இளைஞருக்கு பெண் கொடுக்க மறுப்பு: 8 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி!

0 5064
பலியான குழந்தை மற்றும் இளைஞர் சிவசங்கரன்

பெண் கொடுக்க மறுத்த காரணத்தினால் ஏற்பட்ட தகராறில் 8 மாத பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மகிழடியை சேர்ந்த ரசல்ராஜ் என்பவரின் மகள் ஏஞ்சலின் . இவரின் கணவர் பெயர் ஆனந்த் செர்லின். இந்த தம்பதிக்கு அக்ஷயா குயின் 8 மாத குழந்தை உள்ளது. ஏஞ்சலினும் ஆனந்தும் வெளிநாட்டில் பணி புரிந்து வந்துள்ளனர். இதனால், குழந்தை  தாத்தா ரசல்ராஜ்- பாட்டி எப்சிபாய் அரவணைப்பில் சொந்த ஊரில் வளர்ந்துள்ளது. ரசல்ராஜ் மகிழடியில் பெந்தேகோஸ்தே சபை நடத்தி வருகிறார். இவரின் மற்றோரு மகள்  ரோஸ் பிளசி கோவையில் நர்ஸ் வேலை பார்த்து வந்துள்ளார். இவரை ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவர் காதலித்து வந்துள்ளார்.

சிவசங்கரன் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் ரசல்ராஜ் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சிவசங்கரன் ரசல்ராஜ் வீட்டுக்கு வந்த  ரோஸ் பிளசியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சிவசங்கரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரசல் ராஜ், எப்சிபாய் ஆகியோரை வெட்ட முயன்றுள்ளார். இதில்,  அருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை அக்ஷயா குயின் மீது வெட்டு விழுந்துள்ளது. சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக இறந்து போனது. 

 இந்த சம்பவத்தில் ரசல் ராஜ், எப்சிபாய் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.  ரசல்ராஜ் நெல்லை மருத்துவமனையிலும் எப்சிபாய் நாகர்கோவில் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவசங்கரனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிவசங்கரனுக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments