தமிழகம் முழுவதும் களைகட்டியது சட்டப்பேரவை தேர்தல் திருவிழா..! காலை முதலே வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டை

0 1575
தமிழகம் முழுவதும் களைகட்டியது சட்டப்பேரவை தேர்தல் திருவிழா..! காலை முதலே வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டை

சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தியதோடு, சைக்கிள் ரிக் ஷாவை ஓட்டி வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழி நெடுகிலும் பொது மக்கள் மலர் தூவி அமைச்சர் ஜெயக்குமாருக்கு வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்ததாக கூறுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முத்துராஜா, புதுக்குளம் பகுதியில் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரித்தார். இதன் பின்னர் அந்த பகுதியில் துப்புரவு பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்த அவர், அங்குள்ள டீ கடையில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்களிடமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார்.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திருச்சி மேற்கு தொகுதியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் பத்மநாதன் என்பவரும், அமமுக சார்பில் மனோகரனும் போட்டியிடுகின்றனர்.

சேலம் வடக்கு தொகுதியில் மீண்டும் போட்டியிடும்  திமுக வேட்பாளர் ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வழக்கறிஞர் ராஜேந்திரன் தில்லைநகர் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். மக்களிடையே நேரடியாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறி வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து, திறந்த வெளி வாகனத்திலும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட அப்துல் ரசாக் தெரு, திடீர் நகர், கோதாமேடு, சலவையாளர் காலனி, சலவைத்துறை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி படிப்பை பயில தாம் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் மா.சுப்பிரமணியன் போட்டியிடுகிறார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்.கே.பிரகாஷ் பொதுமக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோபிசெட்டிபாளையம் நகர பகுதிகளில் டார்ச் லைட்டுடன் தனது தொண்டர்களுடன் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் என்.கே.பிரகாஷ், அவ்வழியாக சென்ற பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் ஆதரவு திரட்டினார்.

அதிமுக சார்பில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும், திமுக சார்பில் ஜி.வி.மணிமாறனும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் களம் காண்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ, வில்லிசேரி கிராமத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தனர். பிரச்சாரத்தில் பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் எளிமையான முதலமைச்சர் இருப்பதாக தெரிவித்தார். 

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமுத்தேவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திண்டுக்கல் குமரன் திருநகர், அண்ணாநகர், லட்சுமி சுந்தரம் காலனி, அபிராமி நகர், உள்ளிட்ட தெரு வீதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எம்.ஜி.ஆர். வேடமணிந்த அமமுக தொண்டர் ஒருவர் தப்பாட்டம் மற்றும் டிரம்ஸ் இசைக்கு உற்சாகமாக நடனமாடினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், வாக்காளர்களுக்கு துண்டு போர்த்தி வாக்கு சேகரித்தார். புதிய பேருந்து நிலைய பகுதியில் பட்டாசு வெடித்து, ஆதரவாளர்களுடன் பிரசாரத்தை தொடங்கிய அவர், பூக்கடைவீதி, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், வியாபாரிகளுக்கு துண்டுபோர்த்தி வாக்கு சேகரித்தார். டீக்கடையில் தேநீர் அருந்தி, ஸ்வீட் கடையில் இனிப்பு சாப்பிட்டு ஆதரவு திரட்டினார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கு.ப.கிருஷ்ணன் மேலூர் காடைபிள்ளை அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தனது பிரசாரத்தை தொடங்கினார். திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தமிழகத்தை அதிமுக தான் ஆள வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதாக தெரிவித்தார். 

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாரதி புரம் ,சந்தைரோடு, முனியப்பன் கோவில் தெரு , என்விஜிபி சாலை ,சௌராஷ்ட்ரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவர், வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு இன்னும் பல்வேறு திட்டங்களை செய்து கொடுப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.பி.கிரி கூட்டணி கட்சியினரை சந்தித்து வாக்கு சேகரித்ததோடு, செல்பி எடுத்துக்கொண்டார்.

செங்கம் சட்டமன்றத் தொகுதி 2-வது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் கிரி, அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்த பின், செ.நாச்சிப்பட்டு, அன்வராபாத், குயிலம் ஆகிய கிராமங்களுக்கு சென்று கூட்டணி கட்சி தொண்டர்களை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.

சேலம் வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் அக்கட்சி வேட்பாளர் வெங்கடாசலம் பொதுமக்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சத்திரம் பகுதிகளில் தொண்டர்களுடன் நடந்து சென்று மக்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் வெங்கடாசலம், வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் கால்களில் விழுந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும், அப்பகுதியில் இருந்த டீக்கடையில் தொண்டர்களுடன் டீக்குடித்து மகிழ்ந்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்கு உடபட்ட காமராஜர் தெரு, லேக் ஏரியா , கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவரை சந்தித்து நலம் விசாரித்த எழிலன், அவருக்கு தேவையான மருந்துகளை பேப்பரில் எழுதி கொடுத்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் குஷ்பூ போட்டியிடுகிறார்

சென்னை தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கருணாநிதி தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட வடபழனி கோவில் தெரு, கங்கை அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சத்யா போட்டியிடுகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பிச்சாண்டி, வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவரை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். கீழ்களூர், மேக்களுர், சவரப்பூண்டி, காட்டுக்குளம், ராஜாபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட பிச்சாண்டி, திமுக அரசின் சாதனைகளையும் தேர்தல் அறிக்கைகளையும் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

விழுப்புரத்தில் 3வது முறையாக போட்டியிடும் அமைச்சர் சி.வி.சண்முகம் தொகுதிக்குட்டபட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குமளம் கிராமத்தில் வீதி வீதியாக நடந்து சென்று நேரடியாக மக்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக அரசின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்து கூறி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிராக திமுக வேட்பாளர் ஆர்.லட்சுமணன் களமிறங்குகிறார்.

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் திருவலாங்காடு மேற்கு ஒன்றியத்தில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். குளூர், காஞ்சிப்பாடி, கனகம்மாசத்திரம், பானம்பாகம், நெடும்பரம், ராகுந்தபுரம், அரும்பாக்கம் என  கிராமங்கள்தோறும் திமுக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், திமுகவினர் பட்டாசு வெடித்தும் வேட்பாளரை வரவேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பணமதிப்பிழப்பின் நடவடிக்கையின் போது, புதிய இந்தியா பிறக்கும் என பிரதமர் மோடி கூறியதாக சுட்டிக்காட்டினார். அவ்வாறு பிறந்த இந்தியாவை யாராவது பார்த்தீர்களா என்றும் கூட்டத்தை நோக்கி கேள்வி எழுப்பினார்.

பிரச்சாரத்தில் உதயநிதி பேச பேச அங்கிருந்தவர்களும் பதிலுக்கு பேசவே, என்னையை விட ஆளுங்கட்சிகள் மீது நீங்கள் தான் அதிக கோபத்தோடு இருப்பதாக தெரிவித்தார்.

கூட்டத்தில் பெண் ஒருவர் வேனில் இருந்து கீழே இறங்கி வந்து பேசுமாறு உதயநிதிக்கு கோரிக்கை விடுத்தார். அதற்கு எனக்கும் கீழே வந்து உங்கள் கூட கைக்குலுக்கி, செல்பி எடுக்கனும்னு ஆசைதான். ஆனால், கீழே வந்தால் என்னால அடுத்த பிரச்சாரத்திற்கு போக முடியாதே என நகைச்சுவையாக பதிலளித்தார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் மகேஷ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் மகேஷ்குமார்,கோனேரிக்குப்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். 

சென்னை வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக், பிரச்சாரத்தின் போது, அங்குள்ள சலூன் கடையில் இளைஞருக்கு முடி திருத்தி ஆதரவு திரட்டினார். வேளச்சேரி தொகுதியில் அதிமுக சார்பில் அசோக் போட்டியிடுகிறார். கடந்த ஒரு வாரமாக வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அசோக், இன்று, அங்குள்ள சலூன் கடையில் இளைஞருக்கு முடி திருத்தினார்.

எளிதில் அணுக கூடியவன் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இதுபோன்று வித்தியாசமான பிரச்சார யுக்திகளை கையாண்டு வருவதாக அசோக் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் சி.வி.எம்.பி எழில் அரசன் ரயில்வே கேட்டில் காத்திருந்த பொது மக்களிடம் வாக்கு சேரிப்பில் ஈடுபட்டார். அப்போது, சாலையை கடக்க காத்திருக்க வேண்டாம் புதிதாக ரயில்வே பாலம் மேம்பாலம் அமைத்து தரப்படும் என கூறி ஆதரவு திரட்டிய அவர், ரயில்வே தெருவோர டீக்கடையில் அமர்ந்து டீ அருந்தினார்.

பின்னர் ரயில்வே சாலை, அசோக் நகர் ஆகிய பகுதிகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி வாக்கு சேகரித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தின் திருக்கோவிலூர் தொகுதியின் திமுக வேட்பாளர் பொன்முடி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சந்தைப்பேட்டையில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்த பொன்முடி பின்னர், திருநங்கைகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது திருநங்கைகள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்று ஆதரவு திரட்டினார். திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 தொகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்களும் திமுக வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் எ.வ.வேலுவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன் நெற்பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்து பிரச்சாரம் செய்தார். வி.சாலைப் பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர், கொங்கராம்பூண்டி, மேலக்கொந்தை, மூங்கில்பட்டு, ஆசூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அசூர் பகுதியில் விளைநிலங்களில் விவசாய பணிகள் நடைபெற்று கொண்டிருபப்பதை பார்த்ததும் காரை விட்டு இறங்கியவர் நெற்பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தார்.

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில், அதிமுக தேர்தல் பணிமனையைத் அமைச்சர் திறந்துவைத்தார். பின்னர், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன், தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார். 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் கூட்டணி கட்சியினருடன்சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெருங்கோழி, சின்னமாங்குளம், கட்டியாம்பந்தல், காட்டுக்கொள்ளை, உள்ளிட்ட 25 க்கும் கிராமங்களில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தும்,அதிமுக அரசின் சாதனை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துச்சொல்லியும் ஆதரவு திரட்டினார்‍.

உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஐயப்பன் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து, மகாலிங்கபுரம், பெருமாள்பட்டி, நல்லொச்சான்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று, தமக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது பெண்கள் ஆரத்தி ஏடுத்து, மலர்களை தூவி, அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தனர். 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மருது அழகுராஜ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சிங்கம்புணரியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், நடக்க கூடாதது நடந்து விட்டது என்ற குட்டிக்கதையை நகைச்சுவையாக கூறியதுடன், அந்த கதையில் நடப்பதை போல திருப்பத்தூர் தொகுதியில்  15 ஆண்டுகளாக நடக்க கூடாதது நடந்துவிட்டது என கூறி அங்கு கூடியிருந்தவர்களை கலகலப்பூட்டினார்.

திருத்தணி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கோ.அரி, திருவாலங்காடு ஒன்றியம் வீர கொண்டாபுரத்தில் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர், திறந்த வேனில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறி அவர் ஆதரவு திரட்டினார். பிரச்சாரத்தின் போது மேளதாளத்துடன், பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.  

திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி. ஜி ராஜேந்திரன் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கனகம்மாசத்திரம் அரும்பாக்கம், நெடும்பரம், காஞ்சிபாடி, கூலூர், பனப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினருடன் வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்டினார். பிரச்சாரத்தின் போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து வரவேற்றனர்.

நன்றி மறந்தவர்களை பற்றி கவலைப்படாது, நல்ல மனம் உள்ளவர்களுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும் என, எம்ஜிஆர் பாடலை பாடி, அமைச்சர் கே.சி.வீரமணி, தேர்தல் பணியாற்ற கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார். குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா அறிமுக கூட்டம், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம், குடியாத்தத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் கே.சி.வீரமணி, எம்ஜிஆர்-ன் பிரபல பாடலை பாடிக்காட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜோதி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெம்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட மோரணம்,திருவேற்காடு, இராந்தம், பணமுகை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த வேனில்  சென்று வாக்கு சேகரித்தார். அப்போது திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலிபன், பிரச்சாரம் மேற்கொண்டார். பூக்கொல்லை பகுதி கடைவீதியில் வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து தேர்தல் வாக்குறுதிகள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரத்தை வழங்கி தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில் ஏறி பயணிகளிடமும் வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் தங்கமணி, தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பெருவாரியான மக்களின் அமோக ஆதரவு இருப்பதால், 160க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக வெற்றிப்பெறும் என, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். பிரச்சார இடைவேளையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் கேட்காமலே முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்றார். 

கோபிசெட்டிபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரும் பள்ளிக்கல்விதுறை அமைச்சருமான செங்கோட்டையன் கரட்டூர் மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவக்கினார்.  கரட்டூர் நாயக்கன்காடு, பச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தளித்தனர்.  பின்னர் நாய்க்கன்காடு பகுதியில் பிரச்சாரம் செய்த செங்கோட்டையன், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு பேசி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுபட்டு, சிவம்பட்டி, கிருஷ்ணாபுரம், தர்மன்தோப்பு, தோழனூர், உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று ஆதரவு திரட்டிய அவர், பெரியவர்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரித்தார். கிராம மக்கள்,  அவருக்கு பட்டாசுகள் வெடித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்  ராஜவீதி தேர்நிலை திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார். சாலையோர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்களிடையே மத்திய மாநில அரசுகளின் சாதனை திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.  ஆட்டோ ஒட்டுநர்களுக்கு மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்கள் குறித்து விளக்கமளித்த வானதி, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தன் சொந்த செலவில் விபத்து காப்பீடு பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். ஆட்டோ ஓட்டுநர்களுடன் மதிய உணவருந்திய அவர், தொடர்ந்து பல இடங்களில் பரப்புரை மேற்கொண்டார்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட தாங்கல் ஏரிக்கரை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில், மக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

வேளச்சேரி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்திரபோசை ஆதரித்து, டிடிவி தினகரன் காந்தி ரோடு பகுதியில் வாக்கு சேகரித்தார். நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத திட்டங்களை அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருப்பதாக அவர் கூறினார். 45 வயது ஆண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கவும், வீட்டிற்கு ஒருவருக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்து தருவோம் என்று தினகரன் உறுதி அளித்தார்.

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில், அதிமுக கூட்டணியில், பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு, வீதி, வீதியாகச் சென்று தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். நுங்கம்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில், திறந்தவெளி வாகனத்தில் சென்றும், வாகனங்கள் செல்ல முடியாத குறுகலான தெருக்களில், அதிமுக கூட்டணி கட்சியினருடன் நடந்து சென்றும், நடிகை குஷ்பு ஆதரவு திரட்டினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முருகன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட மகாராஜ கடை பகுதியில் வீடு வீடாக நடந்து சென்று ஆதரவு திரட்டிய அவர், ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் சால்வை அணிவித்து, வாக்கு சேகரித்தார். 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வைத்தியநாதன்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சூளைமேடு பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் வியாபாரிகளை நடந்து சென்று சந்தித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி, வாக்கு சேகரித்தார்.

வேளச்சேரி தொகுதி காந்தி ரோடு பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சந்திரபோசை ஆதரித்து, டிடிவி தினகரன்  வாக்கு சேகரித்தார். நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத திட்டங்களை அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருப்பதாக அவர் கூறினார். 45 வயது ஆண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கவும், வீட்டிற்கு ஒருவருக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்து தருவோம் என்று தினகரன் உறுதி அளித்தார்.

குமரி மாவட்டம், குளச்சல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்த நிலையில், மாலையில் குளச்சல் பேருந்து நிலைய பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அக்கரை பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்ற அவர், பின்னர், சுடலைமாடன் கோயிலில் 101 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார். மேலும், நெசவாளர் தெருவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.

பழனி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக தொகுதிக்கு செய்த பணிகள் குறித்தும், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள உறுதிமொழிகளை எடுத்துரைத்தும் ஆதரவு திரட்டினார். பாலசமுத்திரம், பாலாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பார்வார்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கதிரவனுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். கரமாத்தூரில் உள்ள நல்லகுரும்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய கதிரவன் வந்தபோது அவரை சந்தித்த 23 ஊராட்சி மன்றத்தலைவர்கள், 7 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 2 மாவட்ட கவுன்சிலர்கள் கதிரவனுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்களுடன் கதிரவன் ஆலோசனையில் ஈடுபட்டார். 

100 கட்சிகள் வந்தாலும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது  என திரைப்பட நடிகை விந்தியா தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கணேச ராஜாவை ஆதரித்து திறந்த வேனில் பிரசாரம் செய்தார். ரெட்டியார் பட்டியில் சாலையோரம் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய விந்தியா, யாரும் அதிமுகவை நெருங்க முடியாது என தெரிவித்தார்.

சென்னை தியாகராயர் நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெ. கருணாநிதி, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வியாழனன்று மாலை வடபழனி அழகிரி நகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவருக்கு ஆங்காங்கே அப்பகுதி மக்கள் பூ தூவி, மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments