சாலையில் சிதறி கிடக்கும் பயன்படுத்திய கொரோனா கவச உடைகள்... அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்!

0 2240
சாலையில் சிதறி கிடக்கும் பயன்படுத்திய கொரோனா கவச உடைகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் நாகையில் பயன்படுத்தப்பட்ட கொரோனா கவச உடைகள் சாலை முழுவதும் சிதறிக் கிடந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனா தாக்கத்தால் தற்பொழுது மீண்டும் அதன் தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் நாகையில் தனியார் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட கொரோனா கவச உடைகள் நடுரோட்டில் வீசபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகைபட்டினம் மாவட்டம் நீலா மேல வீதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் கொரோனா கவச உடைகள், அங்கு வாசல் பகுதியில் நாகை நகராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று மருத்துவமனையில் பயன்படுத்தி வந்த கொரோனா கவச உடைகள் குப்பைத்தொட்டியில் போடப்பட்டது. ஆனால் அவைகள் காற்றில் பறந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்லும் சாலையில் சிதறி கிடந்தது. மேலும் சாலையில் கொட்டி கிடக்கும் இந்த பயன்படுத்தப்பட்ட கொரோனா உடைகளை அங்கு வந்த மனநலம் பாதிக்கபட்ட பெண் ஒருவர் எடுத்து செல்லும் காட்சி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

பயன்படுத்தப்பட்ட கொரோனா கவச உடைகளை கூடுதல் கவனம் செலுத்தி கையாள வேண்டிய மருத்துவமனை நிர்வாகமே, அலட்சியமாக செயல்பட்டது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனையடுத்து கொரோனா தடுப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீதும், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாத நாகை நகராட்சி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments