தீவிரமடைந்தது தேர்தல் பிரசாரம்... தேர்தல் நாள் நெருங்குவதால் வாக்கு சேகரிக்கும் பணி மும்முரம்...

0 1871
தீவிரமடைந்தது தேர்தல் பிரசாரம்... தேர்தல் நாள் நெருங்குவதால் வாக்கு சேகரிக்கும் பணி மும்முரம்...

தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தொகுதிகள் தோறும் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சென்னை தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கருணாநிதி தீவிர தேர்தல் பிரச்சாரம்

சென்னை தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கருணாநிதி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட கோடம்பாக்கம், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சத்யா போட்டியிடுகிறார்.

பழனி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவி மனோகரன் அப்பகுதியில் தீவிர வாக்குசேகரிப்பு

பழனி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவி மனோகரன் அப்பகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சூளைமேடு தெரு, ஆசாத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரித்த ரவி மனோகரனுக்கு சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர். 

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமி தீவிர வாக்கு சேகரிப்பு 

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பழங்காநத்தம், வசந்தம் நகர், பெத்தானியாபுரம், அரசரடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அவர்  மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய முனியசாமி, மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால்  தொழிலாளர்களுக்கு வட்டியில்லாத மின் பைக்குகள், வீடுதோறும் கணினி வழங்கப்படும் எனவும் கூறினார். 

பெரியோர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தானேஷ் என்கிற முத்துக்குமார் பெரியோர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கதிர் நரசிங்கபெருமாள் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்த பின்னர் சீத்தப்பட்டி, பால்மடைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வாக்கு சேகரித்த தானேஷ்-க்கு பட்டாசு வெடித்தும் பொன்னாடை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருண் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு 

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருண் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். முன்னதாக பூலாவரியில் உள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சமாதிக்குச் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்று, வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக் கொண்டனர். கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

நடிகை விந்தியா ஸ்ரீவில்லித்தூர் அதிமுக வேட்பாளர் மான்ராஜுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு 

ஸ்ரீவில்லித்தூர் அதிமுக வேட்பாளர் மான்ராஜுக்கு ஆதரவாக, கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரும் நடிகையுமான விந்தியா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஸ்ரீவில்லிப்புத்தூர் பேருந்து நிலையம் அருகே, இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டிய அவர், எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக ஆக்குமாறு பிரச்சாரம் செய்தார். 2016இல் ஜெயலலிதாஅறிவித்த திட்டங்கள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி காட்டியதாக அவர் கூறினார். விந்தியாவுடன் சேர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பிரச்சாரம் செய்தார்.

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பு 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆண்டாள்புரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 10 ஆண்டுகளாக அமைச்சர் பதவியில் இருந்த போது விருதுநகர் மாவட்டத்துக்கு செய்த திட்டப்பணிகளை பட்டியலிட்டு பேசினார். தொடர்ந்து, பேசிய அவர், ராஜபாளையம் பகுதி ஒரு ஆன்மீக பூமி என்றும், கோயில்கள் அதிகளவில் உள்ளது என்றும் குறிப்பிட்டர். மேலும், ராஜபாளையம் இனிமேல் நான் ஆளும் ராஜா ஆலயம் எனவும் அமைச்சர் வர்ணித்தார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் புனித மைக்கல் தேவாலயத்தின் ஆயரை சந்தித்து வாக்கு சேகரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, புனித மைக்கல் தேவாலயத்தின் மறைமாவட்ட ஆயரை சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். தேவாலயத்தில் இருந்து வெளியே வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, சிறுமி ஒருவர் உலக சிட்டுக்குருவி தினத்தைஒட்டி, சிட்டுக்குருவி வீட்டை பரிசளித்ததோடு, தேர்தலில் வெற்றி பெறவும் வாழ்த்தினார். 

ராயபுரம் தொகுதியில் சைக்கிள் ரிக்சாவில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.  துலுக்கானத்தம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர், தேர்தல் பிரச்சாரத்திற்கென வடிவமைக்கப்பட்டுள்ள சைக்கிள் ரிக்சாவில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக தேர்தல் அறிக்கை ஹீரோ என்றும், அதைக் கண்டு திமுக அஞ்சுவதாகவும் விமர்சித்தார்.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூர், ராமச்சந்திரா நகர், பஞ்சப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திமுக ஆட்சி அமைந்த 6 மாதத்திற்குள் எடமலைப்பட்டிபுதூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்து தரப்படும் எனவும், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். 

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் மல்லிகை பூ பறித்துக் கொண்டே வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா

மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா, மல்லிகை பூ பறித்துக் கொண்டே வாக்கு சேகரித்தார். திருப்பரங்குன்றத்தை அடுத்த சம்பக்குளம் மற்றும் சூரக்குளம் பகுதியில் மல்லிகை சாகுபடி நடத்தும் விவசாயிகளை சந்தித்து அவர் ஆதரவு திரட்டினார். அப்போது பூப்பறித்துக் கொண்டிருந்த பெண்களுடன் சேர்ந்து அவரும் பூப்பறித்தார்.

மல்லிகை பூக்களுக்கு உரிய விலை கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜன் செல்லப்பா உறுதி அளித்தார். வெற்றி பெற்றால் நீண்டநாள் கோரிக்கையான வாசனை திரவிய தொழிற்சால அமைக்க பாடுபடுவேன் எனவும் அவர் விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்தார்.

இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்களின் மத குருமார்களை சந்தித்து வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் எஸ் எம் சுகுமார்

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ் எம் சுகுமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஆகியோர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ராணிப்பேட்டை பகுதிகளிலுள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்களின் மத குருமார்களை சந்தித்து வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும் தொழுகைக்கு வருகை தந்த இஸ்லாமிய சகோதரிகளிடம் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பூந்தமல்லி தனி தொகுதி திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி மசூதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி அங்குள்ள மசூதிகளில் தொழுகையை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் பூந்தமல்லி சுற்று வட்டாரத்தில் உள்ள கடைகள் மற்றும் தெருக்களில் வாக்கு சேகரித்தவர் கட்டிட பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளியிடம் தனக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திண்ணை பிரசாரம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுரேஷ் குமார் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். பாண்டி, உப்பூர், ஆலங்காடு, இடுன்பாவனம், பின்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீட்டில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

காய்கறி வியாபாரம் செய்தும்,டீ போட்டுக் கொடுத்தும் மக்களிடம் பிரச்சாரம் செய்த கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்

காய்கறி சந்தைக்கு வந்த மக்களிடம் காய்கறி வியாபாரம் செய்தும், உடன்வந்தவர்களுக்கு ஆவின் பாலகத்தில்  டீ போட்டுக் கொடுத்தும் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி. பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். கரையாம்பாடி, ஆணைவாடி, பத்தியவாடி, கீழ்காலூர் உள்ளிட்ட கிராமங்களில் கூட்டணி கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து பிரச்சாரம் செய்தார்.

அருப்புக்கோட்டை  தொகுதி தேமுதிக வேட்பாளர் ரமேஷ் அமமுக உறுப்பினர்களுடன் இணைந்து வாக்கு சேகரிப்பு 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ரமேஷ் கூட்டணி கட்சியான அமமுக உறுப்பினர்களுடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.  புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலுக்கு வழிபட வந்தவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  

பழனி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதியில் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். செல்லபுரம், அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று ரவி மனோகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். 

சென்னை தி.நகர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தி நகர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை தி நகர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தி நகர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேற்கு மாம்பலம், அயோத்தியா மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

குடிநீர் உள்பட மக்களின் அடிப்படை தேவைகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் உழைத்து உள்ளதால் எந்த வித கூச்சமும் இன்றி வாக்கு சேகரிப்பேன் என்று சென்னை திருவிக நகர் தொகுதி திமுக வேட்பாளர் தாயகம் கவி தெரிவித்தார். கூட்டணி கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்களுடன் இணைந்து திரு.வி.க. நகர் தொகுதியில் தாயகம் கவி வாக்கு சேகரித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தனக்கு ஆதரவு திரட்டும்படி வேட்பாளர் கேட்டுக் கொண்டார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மாட்டு வண்டியில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட தேமுதிக வேட்பாளர் ஆறுமுக நயினார்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆறுமுக நயினார் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கூட்டணி கட்சியான அமமுக உறுப்பினர்களுடன் இணைந்து புதியம்புத்தூர் பேருந்து நிலையம் மற்றும் பஜார் சாலை வழியாக மாட்டு வண்டியில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

ஆவடியில் ஜெயின் சமூகத்தினரிடம் ஹிந்தியில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை அடுத்த ஆவடியில் அதிமுக சார்பில் மீண்டும் களமிறங்கும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், அப்பகுதியில் வசிக்கும் ஜெயின் சமூகத்தினரிடம் ஹிந்தி மொழியில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆவடியில் உள்ள ஜெயின் பவனிற்கு வந்த அமைச்சர் பாண்டியராஜன், ஜெயின முறை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர் சம்பளம் அனைத்தையும் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பேன் என்றார்.

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து தீவனூரில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், திமுக தலைவரின் வாக்குறுதிகள் சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும் என்றார். பெண்களுக்கு  1000  உதவித் தொகைக்கு பதிலாக உரிமைத்தொகையாக வழங்கப்படும் எனக் கூறினார்.

திருவாரூர் நன்னிலம் தொகுதியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவிர வாக்குசேகரிப்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் 3 வது முறையாக போட்டியிடும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.  நன்னிலம் தொகுதிக்குட்பட்ட எரவாஞ்சேரியில் பள்ளிவாசலில் தொழுகை முடிந்தபிறகு இஸ்லாமிய பெரியவர்களை சந்தித்தார். பின்னர் கடைத் தெருவில் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்து சென்ற அவர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.

சிறந்த கல்வி, தரமான மருத்துவம் வேண்டும் என்றால் மக்கள் விவசாய சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என சீமான் பிரசாரம்

சிறந்த கல்வி, தரமான மருத்துவம் வேண்டும் என்றால் விவசாய சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார். நாகர்கோவிலில் பேசிய சீமான், பணத்தை கொடுத்து வாக்கை வாங்கிவிடலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமே இருக்காது என்றார்.

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம்

திமுக ஆட்சி காலத்தில் நிலவி வந்த மின்சார தட்டுப்பாட்டை அதிமுக அரசு ஒரே ஆண்டில் நீக்கி விட்டது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில்  காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி  அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், தற்போது மின்சாரத்தை தமிழகம் தன்னுடையே தேவைக்கு எடுத்துக் கொண்டது போக வெளிமாநிலங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்றார். 

மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மல்லை சத்யாவை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம்

ஏழை மக்களின் கோரிக்கைகளும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்களும் ஸ்டாலின் முதலமைச்சரானதும் நிறைவேற்றப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மல்லை சத்யாவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய வைகோ, திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் வெளியிட்ட ஏழு திட்டங்களும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் என்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம்

பாமக வேட்பாளர் வெற்றி பெற்ற பிறகு 3 கூடை மாம்பழம் தமக்கு கொண்டு வர வேண்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் செல்வகுமாரை  ஆதரித்து மருத்துவர் ராமதாஸ் மங்கலம் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பெண்கள் வாக்கைப் பெற இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

தேர்தல் அறிக்கை என்ற பெயரில் ஏமாற்ற நினைப்பவர்களுக்கு மக்கள் ஏமாற்றத்தை தரவேண்டும் - அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்

தேர்தல் அறிக்கை என்ற பெயரில் ஏமாற்ற நினைப்பவர்களுக்கு மக்கள் ஏமாற்றத்தை தரவேண்டும் என்று  அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். நெய்வேலியில் பேசிய அவர், தமிழகம் கடனில் இருக்கும் போது உதவித் தொகையை எப்படி மக்களுக்கு கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். 

கம்பம், போடி ஆகிய தொகுதிகளில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் கம்பம், போடி ஆகிய தொகுதிகளில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சரை ஆதரித்து திரைப்பட இயக்குநர் மனோபாலா வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுகாவிற்கு மக்கள் வாக்களித்தால் அடுத்த 5 ஆண்டுகள் நிம்மதியாக வாழலாம் என மனோபாலா கூறினார்.

இதேபோல் கம்பம் தொகுதியில் போட்டியிடும் சையது கான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பண்ணைபுரம், தேவராம் உள்ளிட்ட இடங்களில் திறந்த வாகனத்தின் மூலம் வீதி வீதியாக சென்று அவர் வாக்குசேகரித்தார்.

வாக்காளர்கள் நேர்மையை ஆதரித்தால் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் எளிதில் வெல்வார்கள் - நடிகர் கமல்ஹாசன்

வாக்காளர்கள் நேர்மையை ஆதரித்தால் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் எளிதில் வெல்வார்கள் என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும்  சதீஷ் குமாரை ஆதரித்து பேசிய அவர், மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் மீது களங்கங்களை எப்படியாவது கற்பிக்க வேண்டும் எனும் முயற்சி நடந்துகொண்டே தான் இருக்கும் என்றார். 

நெசவு நெய்தும்,வீதி வீதியாக சென்றும் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்களர்களிடம் வாக்கு சேகரிப்பு 

கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் பிரச்சாரத்தின் போது நெசவு நெய்து வாக்கு சேகரித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பின்னர் வீதி வீதியாக சென்ற எம். ஆர். விஜயபாஸ்கர் வாக்களர்களிடம் வாக்கு சேகரித்தார்.

சிறுபான்மையின மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் அரசு அதிமுக ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் சுகுமார் வாக்கு சேகரிப்பு

சிறுபான்மையின மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் அரசு அதிமுக என்று கூறி ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுகுமார், மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து மசூதிகள் முன் நின்று இஸ்லாமியர்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கையினை வழங்கி வாக்கு சேகரித்தார்.

முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பாமக மற்றும் பாஜக தொண்டர்களுடன் வாக்கு சேகரிப்பு 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமிக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பசும்பொன், சடையநேந்தல், நந்திசேரி, பேரையூர், சாமிபட்டி, செங்கோட்டைபட்டி, பாக்குவெட்டி, கருங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பாமக மற்றும் பாஜக தொண்டர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பு 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய பகுதிகளான குரும்பபட்டி, மலப்பட்டி, நடுப்பட்டி, மற்றும் ஆண்டிப்பட்டிகோட்டை, உள்ளிட்ட கிராமங்களில் கரூர் காங்கிரஸ் பாரளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியுடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளரும் எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காட்டூர், பிரகாஷ் நகர் பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், தொண்டர்கள் ஆரவாரத்துடன் சென்ற எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

கோவை தெற்கு தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மேளதாளங்களுடன் சென்று வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் மேளதாளங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிவானந்தா காலனியில் துவங்கி டாடாபாத், காந்திபுரம் ஏழாவது வீதி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மூன்றாவது நாளாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வானதி சீனிவாசனுக்கு ஆரத்தி எடுத்து அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலு தீவிர வாக்கு சேகரிப்பு 

சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் த.வேலு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டுமிங் குப்பம் கடற்கரையோரம் உள்ள குடிசை உணவகத்தில் காலை உணவை முடித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அவர், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா திரை கவர்ச்சியை மட்டும் வைத்து ஒட்டு வாங்க முடியாது எனவும், நடிகை என்பதற்காக ஓட்டு போட்டது எல்லாம் அந்த காலம் எனவும் விமர்சித்தார்.

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவிற்கு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் காந்திராஜன்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காந்திராஜன், பிரச்சாரத்தை தொடங்கியதுமே அதிமுகவிற்கு வாக்கு சேகரித்ததால் ஆதரவாளர்கள் குழப்பமடைந்து மைக்கை ஆப் செய்தனர். முன்னதாக, நாகம்பட்டி கிராமத்திலுள்ள காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கிய திமுக வேட்பாளர் காந்திராஜன், கட்சியின் பெயரை மறந்து விட்டு, அதிமுக என உளறியதால், ஆதரவாளர்கள் குழப்பமடைந்தனர்.

குடியாத்தம் தொகுதியில் பீடி தொழிலாளர்களுடன் அமர்ந்து பீடி சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் பரிதா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பரிதா பீடி தொழிலாளர்களுடன் அமர்ந்து பீடி சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கல்லிச்சேரி பகுதியில் பீடி சுற்றும் தொழிலாளர்களை சந்தித்த அவர், தொழிலாளர்களுக்கு உதவியப்படி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து, பேரணாம்பட்டு, பங்களாமேடு உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்தும், விளையாட்டு மைதானத்தில் இருந்த இளைஞர்களை சந்தித்தும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரன்

திருவள்ளூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரன் தாம் வெற்றி பெற்றவுடன், திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ள அனைத்து வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அவர், திருவள்ளூர் உழவர் சந்தை அருகே அமைக்கப்பட்டுள்ள திமுக தேர்தல் பணிமனையை, கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியுடன் சேர்ந்து திறந்து வைத்தார்.

சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் நா.கார்த்திக் அப்பகுதியில் தனது வாக்கு சேகரிப்பைத் துவங்கினார்.நீலிக்கோணாம்பாளையம், எஸ்ஐஎச்எஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று முதல் நாளாக அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இத்தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் அவர், கூட்டணிக் கட்சியினருடன் மதச்சார்பற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொள்ளாச்சி நகர் பகுதியான வடுகபாளையம் வார்டு1, வார்டு 2 ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவர், அதிமுக மீண்டு வெற்றி பெற்றால் பொள்ளாச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் எனவும், அரசு பொறியியல் கல்லூரி கொண்டுவரப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

மதுரை தெற்கு தொகுதி திமுக கூட்டணியில் களமிறங்கும் மதிமுக வேட்பாளர் பூமிநாதன் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுரை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிடும் பூமிநாதன் அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நகைக்கடை பஜார், மஞ்சனகர தெரு, தெற்கு வாசல் உள்ளிட்ட பகுதிகளில் மேளதாளங்களுடன் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பூமிநாதனுக்கு அப்பகுதி மக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

மதுராந்தகம் தொகுதியில் திமுக கூட்டணியில் களமிறங்கும் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா தேர்தல் பிரச்சாரம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் களமிறங்கும் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மதிமுக துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யா, மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து, நடை பாதை வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரித்த அவர் அப்பகுதியிலேயே தொண்டர்களுடன் காலை உணவு அருந்தினார். 

மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமின் தீவிர தேர்தல் பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பெஞ்சமின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட முகப்பேர் பகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர் பெஞ்சமினுக்கு கரகாட்டத்துடன், மேள தாளங்கள் முழங்க, 108 தேங்காய் உடைத்தும், மலர்தூவியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. சின்னப்பன் தேர்தல் பத்திரிக்கையுடன், வெற்றிலை, பாக்கு வைத்து வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக எம்.எல்.ஏ. சின்னப்பன், வீடு வீடாக சென்று தேர்தல் பத்திரிக்கையுடன், வெற்றிலை, பாக்கு வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தரிசனம் செய்த அதிமுக வேட்பாளர், தாம்பூல தட்டில் தேர்தல் பத்திரிக்கையுடன் மேலகரந்தை கிராமத்தில் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார். அப்போது, அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை போற்றி புகழ்ந்து அடுக்குமொழியில் வசனம் பேசி வாக்கு சேகரித்த நடிகை விந்தியா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகை விந்தியா, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை போற்றி புகழ்ந்து அடுக்குமொழியில் வசனம் பேசி வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் பேசிய விந்தியா, விருதுநகரின் வீர சிவாஜி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என பஞ்ச் டயலாக் சொல்லி அமைச்சரை புகழவே, அவரும், தன்னடக்கத்தோடு திகைத்து போய் நின்றார்.

பால் போல் மனசும், பட்டாசு போல பேச்சும் கொண்டவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என அவரது துறையையும், சொந்த ஊரையும் குறிக்கும் வகையில் பேசிய விந்தியா, விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக எனும் ஆலமரத்தை தாங்கி நிற்கும் விழுது ராஜேந்திர பாலாஜி என புகழாரம் சூட்டினார்.

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவா.ராஜமாணிக்கம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கர்ணாவூர்பாமணி, உள்ளூர் வட்டம், மேல உள்ளுர் வட்டம் , புண்ணியக்குடி, குருவைமொழி ஆகிய கிராமங்களுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்று அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார். அவருடன் கூட்டணி கட்சி தொண்டர்களும் இருசக்கர வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டினர்.

உசிலம்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு 

உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அய்யப்பன், அப்பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேனி சாலை, முருகன்கோவில் தெரு, நந்தவன தெரு உள்ளிட்ட இடங்களில் வீதிவீதியாக சென்று அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த அய்யப்பனுக்கு சால்வை அணிவித்து அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

கடலூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத் தீவிர தேர்தல் பிரச்சாரம்

கடலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.சி.சம்பத் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  தொகுதிக்குட்பட்ட குமாரமங்கலம், செல்லஞ்சேரி, புதுக்கடை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தார். வருடத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர், வாஷிங் மெசின், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய் உள்ளிட்ட அறிவிப்பால் பெண்கள் மத்தியில் அதிமுகவிற்கு ஆதரவு பெருகி வருவதாக தெரிவித்தார். 

வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் தொண்டர்களுடன் சென்று தேர்தல் பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் தொண்டர்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வந்தவாசி நகரில் உள்ள பல்வேறு வார்டுகளில் கூட்டணி கட்சியினர் மற்றும் தொண்டர்களுடன் சென்ற அவர், மக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்ப்பளித்தனர்.

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தீவிர தேர்தல் பிரச்சாரம்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை நகரிலுள்ள திருவள்ளுவர் சிலை, திருக்கோவிலூர் ரோடு பகுதியிலுள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பழ வியாபாரி ஒருவரிடம் குறைகளை கேட்டறிந்த எ.வ.வேலு, அங்குள்ள டீ கடை ஒன்றி தேநீர் அருந்தினார். 

அதிமுக அறிக்கையினை பட்டியலிட்டு அமைச்சர் சீனிவாசனை அசர வைத்த பெண்கள்

திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் பிரச்சாரத்தின் போது, அவர் கூறுவதற்கு முன்பே அங்கிருந்த பெண்கள் அதிமுக அறிக்கையினை பட்டியலிட்டு அவரை அசர வைத்தனர். கோவிந்தாபுரத்தில் பிரச்சாரத்தின் போது, அதிமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களை திண்டுக்கல் சீனிவாசன் விவரிக்க முற்பட்ட போது, அவருக்கு முன்பாக கூட்டத்திலிருந்த பெண்கள் சிலர் அதனை பட்டியலிட்டனர். இதனையடுத்து மக்களிடம் இருந்து ஒருபோதும் தங்களால் தப்பிக்க இயலாது என சீனிவாசன் கூறவே கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம் வீடு வீடாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம், வீடு வீடாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட முத்தியால்பேட்டை, ஐயம்பேட்டை, கருக்குப்பேட்டை, திம்மராஜாம்பேட்டை என 20க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு தனது கூட்டணி கட்சியினருடன் சென்ற அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம், தேர்தல் அறிக்கையின் படி அனைவருக்கும் 100 சதவீதம் பொருட்கள் வழங்கப்படும் என உறுதியளித்து துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார்.

மேளதாளங்களுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர்

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பரஞ்சோதி அப்பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அத்தானியில் துவங்கி சீதேவிமங்கலம், காந்திநகர், எதுமலைரோடு உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேளதாளங்களுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவருக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு உதவி செய்து திருத்தணி தொகுதி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரிப்பின் போது 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு உதவி செய்தார். அமமுக கூட்டணியில் களமிறங்கும் தேமுதிக வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் திருவலாங்காடு, கொல்லகுப்பம், வெங்கடாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மண்வெட்டியால் சுத்தம் செய்து 100 நாள் திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு உதவினார்.

திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம்

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பத்மநாதனை ஆதரித்து அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர் பத்மநாதன்  உக்ர காளியம்மன் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.  அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் அவருடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர். 

கூட்டணிக் கட்சியினர் மற்றும் கட்சித் தொண்டர்களுடன் ஆதரவு திரட்டிய விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் 

விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா, தொகுதிக்கு உட்பட்ட அண்ணா வீதி, சேக்கிழார் தெரு உள்ளிட்ட பகுதிகளில்  நடந்து சென்று  மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டணிக் கட்சியினர் மற்றும் கட்சித் தொண்டர்களுடன் ஆதரவு திரட்டிய பிரபாகர ராஜாவை மக்கள் மலர் தூவி வரவேற்றனர். 

சைதாப்பேட்டை தொகுதியில் சைதை துரைசாமியை ஆதரித்து பா.ம.க. அன்புமணி ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பு 

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும், சைதை துரைசாமியை ஆதரித்து பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ், தண்ணீர் பற்றாக்குறையை தடுக்கவே, இலவச வாசிங்மெசின் வழங்கும் திட்டத்தை அதிமுக அறிவித்துள்ளது என்றார். இந்த சட்டமன்ற தேர்தலை விவசாயிக்கும், முதலாளிக்கும் இடையேயான போராக கருதுவதாக கூறிய அன்புமணி, 70 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விவசாயி முதலமைச்சராக வந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமிக்கு புகழாரம் சூட்டினார். 

திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தீவிர தேர்தல் பிரச்சாரம்

திருச்சி கிழக்கு தொகுதியில் களமிறங்கும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சியில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் மலைக்கோட்டை ,கீழப்புலிவார் ரோடு, சறுக்கு பாறைப் பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்ப்பளித்தனர். திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை எதிர்த்து அதிமுக சார்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும், அமமுக சார்பில் முன்னாள் கொறடாவான ஆர்.மனோகரனும் போட்டியிடுகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மன்மோகன் சிங் பொருளாதார கொள்கை பின்பற்றப்படும் - கே.எஸ்.அழகிரி

மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானால் மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கையை பின்பற்றுவார் எனக் கூறி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சென்னை திருவான்மியூர் நாகாத்தம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி அவர் பிரச்சாரத்தைத் தொடங்கினார். 

செங்கல்பட்டில் திமுக வேட்பாளர் எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதுனன் வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டில் திமுக சார்பில் போட்டியிடும் வரலட்சுமி மதுசூதனன் அப்பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இவர் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடும் நிலையில் குன்னவாக்கத்தில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு 100 நாள் திட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண்களில் ஒருவர் கடந்தமுறை திமுகவிற்கு நம்பி வாக்களித்தும் பேருந்து வசதி செய்து தரப்படவில்லை என  கேள்வி எழுப்பினர்.

அதற்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அந்த பெண்ணிடம் திமுக வேட்பாளர் உறுதி அளித்தார்.

சேலம் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

சேலம் தெற்கு தொகுதியில் களமிறங்கும் திமுக வேட்பாளர் சரவணன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அம்மாப்பேட்டை பகுதியில் ஆதரவாளர்களுடன் நடந்து சென்ற அவர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த கடைகளுக்கு சென்று தொழிலாளர்களை சந்தித்தும் வாக்கு சேகரித்தார்.

திருவெறும்பூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் ப.குமாருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பொதுமக்கள்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ப.குமார் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காட்டூர், கைலாஷ் நகர், கல்லணை பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் அவர் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ப.குமாருக்கு சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

பழனி தொகுதியில் பள்ளிவாசல் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்க முஸ்லீம் இளைஞர்கள் சிலர் எதிர்ப்பு 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளரை, பா.ஜ.க. கொடியுடன் ஓட்டுக் கேட்டு வரக்கூடாது எனக்கூறி இஸ்லாமியர்கள் சிலர் திருப்பி அனுப்பினர். பழனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ரவி மனோகரன் போட்டியிடுகிறார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பழனி நகர் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ரவிமனோகரன் பெரிய பள்ளிவாசல் தெருவுக்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது, ரவி மனோகரனை தடுத்து நிறுத்திய இஸ்லாமிய இளைஞர்கள் சிலர், பா.ஜ.க. கொடியுடன் ஓட்டுக்கேட்டு வரக்கூடாது எனக்கூறி கோஷம் எழுப்பினர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன் தனது ஆதர்வாளர்களுடன் வாக்கு சேகரிக்காமல் திரும்பிச் சென்றார்.

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கிரிக்கெட் பேட்ஸ்மேன் வேடம் அணிந்து வந்த சுயேட்சை வேட்பாளர்

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ரமேஷ் என்பவர் வேட்பு மனு பரிசீலனைக்கு கிரிக்கெட் பேட்ஸ்மேன் வேடம் அணிந்து வந்திருந்தார். தமக்கு ஒதுக்கப்பட்ட கிரிக்கெட் பேட் சின்னத்தை நினைவு கூறும் வகையில், கிரிக்கெட் பேட்ஸ்மேன் வேடம் அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கடந்த 12ம் தேதி காந்தி உடையணிந்து நாமக்கல் மாவட்டத்தின் முதல் சுயேட்சை வேட்பாளராக ரமேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கோட்டை அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரசாரம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும்
அதிமுக வேட்பாளர் தேன்மொழி சேகருக்கு நடிகை விந்தியா ஆதரவு
திரட்டினார். தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க திரைப்பட நடிகையும், அக்கட்சியின் தலைமைகழக பேச்சாளருமான விந்தியா, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வானதி சீனிவாசனுக்கு கமல்ஹாசன் ஒரு பொருட்டே அல்ல - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு கமல்ஹாசன் ஒரு பொருட்டே அல்ல என்றும் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் - பாஜக இடையே தான் போட்டி என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். கோவை ராம்நகர் பகுதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெறுவார் என்றார். 

புதுக்கோட்டை திமுக வேட்பாளர் மருத்துவர் முத்துராஜா வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் முத்துராஜா, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின், அப்பகுதியில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து வருவதை உணர்த்தும் விதமாக, வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு அடுப்பு ஊதி வாக்கு சேகரித்தார்.

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பரமசிவம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்
அதிமுக வேட்பாளர் பரமசிவம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எரியோடு பகுதியில் உள்ள விநாயகர் கோயில் சாமி தரிசனம் செய்த பின் அப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தொண்டர்களுடன் சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ள துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கினார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷணன் பிரச்சாரம்

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷணன் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  பொழிக்கரை, கேசவன் புத்தன் துறை, புத்தன்துறை, பள்ளம் உள்ளிட்ட  இடங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஆரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக - திமுக வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக - திமுக வேட்பாளர்கள், வேட்பு மனு பரிசீலனையின் போது ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். ஆரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும், திமுக சார்பில் எஸ்.எஸ்.அன்பழகனும், தேமுதிக சார்பில் ஜி.பாஸ்கரனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் முன்னிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, அதிமுக வேட்பாளர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும், திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.அன்பழகனும் பரஸ்பரம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அடிபட்ட வேங்கை நான் - நடிகர் மன்சூர் அலிகான்

அடிபட்ட வேங்கையாக கொங்கு நாட்டு மக்களின் மனதில் இடம் பெறுவேன்என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்‍.கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் அவரது வேட்புமனு இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. ,இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம்,திப்புசுல்தானின் புலி, தேசிய விலங்கான புலி, அடிப்பட்ட புலி என நடிகர் டி.ராஜேந்தரைப் போல் அடுக்கு மொழியில் பேசியதுடன்,காந்தியின் ரகுபதி ராகவ ராஜா ராம்" என்ற பாடலையும் பாடினார்‍.

செய்தியாளர்களை சந்தித்த பின்னர் அவருடன் ஒருவர் செல்பி எடுக்க முயல, அதற்கு பிடிகொடுக்காமல் குறு ஓட்டத்தை ஓடிய மன்சூரலிகானை, காரின்அருகே வழிமறித்த அந்த நபர் செல்பி எடுத்தார்.

செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளர் தூசி மோகன் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தூசி மோகன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெம்பாக்கம், திருப்பனங்காடு, பில்லாந்தாங்கல், சேலேரி, திருப்பனமூர் உள்ளிட்ட கிராமங்களில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

திருத்துறைப்பூண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சுரேஷ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலமருதூர், பிச்சன்கோட்டகம், கட்டிமேடு, ஆதிரங்கம், மேலகொருக்கை, பாமணி ஆகிய பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி சென்று அவர் வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் மக்கள் வரவேற்பு அளித்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்கள் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜேஜே எபினேசர் மேளதாளங்கள் முழங்க வீதி வீதியாக சென்று பொதுமக்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். தண்டையார்பேட்டை, இரட்டை குழி தெரு, கேசவன் தெரு, திலகர் நகர், சுனாமி நகர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்கள் காலில் விழுந்து ஆசி பெற்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு அளிக்கும் படி கேட்டு கொண்டார். பிரச்சாரத்தின் போது அவரை பார்த்து கையசைத்த சிறுவனுக்கு சால்வை அணிவித்தார்.

விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்‍. முதனை செம்பையனார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர்,
விருத்தகிரிகுப்பம், கோட்டேரி உள்ளிட்ட கிராமங்களில் வீதிவீதியாக வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். விருதாச்சலத்தை தனிமாவட்டமாக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து முரசு சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார்‍.

திருத்துறைப்பூண்டியில் திமுக கூட்டணி சார்பில் இ.கம்யூ வேட்பாளர் மாரிமுத்து வீதி வீதியாக நடந்து சென்று மாரிமுத்து வாக்கு சேகரிப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மணலி, குரும்பல், பழையங்குடி உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பிலும், பின்னர் வீதி வீதியாக நடந்து சென்றும் வாக்கு சேகரித்த அவர், தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். வாக்கு சேகரிக்க வந்த அவருக்கு மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

காட்டுமன்னார்கோவிலில் அதிமுக வேட்பாளர் எம்.எல்.ஏ முருகுமாறன் தேர்தல் பிரச்சாரம் 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அதிமுக வேட்பாளரும், எம்.எல்.ஏ.வு.மான முருகுமாறன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காட்டுமன்னார்கோவில் ஏற்கனவே போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ள முருகுமாறன் அங்கு மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் தொகுதிக்கு உட்பட்ட மோவூர், பிராயடி, மதகடி, தெற்கிருப்பு பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சங்கரன்கோவிலில் சாலையோரக் கடையில் தேநீர் அருந்தி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வி.எம்.ராஜலட்சுமி அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தளவாய்புரம், வேப்பன்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், அங்குள்ள ஒரு சாலையோரக் கடையில் தேநீர் அருந்தினார். பிரச்சாரத்தின் போது வி.எம்.ராஜலட்சுமிக்கு சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

திருவொற்றியூர் தொகுதியில் பெரியவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், கே.பி.சங்கர் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட எர்ணாவூர், சண்மூக புரம், பஜனை கோவில் தெரு, மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்த சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர், கே.பி சங்கருக்கு தொண்டர்கள் சால்வை, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

செங்கல்பட்டில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கூடலூர், களிவந்தபட்டு, கீழக்கரணை, கிழக்கு பொத்தேரி, திருக்கச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் பேரணியாக வந்த அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்  மக்களை சந்தித்து அதிமுக வாக்குறுதிகளை கூறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்ப்பளித்தனர்.

திருவாரூர் நன்னிலம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜோதிராமன் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜோதிராமன் அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்வபுரம்,ஆணைகுப்பம்,தட்டாத்திமூளை உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக திறந்தவெளி வாகனத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டணிக் கட்சியினருடன் இருசக்கர வாகனத்தில் வாக்கு சேகரித்த ஜோதிராமனுக்கு சால்வை அணிவித்து அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

பரமக்குடி திமுக வேட்பாளர் முருகேசன் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் முருகேசன் கிராமம் கிராமமாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொட்டிதட்டி, மந்தி வலசை, மஞ்சக்கொல்லை, முதலூர், செவ்வூர் உள்ளிட்ட 42 கிராமங்களுக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்‍. சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்து அவர் வாக்காளர்களிடம் வாக்குச் சேகரித்தார்‍.

திருச்சுழியில் அமமுக  வேட்பாளர் கே.கே.சிவசாமி தேர்தல் பிரச்சாரம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்  கே.கே.சிவசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆவியூரில்  பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் முன்னாள் எம்.எல்.ஏ சிவசாமி பிரச்சாரத்தை தொடங்கினார்.காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஆவியூர், மாங்குளம், குரண்டி, அரசகுளம், கீழஉப்பிலிகுண்டு உள்ளிட்ட  பகுதிகளில் அவர் ஆதரவாளர்களுடன் இணைந்து  குக்குர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பல்லாவரம் தொகுதியில் தேர்தல் அறிக்கையை கூறி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார். அனகாபுத்தூரில் வீடு வீடாக நடந்து சென்று ஆதரவு திரட்டிய அவர், இலவச வாஷிங் மிஷின், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், தாலிக்கு தங்கம் என பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள நலத்திட்டங்களை கூறி திருச்சுழி தொகுதியில்  திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தீவிர வாக்குச் சேகரிப்பு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் திமுக சார்பாக 3 வது முறையாக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்‍.
நெடுங்குளம், பனிக்க நேந்தல்,பாப்பணம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்‍. திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள நலத்திட்டங்களை எடுத்துக்கூறி, தங்கம் தென்னரசு மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

ஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா சந்தையில்  காய்கறிகளை எடை போட்டு கொடுத்து பிரசாரம்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா, பொதுமக்களிடம் காய்கறி விற்பனை செய்து, வாக்கு சேகரித்தார். அதிமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டு உள்ள திலகபாமா, வீதி, வீதியாகவும், வீடு, வீடாகவும்
சென்று, தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆத்தூர் காய்கறி சந்தைக்கு சென்ற வேட்பாளர் திலகபாமா, காய்கறி வாங்க வந்த பெண்களிடம் நூதன முறையில் ஆதரவு திரட்டினார்.

சென்னை எழும்பூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஜான் பாண்டியன்  தீவிர பிரச்சாரம் 

சென்னை எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஜான் பாண்டியன் சேத்துப்பட்டு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். துலுக்கானத்தமன் கோவிலில் வழிபாடு நடத்திய அவர் ஜகாநாதபுரம், மங்களாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் வாக்கு சேகரித்தார்.

ஆலங்குடி தொகுதியில் பெண்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மெய்யநாதன் 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மெய்யநாதன், பெண்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். திருக்கட்டளை, மேட்டுப்பட்டி, திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் ஆதரவு திரட்ட சென்ற திமுக வேட்பாளருக்கு, தொண்டர்கள் சால்வை அணிவித்து, அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரித்த அவர், திமுக ஆட்சி அமைத்தால் அனைத்து நலத்திட்டங்களையும் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தார். 

சிலம்பாட்ட கலையுடன் அதிமுக வேட்பாளர் ராமுவை வரவேற்ற தொண்டர்கள்

வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில் போட்டியிடும அதிமுக வேட்பாளர் வி.ராமுவை சிலம்பாட்ட கலையுடன் வரவேற்று தொண்டர்கள் ஆதரவு திரட்டினர். காட்பாடி, வள்ளிமலை கூட்ரோடு, கல்புதூர், கிளிதான்பட்டறை, குமரப்பா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு, ஆரத்தி எடுத்து தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் காட்பாடி உழவர் சந்தை அருகே தெலுங்கில் பேசி அவர் வாக்கு சேகரித்தார்.

கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் வீதி வீதியாக சென்று தேர்தல் பிரசாரம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தனி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பழையஜெயகொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட குப்புரெட்டிப்பட்டி, ரெட்டியபட்டி,லட்சுமணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதிகளிலும் அவர் சின்னத்தில் வாக்கு  சேகரித்தார். 

குளித்தலை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் தீவிர தேர்தல் பிரசாரம்

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மாணிக்கம் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட கே.பேட்டை, வதியம், மணத்தட்டை, வைகை நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினர்களுடன் வீடு வீடாக நேரில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

சென்னை மாதவரத்தில் அதிமுக வேட்பாளர் மாதவரம் மூர்த்தி வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

சென்னை மாதவரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார் . மஞ்சம் பாக்கம் பகுதிகளில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரம் விநியோகித்து இரட்டை இலை சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார். எம்எல்ஏவாக இருந்த போது இத்தொகுதியில் அடிப்படை வசதிகளோடு,வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தது போல் இந்த முறையும் செயல்பட்டு தொகுதியை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்ல உள்ளதாக உறுதியளித்து அவர் வாக்கு சேகரித்தார்‍.

குளித்தலையில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் தீவிர வாக்கு சேகரிப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சந்திரசேகர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேரூர், வயலூர், சிவாயம், போத்து ராவுத்தன்பட்டி, பஞ்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்றும், திறந்தவெளி ஜீப்பில் சென்றும் அவர் வாக்கு சேகரித்தார்.

தேர்தல் களத்தில் எதிரெதிராய் நிற்கும் நிலையில் வேட்பாளர்கள் செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்ட அதிமுக, ம.நீ.ம வேட்பாளர்கள்

தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் எதிரெதிராய் நிற்கும் நிலையில்,திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள், பரஸ்பரம் தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டனர்‍. வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையின் போது அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்பி,ப.குமார் மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முருகானந்தம் எதேச்சையாக சந்தித்துக்கொண்டனர்‍.அப்போது இருவரும் தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டனர்.

பரமக்குடியில் மேளதாளங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சதன்பிரபாகர் மேளதாளங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் ஏழு மற்றும் எட்டாவது வார்டுகளில் வீடு வீடாக சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இப்பிரச்சாரத்தின் போது சதன் பிரபாகருக்கு ஆரத்தி எடுத்து அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யுவராஜா தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யுவராஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வ.உ.சி. பூங்கா வளாகத்தில் செயல்பட்டுவரும் நேதாஜி காய்கறிச் சந்தைக்கு சென்ற அவர், காய்கறி மற்றும் பழ வியாபாரிகளை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி பிரசாரம் : ஆர்க்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலியுடன் உதயநிதி சந்திப்பு

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி,சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹாலில், ஆர்க்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலியை சந்தித்து, வாழ்த்து பெற்றார், உதயநிதியுடன் மத்திய செனனை மக்களவை திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அக்கட்சியின்
நிர்வாகிகள் உடன் சென்றனர். பின்னர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வீதி, வீதியாகவும், வீடு, வீடாகவும் உதயநிதி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் - டிடிவி தினகரன் 

அமமுக ஆட்சிக்கு வந்தால் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். கும்பகோணம் தொகுதி வேட்பாளர் பாலமுருகன், திருவிடைமருதூர் தொகுதி வேட்பாளர் அரசன் ஆகியோரை ஆதரித்து உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறினார்.

வன்னியர்களைப் போல் மற்ற சமூகத்தினருக்கும் இடஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை உத்திரமேரூர் அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரத்தை ஆதரித்து அன்புமணி ராமதாஸ்  பரப்புரை

வன்னியர்களுக்கு கிடைத்துள்ள பத்தரை சதவிதம் இடஒதுக்கீட்டைப் போல்,பின்தங்கிய மற்ற சமுதயங்களுக்கும் பெற்றுத் தர பாமக நடவடிக்கை மேற்கொள்ளும் என அந்த கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்‍. உத்திரமேரூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரத்தை ஆதரித்து வாலாஜாபாத்தில் பரப்புரை
மேற்கொண்ட அவர்,இதனைக் கூறினார்‍. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வரானவுடன்இந்த கோரிக்கைள் வலியுறுத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் அப்போது உறுதியளித்தார்.

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை கிராமம் கிராமமாக சென்று வாக்குசேகரிப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍.  புஞ்சை புகழூர், புஞ்சை தோட்டக்குறிச்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று தாமரை சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார்‍. ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும்,செயல்படும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து,மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்து அவர் வாக்கு சேகரித்தார்‍.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் திறந்த ஜீப்பில் சென்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தீவிர ஓட்டு வேட்டை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில்அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, நகரின் முக்கிய வீதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார், அதிமுக ஆட்சியின் பல்வேறு சாதனைகளையும், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல்வேறு முக்கிய அம்சங்களையும் பட்டியலிட்டார்.

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவன் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவன், ஆதரவாளர்களுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தூத்துக்குடி பொன்னகரம், கந்தசாமி புரம், பத்திரகாளியம்மன் கோவில் தெரு, 2ம்கேட் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். பொன்னகரம் ஐந்து மாவடியான் சுடலை ஆண்டவர் கோவிலுக்குச் சென்ற கீதா ஜீவனை வரவேற்ற பெண் பூசாரி ஒருவர், அவருக்கு விபூதி, குங்குமம் இட்டு வாழ்த்தினார்.

நாம் தமிழர் கட்சி இருக்கும்வரை பாஜக உள்ளே வராது என நம்புங்கள் - சீமான்

தாம் இருக்கும் வரை பாஜக தமிழகத்துக்குள் வராது என்று நம்புபவர்கள் மட்டும் தனக்கு வாக்களியுங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இவ்வாறு கூறினார்.

பாவூர்சத்திரம், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தமது கட்சி வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

மேட்டுப்பாளையம் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ கே செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍. கூத்தமண்டி மூலையூர் மாரியம்மன் கோவிலில் வழிபட்ட பின்னர், பல்வேறு பகுதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து இரட்டை இலைச் சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார்‍. வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடாமல் இருக்க வனத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டதைப் போல்,மக்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாக உறுதியளித்து அவர் வாக்கு சேகரித்தார்‍.

கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பன்னீர்செல்வம், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு, குப்பம், பட்டியந்தல் ஆகிய கிராமங்களில் நடந்து சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, பட்டாசு வெடித்து, ஆளுயுர மாலை அணிவித்து கிரீடம் சூட்டி இளைஞர்கள் வரவேற்பு அளித்த நிலையில், பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் ப. குமார் தீவிர ஓட்டு வேட்டை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கி உள்ள வேட்பாளர் குமார், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இத்தொகுதிக்கு உட்பட்ட காட்டூர், பாப்பக்குறிச்சி, பிலோமினாள் புரம் உள்ளிட்ட பகுதிகளில், வேட்பாளர் குமார், வீடு, வீடாக சென்று, வாக்கு சேகரித்தார். அந்தோணியார் தேவாலயத்தில் பங்கு தந்தை மற்றும் அருட் சகோதரிகளை சந்தித்து, ஆதரவு திரட்டிய வேட்பாலர் குமார், திருவெறும்பூரில், பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற பாடுபட உள்ளதாக அவர் உறுதி அளித்தார்.

முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் பல்வேறு கிராமங்களுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜகண்ணப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிடாத்திருக்கை, புனவாசல், மேலச்செல்வனூர், சித்திரங்குடி, ஏனாதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு வீதிவீதியாக திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பளித்தனர்.

துறையூர் தனி தொகுதியில் திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் தனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமார், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். துறையூர் தொகுதிக்கு உட்பட்ட நல்லியம்பாளையம் , முத்தையம்பாளையம் , பெருமாள் மலை அடிவாரம், கீழகுனுபட்டி, மேழகுன்னு பட்டி உள்ளிட்ட 25 கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று, வேட்பாளர் ஆதரவு திரட்டினார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் விளக்கி, துறையூர் தொகுதியில் தமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு, வேண்டுகோள் விடுத்தார்.

மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் பழனிசாமியை ஆதரித்து தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் பிரச்சாரம்

மயிலாடுதுறை சட்டசபை தொகுதி பாமக வேட்பாளர் பழனிசாமியை ஆதரித்து, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். சின்னக்கடை வீதியில் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தமிழக மக்களின் தேவையறிந்து முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் ஆட்சி செய்து வருகின்றனர் என்றார். மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை, தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

பழனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன் தீவிர வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவி மனோகரன், கொடைக்கானலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லபுரம்,அப்சர்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று, அதிமுக தேர்தல் வாக்குறுதியை எடுத்துரைத்து ரவி மனோகரன் வாக்கு சேகரித்தார்.

கோவை தெற்கு தொகுதியில் பேருந்தில் பயணம் செய்தும், வீதியில் இறங்கி கமல்ஹாசன் தீவிர ஓட்டு வேட்டை

கோவை - தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மக்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,பேருந்தில் ஏறி, பயணம் செய்து, பயணிகளிடம் வாக்கு சேகரித்தார். ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருக்கும் கமல்ஹாசன், காலையில், காந்தி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார். ஒரு கடையில் டீ குடித்த கமல்ஹாசன், பின்னர் மாநகர பேருந்தில் ஏறி, 40 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி, பயணம் செய்தார்.

சக பேருந்து பயணிகளிடம் உரையாடிய கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தமக்கு, டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்குமாறு, கேட்டுக் கொண்டார். வீதியில் இறங்கி, கமல்ஹாசன் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, தேவகோட்டையில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தாம் வெற்றி பெற்றால் தேவகோட்டைக்கு அரசு மேல்நிலைப் பள்ளி கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என ஹெச்.ராஜா வாக்குறுதி அளித்தார். அப்பகுதியிலுள்ள குடிசை வீடு ஒன்றுக்குள் சென்ற ஹெச். ராஜா, அவர்கள் கொடுத்த தேநீரைப் பருகினார்.

திருச்செந்தூரில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த நகைச்சுவை நடிகர் வையாபுரி 

திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து நகைச்சுவை நடிகர் வையாபுரி, வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில்தெரு, அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வையாபுரியுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தனது தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை வைத்துள்ளார் என்றும் அதனால் அவர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் வையாபுரி கூறினார். 

ஈரோட்டில் திமுக கூட்டணி கொ.ம.தே.க வேட்பாளர் பாலு வாக்கு சேகரிப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் கே.கே.சி.பாலு ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பெருந்துறை தொகுதியில் திமுக வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளதாகவும், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்திட அனைவரும் தயாராகியுள்ளதாகவும் பாலு கூறினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments