விறுவிறுப்படையும் வேட்புமனுத்தாக்கல்..!

0 1546
தமிழகம்- புதுச்சேரியில் நாளையுடன் நிறைவடைகிறது வேட்புமனுத் தாக்கல்

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஆர்வமுடன் சென்று மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ்மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயசீலன், நூற்றுக்கணக்கானோருடன் சென்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

திருவெறும்பூர் தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் முருகானந்தம் மனு தாக்கல் செய்தார். ஊர்வலமாக மனுத் தாக்கலுக்கு சென்றதால் திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

சென்னை மாதவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஏழுமலை கட்சி நிர்வாகிகளுடன் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்து வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் உமாதேவன் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரன் சூரமங்கலத்திலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜேஷ் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோருடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஓமலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் ஊர்வலமாகச் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பேருந்து நிலையம் அருகே தேர்தல் நடத்தை விதி காரணமாக மூடப்பட்டிருந்த அண்ணா சிலையைத் திறந்து மாலை அணிவித்தாக புகார் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அதிமுக வேட்பாளர் நடராஜன், பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இந்தத் தொகுதியில் 5 முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் சக்கரபாணியே இந்த முறையும் களமிறக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திமுக மாநில துணைப்பொதுச் செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன், அங்கு அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் சி.கே.சரஸ்வதியை எதிர்கொள்கிறார்.

மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாகச் சென்ற சுப்புலட்சுமி ஜகதீசன், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மாடுகள் போக்குக் காட்டியதால் உரிமையாளர் வண்டியை ஓட்டிச் சென்றுவிட்டார். இதையடுத்து வேட்பாளர் ஆதரவாளர்களுடன் நடந்துசென்று வேட்புமனுவை அளித்தார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகனுமான விஜய் வசந்த்  தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த விஜய் வசந்த், மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சி தலைவருமான அரவிந்திடம்  தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று, 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் திரும்பிச் சென்ற மன்சூர் அலிகான், இன்று மீண்டும் பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்து தனது மனுவை தேர்தல் நடத்து அதிகாரியிடம் வழங்கினார்.

தொண்டாமுத்துர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதியும் அமமுக சார்பில் சதீஷ்குமாரும், மக்கள் நீதி மையம் சார்பில் ஸ்ரீநிதியும் போட்டியிடுகின்றனர்.

க்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஸ்னேகன், வேட்புமனு தாக்கல் செய்தார். தொண்டர்கள் புடை சூழ வாகனத்தில் ஊர்வலமாக வந்த அவர், விருகம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சுமனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக முகக்கவசம் அணியாமல் வந்த ஸ்னேகனின் ஆதரவாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது பிறந்த நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். விருத்தாசலம் தொகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்டு அபார வெற்றிபெற்றார். அதனை தொடர்ந்து 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வேட்பாளர் வெற்றிபெற்றார். இந்நிலையில், விருதகிரீஸ்வரர் ஆலயத்தில் சாமிதரிசனம் செய்த பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி பிரேமலதா பிறந்தநாள் கொண்டாடினர். பின்னர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவின்குமரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலின் சுனெஜாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சைதை துரைசாமி போட்டியிடுகிறார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளைம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.எஸ் சண்முகசுந்தரம் வேட்புமனு தாக்கல் செய்தார். இருசக்கர வாகனத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் புடைசூழ மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், 100மீட்டர் தடுப்பில் நிறுத்தப்பட்டார். தொடர்ந்து திமுக வேட்பாளர் டி.ஆர்.எஸ் சண்முகசுந்தரம், இருவருடன் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன், சேத்துப்பட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பரந்தாமன் திமுக வழக்கறிஞர் அணியில்  பொறுப்பில் உள்ளார். மனுதாக்கலுக்குப் பின செய்தியாளர்களை சந்தித்த பரந்தாமன் கடந்த 10 ஆண்டுகளாக எழும்பூர் தொகுதி புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக உள்ளது என்றார். 

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் பொன்னுசாமி டார்ச் லைட்களாலான மாலை அணிந்துவந்து வேட்பு மனுதாக்கல் செய்தார். பால் முகவர் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் அணி செயலாளருமான பொன்னுசாமி, எருக்கஞ்சேரியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அலுவர்லர் ராஜகோபாலிடம் தனது வேட்புமனுவை அளித்தார். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஏ.ஜி.வெங்கடாசலம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்த ஏ.ஜி.வெங்கடாசலம், தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேட்பு மனுதாக்கல் செய்தார். மேளதாளங்கள் முழங்க குதிரை ஆட்டம் , பொய்க்கால் ஆட்டம் , ஆகியவற்றுடன் தொண்டர்களுடன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி - தஞ்சை சாலையில் திருவெறும்பூர் கடைவீதி வழியாக ஊர்வலமாக வந்தார்.

பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திருச்சி மேற்குத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, வேட்பு மனுத் தாக்கல் செய்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்த கே.என்.நேரு, திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம், தனது வேட்பு மனுவை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, மக்களை சந்தித்து மட்டுமே வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் தான், அதிமுக ஆட்சியை கவிழ்க்கவில்லை என்றார். 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் துளசிமணி, வேட்புமனு தாக்கல் செய்தார். பேருந்து நிலையத்திலிருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த அவர், கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் உள்ள விநாயகரை சுற்றி வந்து வழிபட்டு, பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிதேவியிடம் வேட்பு மனுவை அளித்தார். 

மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சரவணன்,தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார்‍. பாஜக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் ஏராளமானவர்கள் புடை சூழ,திறந்த வாகனத்தில் ஊர்வலமாக வந்த அவர்,வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய செல்லும், வேட்பாளருடன்இருவர் மட்டுமே செல்ல அனுமதி உள்ள நிலையில்,அதனை மீறி, அங்குள்ள தடுப்புகளை தாண்ட, பாஜகவினர் முயற்சித்தனர்‍. அதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்புகளை தாண்டிய சிலரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சென்னை தியாகராயர் நகர் சட்டப்பேரவை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் பரணீஸ்வரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கோடம்பாக்கத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் பார்த்தசாரதி வேட்பு மனு தாக்கல் செய்தார். விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு வந்த அவர், தேர்தல் நடத்தும் அதிகாரி சுமனிடம், தனது வேட்பு மனுவை வழங்கினார்.

விருகம்பாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் விருகை ரவியும், திமுக சார்பில் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜாவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் சினேகனும் போட்டியிடுகின்றனர்.

சென்னை எழும்பூர் தனித் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் பிரியதர்ஷினி சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். சேத்துப்பட்டிலுள்ள எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் ஊர்வலமாக வந்த பிரியதர்ஷினி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவியிடம் வேட்புமனுவை வழங்கினார். பின்னர், அங்கு நின்றிருந்த தொண்டர்களுக்கு பிரியதர்ஷினி இனிப்பு வழங்கினார்.

எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் ஜான்பாண்டியனும், திமுக சார்பில் பரந்தாமனும், தேமுதிக சார்பில் பிரபுவும் போட்டியிடுகின்றனர். 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் பி.கே.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். பாலக்கோடு தொகுதியில் திமுக தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்த பின்னர், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், துணை ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சாந்தியிடம்  தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பாலக்கோடு தொகுதியில் உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீண்டும் போட்டியிடுகிறார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேட்பு மனுதாக்கல் செய்தார். மேளதாளங்கள் முழங்க குதிரை ஆட்டம் , பொய்க்கால் ஆட்டம் , ஆகியவற்றுடன் தொண்டர்களுடன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி - தஞ்சை சாலையில் திருவெறும்பூர் கடைவீதி வழியாக ஊர்வலமாக வந்தார்.

பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் முகமது நயீம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்ற வேட்பாளர் முகமது நயீம், வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் காயத்ரி சுப்பிரமணியத்திடம் வேட்பு மனுவை அளித்தார். 

சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன், தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை தனக்கு வாய்ப்பு வழங்காததால், சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷிடம் வேட்பு மனுவை அவர் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சீனிவாசன் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான சங்கரநாராயணனிடம் சீனிவாசன், தனது வேட்பு மனுவை அளித்தார்.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் முரளிசங்கர், வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வந்தவாசியில் இருந்து பஜார் வீதி, பழைய பேருந்து நிலையம், கோட்டை முலை வழியாக தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக  கூட்டணிக் கட்சியினருடன் வந்த வேட்பாளர் முரளிசங்கர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.ராமச்சந்திரன் வேட்பு மனுதாக்கல் செய்தார். நான்காவது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இவர், தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் தனது மனுவை வழங்கினார். 

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேய சிவசேனாபதி வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருடன் வந்த திமுக தொண்டர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 100மீட்டர் முன்னதாக போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி குவிந்ததால் அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனையடுத்து கார்த்திகேய சிவசேனாபதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் அரசனிடம், தனது வேட்பு மனுவை வழங்கினார். 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் திமுக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவர் முருகவேல்ராஜன்,தொண்டர்களுடன்ஊர்வலமாக சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்‍. உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டியவாறு, நடந்து வந்த அவர்,தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா வேட்பு மனுத்தாக்கல் செய்தார். திமுக கூட்டணியில் பாபநாசம் தொகுதி மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஜவாஹிருல்லா, தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் .

திருவொற்றியூர் தேர்தல் அலுவலகத்தில், ஏராளமான தொண்டர்களுடன் வந்து திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் இருந்து திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேண்ட் வாத்தியம் முழங்க ஊர்வலமாக வந்த வேட்பாளர் கே.பி.சங்கருக்கு, தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் V.P.B பரமசிவம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு அதிமுக தொண்டர்களும் கூட்டணி கட்சியினரும் மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் புடைசூழ வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், தேர்தல் நடத்தும் அதிகாரி பழனிக்குமாரிடம் வேட்பு மனுவை வழங்கினார். கூட்டம் அதிகம் கூடியதால் ஒட்டன்சத்திரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை திரு.வி.க.நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இளவஞ்சி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஓட்டேரியிலுள்ள மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திரு.வி.க. நகர் தொகுதியில் திமுக சார்பில் தாயகம் கவியும், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கல்யாணியும், தேமுதிக சார்பில் ஏ.பி.சேகர் என்பவரும் போட்டியிடுகிறார். 

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில்  போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் குழந்தை சாமியிடம் ரூபி மனோகரன் தமது வேட்பு மனுவை சமர்பித்தார். வேட்புமனு தாக்கலின்போது, காங்கிரஸ் வேட்பாளருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம், கட்சியில் சீட் வழங்காததால், சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், ஊர்வலமாக வந்த அவர், பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் இலாஹிஜானிடம், தனது வேட்புமனுவை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தோப்பு வெங்கடாச்சலம், அதிமுகவிற்கு துரோகம் இழைக்கவில்லை என்றும், யாரையும் எதிர்த்து களம் காணவில்லை என்றும் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளர் R.V. ரஞ்சித்குமார், ஆயிரத்து 8 தேங்காய் உடைத்து, நேரத்திக்கடன் செலுத்திய பின், வேட்புமனு தாக்கல் செய்தார், முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச ஆஞ்சநேயர் கோவிலில் வேட்பாளர் R.V. ரஞ்சித்குமார,முதலில் வழிபாடு நடத்தினார். தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பின் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலரும்  உத்திரமேரூர் தேர்தல் அலுவலருமான  பாபுவிடம் வேட்பாளர் R.V. ரஞ்சித்குமார் வேட்பு மனுவை சமர்பித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, வேட்புமனுத் தாக்கல் செய்தார்‍. வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வவிநாயகத்திடம் அவர் வேட்பு மனுவை அளித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அவர், நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறார்.

சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக, தேமுதிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். திரு.வி.க.நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தாயகம் கவி, ஓட்டேரி ஸ்டார்ஹான்ஸ் சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அமமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் சேகர், தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து, தேர்தல் அலுவலரிடம், வேட்புமனுவை வழங்கினார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் இளவஞ்சி வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments