ்சம் வாங்குவதாக கூறி, சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அந்த இளைஞருக்கு ஆதரவாக ஒருவர் குரல் கொடுத்த நிலையில், இதனால் ஆத்திரமடைந்த வட்டார மருத்துவ அலுவலர் பொன் மகேஸ்வரி உயிரை பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்காக பணியாற்றும் தங்களை லஞ்சம் வாங்குவதாக கூறுவதா என பொங்கி எழுந்தார்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இதனையறிந்த அந்த இளைஞர் அங்கிருந்து தந்திரமாக தப்பிச்சென்றார்.
Comments