பணி செய்ய விடாமல் இடைஞ்சல் ... தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட டிராபிக் எஸ்.ஐ!

0 6682
தரையில் படுத்து கிடக்கும் எஸ்.ஐ

ஆத்தூரில் வேட்பு மனு தாக்கலின் போது, பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி சாலையில் படுத்து டிராபிக் எஸ்.ஐ போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக சின்னதுரை போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்ய நிர்வாகிகள், தொண்டர்களுடன் நேற்று ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே சின்னத்துரை வந்தார் . சில நிர்வாகிகள் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே கடந்து செல்ல முயற்சித்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரவி இந்த வழியில் யாரும் செல்லக்கூடாது. வேட்பாளருடன் சிலர் மட்டுமே செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த சமயத்தில் காவல் உதவி ஆய்வாளர் ரவிக்கும், சில தொண்டர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது .இதனால் கோபமடைந்த ரவி பேரிகாட்டை இழுத்து வந்து சாலையில் மறித்து வைத்தார். ஆத்திரமடைந்த தொண்டர்கள் ரவியை இடித்து தள்ளி விட்டு வேகமாக செல்ல தொடங்கினர்.

இதனால், ஆவேசமடந்த ரவி தன்னை பணியை செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாலையில் கீழே படுத்து கொண்டார். போக்குவரத்து உதவி ஆய்வாளரே போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ரவியை சமாதானம் செய்தனர்.அப்போது, ரவி காவல்துறை அதிகாரிகளிடம் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என தடுப்பு கம்புகளை போட்டேன் ஆனால் சிலர் தன்னை தள்ளி விட்டு சென்று விட்டனர் . அப்படி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பின்னர் காவல்துறை உயரதிகாரிகள் ரவியை சமாதானப்படுத்தி வேறு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வைத்தனர். இந்த பிரச்சினை முடிந்த பிறகு திமுக வேட்பாளர் சின்னதுரை தாலுகா அலுவலகம் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரவி ஏன் கீழே படுத்து புரண்டு ரகளை செய்தார் என்று விசாரிக்க சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா  விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments