முதலமைச்சர் சூறாவளி பரப்புரை.. விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரண்.!

0 3709

இந்தியாவிலேயே நிர்வாக ஆளுமையில் ஆகச்சிறந்த மாநிலமாக, தமிழ்நாடு விளங்குவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, விவசாயிகளுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார். 

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், நன்னிலம், மன்னார்குடி, திருவாரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து,வாக்குச்சேகரிப்பில், முதலமைச்சர் ஈடுபட்டார்.

பிரசாரத்தின் போது பேசிய முதலமைச்சர், காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டியது அதிமுக அரசு தான் என்றார். தண்ணீருக்கு கர்நாடகத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்று அவர் கூறினார்.

80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உதவுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மீண்டும் அதிமுக அரசு அமைந்த உடன் அந்த திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி குடிமராமத்து பணிகள் நடைபெற்றதன் காரணமாக கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை என்று முதலமைச்சர் கூறினார். 

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அதிமுக அரசு முற்றுப் புள்ளி வைத்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டிலேயே நிர்வாக ஆளுமையில் ஆகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக, மத்திய அரசே அறிவித்துள்ளதாகத் முதலமைச்சர் தெரிவித்தார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கும்பகோணம் நாச்சியார்கோவில் பகுதியில் தயாராகும் பித்தளை குத்து விளக்குகளை, தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் காமராஜை ஆதரித்து பிரச்சாரத்திற்கு வந்த முதலமைச்சரை, டிராக்டரில் அழைத்துச் சென்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments