திமுக ஆட்சி இருண்ட காலம், ஒளியேற்றியது அதிமுக அரசு: முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரம்

0 1859
திமுக ஆட்சி இருண்ட காலம், ஒளியேற்றியது அதிமுக அரசு: முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரம்

டந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் தமிழகம் இருண்டு கிடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின்மிகை மாநிலமாக ஆக்கியதன் மூலம் அதிமுக அரசு தமிழகத்திற்கு ஒளியேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் ரத்து செய்தது அதிமுக அரசுதான் என அவர் கூறினார்.

இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் அதிக கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், உயர்கல்விக்கு செல்வோர் விகிதமும் தமிழகத்தில்தான் அதிகம என்றும் முதலமைச்சர் கூறினார்.

இந்தியாவிலேயே தொழில் நிறுவனங்களுக்கு உகந்த மாநிலமாகவும் தமிழகம் திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த நான்கு வருடங்களாக ஆட்சியை கலைக்க, கட்சியை உடைக்க சூழ்ச்சித் திட்டங்களை மு.க.ஸ்டாலின் தீட்டிக் கொண்டிருந்தார் என்றும், அதனை தொண்டர்கள் ஆதரவோடு தவிடுபொடியாக்கியதாகவும் கூறினார்.

அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பச்சைப் பொய்கள் என்றும் அவர் சாடினார்.

நாகை அவுரித்திடலில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், அதிமுக வேட்பாளர் தங்க கதிரவனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பூம்புகார் தொகுதியில், தொடர்ந்து 3ஆவது முறையாகப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பவுன்ராஜை ஆதரித்து, செம்பனார்கோவில் கடைவீதியில் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

உணவு தானிய உற்பத்தி, போக்குவரத்து, கல்வி, சமூக நலத்துறை, உள்ளாட்சித் துறை என பல்வேறு துறைகளில் தமிழக அரசு தேசிய விருது பெற்று முன்மாதிரி மாநிலமாக திகழ்வதாக இ.பி.எஸ் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments