வேட்பு மனு பரிசீலனை நிறைவு தகுதியான மனுக்கள் ஏற்பு!

0 1350
வேட்பு மனு பரிசீலனை நிறைவு தகுதியான மனுக்கள் ஏற்பு!

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் பரிசீலனை முடிந்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் மனுக்கள் உட்படத் தகுதியான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மொத்தம் ஏழாயிரத்து 155 வேட்பு மனுக்களும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 23 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பரிசீலனை தொகுதிகள் தோறும் இன்று நடைபெற்றது.

வேட்பு மனுக்களில் அனைத்து விவரங்களும் உள்ளனவா? முறையாகச் சான்றொப்பம் பெறப்பட்டுள்ளனவா? என்பது குறித்துத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலித்தனர். அனைத்து விவரங்களும் முறையாக உள்ள மனுக்கள் தகுதியானவை எனக் கூறி ஏற்கப்பட்டன. முறையாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதேபோல் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோவை தெற்குத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதே போல் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி, திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான், ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக மாநிலத் தலைவர் முருகன், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments