தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு

0 1310
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு

மிழகத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியாகிறது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை பொதுத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல், ஏப்ரல் 6ல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல், 12ம் தேதி துவங்கி 19 ஆம் தேதி நிறைவடைந்தது.

தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மொத்தம் ஏழாயிரத்து 155 வேட்பு மனுக்களும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 23 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில், வெளிமாநில தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகளும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் மும்முரமாக ஈடுபட்டனர்.

விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்யாத, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காத, பலரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தகுதியான மனுக்கள் ஏற்கப்பட்டன.

பரிசீலனைக்குப்பின் சுமார் 2 ஆயிரம் பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதேபோல் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோவை தெற்குத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பபட்டன.

இதே போல் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி, திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான், கோவில்பட்டியில் அமமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

மனுவை வாபஸ் பெற விரும்புவோர், நாளை மாலைக்குள் திரும்பப் பெறலாம். நாளை மாலையில், சுயேச்சை வேட்பாளர்களுக்கு, சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments