தங்கல் திரைப்படத்தில் வரும் போகட் குடும்பத்தில் நேர்ந்த சோகம்...

கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் அமீர்கான் நடித்து ஹிந்தியில் வெளிவந்த தங்கல் திரைப்படம் அமோக வெற்றி பெற்றது.
ஹரியானவை சேர்ந்த மகாவீர் சிங் போகட் என்ற மல்யுத்த வீரரின் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்தில் , ஆண் ஆதிக்கம் அதிகம் காணப்பட்ட மல்யுத்த போட்டிகளில் சாதிக்கத் துடிக்கும் கிராமத்துப் பெண்கள் இருவரது போராட்டங்களைக் குறித்துக் கூறப்பட்டிருக்கும்.
மத்திய அரசின் துரோணாச்சார்யா விருதைப் பெற்ற மகாவீர் சிங் போகட், தனது குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகளை மல்யுத்த களத்திற்குத் தயார் செய்து வருகிறார். அவரது மூத்த மகள் கீதா போகட் , 2010 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் தங்க பதக்கம் வென்றார். மேலும், ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீரர் என்ற பெருமையும் அவரையே சேரும்.
மகாவீர் சிங் போகட்டின் இரண்டாவது மகள் பபிதா குமாரி, 2012 ஆம் ஆண்டு நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும், 2014 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார்.
மஹாவீர் சிங்க் போகட்டின் சொந்த மகள்களை தவிர அவர்கள் உறவினர்களான வினேஷ் , பிரியங்கா மற்றும் ரித்திகா ஆகியோரும் மகாவீர் சிங் போகட்டிடம் பயிற்சி பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், போகட் குடும்பத்தில் ஒருவரான ரித்திகா, மாநில அளவில் நடந்த ஜூனியர் மல்யுத்த போட்டிகளில் அண்மையில் விளையாடினர். கடுமையான போட்டிக்கு பின்னர் இறுதிச் சுற்றில் அவர் தோல்வி அடைந்தார் . இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்த்த வகையில் அவரது உறவினர் வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில் ரித்திகா சடலமாக மீட்கப்பட்டார். போட்டிகளில் தோல்வியுற்றதால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ரித்திகா இறந்த செய்தி ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments