படுத்து உருண்டாலும் போட்டியிட முடியாது..! தகுதியிழந்த வேட்பாளர்கள்
நெல்லை சட்டமன்றதொகுதியில் போட்டியிடும் அமமுக, சம.க மற்றும் சுயேட்சை ஆகிய மூவரின் வேட்புமனுக்கல் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சுயேட்சை வேட்பாளர் படுத்து உருண்டு ரகளையில் ஈடுபட்டார்
நெல்லை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது அமமுக வேல்பாளர் பாலகிருஷ்ணனின் வேட்புமனுவுக்கு முன் மொழிந்தவர்கள் வேறு தொகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அவர் மவுனமாக அங்கிருந்து வெளியேறினார்.
சமத்துவமக்கள் கட்சியின் வேட்பாளர் அழகேசனின் வேட்பு மனு தவறாக நிரப்பபட்டிருப்பதாக சுட்டிக்காட்டி தள்ளுபடி செய்யப்பட்டது. அதே போல சுயேட்சையாக களமிறங்கிய சுந்தரனார் மக்கள் இயக்க நிர்வாகி மாரியப்ப பாண்டியனின் வேட்பு மனுவில் வழக்கு விவரம் மறைக்கப் பட்டுள்ளதாக கூறி அவரது வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மாரியப்ப பாண்டியன் ஆவேசமானார்
மாரியப்ப பாண்டியனுடன் சேர்ந்து சமத்துவமக்கள் மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசனும் தனக்கும் நீதி வேண்டும் என குரல் கொடுத்தார்.
அலுவலகத்திற்குள் நீண்ட இருக்கை போடப்பட்டிருந்த நிலையில் தனக்கு அமர்வதற்கு இருக்கை போடப்படவில்லை என கூறி தரையில் அமர்ந்தும், படுத்து உருண்டும் அட்ராசிட்டி செய்தார்.
அவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிவிட்ட நிலையில் தனக்கு நீதி கீடைக்கவில்லை என்றால் தீக்குளிப்பேன் என்று எச்சரித்த மாரியப்ப பாண்டியனை வெளியேற்ற தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை பவ்யமாக வெளியே அனுப்பி வைத்தனர்
வேட்புமனு பரிசீலனையில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதக்கல் செய்யும் போதே செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து முன் கூட்டியே அதிகாரிகள் விளக்கினால் போட்டியிட ஆர்வமாக வேட்புமனுதாக்கல் செய்யும் வேட்பாளர்களிடம் இப்படிப்பட்ட ஏமாற்றங்கள் தவிர்க்கப்படும் என்கின்றனர் வாய்ப்பிழந்த கட்சியினர்..!
Comments