அமைதியாக சாமி தரிசனம்... பேட்டிக்கு சசிகலா மறுப்பு!

0 7869
ஏழைகளுக்காக தானம் வழங்கும் சசிகலா

பிரம்மஹத்தி தோஷ பரிகார தலமான திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் இன்று சசிகலா சுவாமி தரிசனம் செய்தார். பேட்டி தருவதற்கு அவர் மறுத்து விட்டார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சசிகலா தற்போது அரசியலில் இருந்து விலகியிருப்பதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து, அவர் எந்த மீடியாவையும் சந்திக்க வில்லை. பேட்டியும் கொடுக்கவில்லை. சென்னையில் தங்கியிருந்த ச சசிகலாவின் கணவர், நடராசனின் சொந்த ஊரான விளார் கிராமத்திலுள்ள குலதெய்வமான வீரனார் கோயிலில் நடராசனின் தம்பி பழனிவேலின் பேரக்குழந்தைகளுக்கு காதணிவிழாவில் பங்கேற்றார். இந்த கோயிலில் கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு நடராஜன் குடும்பத்தினர் இந்த கோயிலில் கிடா வெட்டி சாமி கும்பிட்டடனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடராசனுடன் திருமணமான புதிதில் இந்த கோயிலுக்கு சசிகலா சென்றுள்ளார். தற்போது, கணவர் மறைந்து விட்ட நிலையில், காதணி விழாவில் தனியாக கலந்து கொண்ட சசிகலா பழைய நினைவுகளில் மூழ்கியதாக சொல்கிறார்கள். தன் கணவர் வழி சொந்த பந்தங்களிடத்தின் மனம் விட்டு பேசியதாகவும் சொல்கிறார்கள்.

வரும் 20-ம் தேதி சசிகலா கணவர் நடராசனின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் வருகிறது. இந்த தினத்தில் சசிகலா விளார் சாலையில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் அருகே அமைந்துள்ள நடராசனின் நினைவிடத்துக்குச் சென்று மலர்தூவி மரியாதை செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. . இதற்காக நடராசனின் சமாதியை சுத்தப்படுத்தி அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, பிரம்மஹத்தி தோஷ பரிகார தலமான திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி இன்று சசிகலா சென்றார். சசிகலாவின் ஜனன நட்சத்திம் ரேவதி நட்சத்திரம் ஆகும். இந்த கோவிலில் தனி சன்னதி கொண்டு உள்ள 27 நட்சத்திர லிங்க திருமேனிகளில் ரேவதி நட்சத்திரம் கொண்ட சிவலிங்கத் திருமேனிக்கு சசிகலா சிறப்பு பரிகார தோஷ பூஜை நடத்தினார். பின்னர், மகாலிங்க சுவாமி, மற்றும் பெரிய நாயகி அம்மனை தரிசனம் செய்தார். தொடர்ந்து, சசிகலா மூகாம்பிகை சன்னதியிலும் வழிபாடு நடத்தினார். இதனால், சசிகலா மனம் சற்று ஆறுதலடைந்ததாக சொல்கிறார்கள். பின்னர், பொதுமக்களுக்கு குடை, சாம்பார் சாதம், தயிர்சாதம் உள்ளிட்ட பொருட்களை தானமாக வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து கார் மூலம் புறப்பட்டுச் சென்றார். அடுத்து எந்த கோவிலுக்கு செல்கிறார் என்கிற எச்நத விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதே வேளையில், தஞ்சையில் சசிகலாவின் நடவடிக்கைகளை , அவரை யார் யார் சந்திக்கிறார்கள் என்பது குறித்து தனக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டுமென்று அ.தி.மு.க வினருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments