திட்டங்களை அறிவிப்பதும் நானே, தொடங்கி வைப்பதும் நானே..! விமர்சனங்களுக்கு முதலமைச்சர் பதில்

0 2064
அதிமுக ஆட்சியில் தமிழகம் சட்டம்-ஒழுங்கில் முதல் மாநிலமாக திகழ்வதாக கள்ளக்குறிச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் தமிழகம் சட்டம்-ஒழுங்கில் முதல் மாநிலமாக திகழ்வதாக கள்ளக்குறிச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக கூட்டணி, வலிமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி என்று குறிப்பிட்ட அவர், திமுக கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி என்றார். விவசாயிகளை கேலி கிண்டல் செய்யும் மு.க.ஸ்டாலின், தன்னை ஒரு போலி விவசாயி என விமர்சிப்பதாகவும், இத்தகைய ஆராய்ச்சிக்கு அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

அதிமுக ஆட்சியில் எண்ணற்ற நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், அதை மறைத்து மு.க.ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரம் செய்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். தான் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, அதை முடிந்த பிறகு தொடங்கியும் வைப்பதாகவும் அவர் கூறினார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே திமுகவினர் அராஜகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர் என்றும், ஆட்சியில் இருந்போது திமுக நல்லது எதுவுமே செய்யாத காரணத்தினால் தான் 10 ஆண்டுகளாக வனவாசம் அனுபவிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அதிமுக ஆட்சியில் தமிழகம் சட்டம்-ஒழுங்கில் முதல் மாநிலமாக திகழ்வதாகவும், ஜாதி, மதச்சண்டைகள் இல்லாமல் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய மோட்டார்களுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் என அதிமுக அரசு மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாக திகழ்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

சங்கராபுரம் தொகுதியில் தேர்தல் பிரசசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. வேட்பாளர் ராஜாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

இதைத் தொடர்ந்து ரிஷிவந்தியம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.கே.டி.சி. சந்தோஷை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

பின்னர் திருக்கோவிலூர் பா.ஜ.க. வேட்பாளர் கலிவரதனை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதலமைச்சர், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிந்த பிரதமரின் ஆசிபெற்ற வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதன் பின்னர் உளுந்தூர் பேட்டை அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

விழுப்புரம் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும், அதிமுக வேட்பாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகத்தை ஆதரித்து, விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குச்சேகரித்தார். அதிமுக வெற்றிக் கூட்டணி என்பதால், எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில், 30 ஆண்டு காலம் ஆட்சியில் செய்த ஒரே இயக்கம் அதிமுக தான் என்றும், இ.பி.எஸ் கூறினார். முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் இயங்குகின்ற ஒரே அரசாக, ஆளும் அதிமுக அரசு விளங்குவதாக, முதலமைச்சர் தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments