படிப்படியாக தலைவரானவன் நான் - மு.க.ஸ்டாலின்

14 வயதில் தாம் அரசியலுக்கு வந்து படிப்படியாக வளர்ந்து தலைவர் என்ற நிலையை அடைந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவிடமே கொள்ளை அடித்தவர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் என்றும் அப்படி கொள்ளை அடித்த பணத்தை தற்போது வாக்காளர்களுக்கு அவர் வழங்கி வருவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வேடசந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் காந்திராஜன் மற்றும் நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் ஆகியோரை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். ஜெயலலிதாவிடமே கொள்ளையடித்தவர் நத்தம் விஸ்வநாதன் எனக் குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், இந்த காரணத்திற்காக நத்தம் விஸ்வநாதனை 10 நாட்கள் பூட்டி வைத்திருந்தார்கள் என்றும் கூறினார்.
2016 தேர்தலின் போது அதிமுக அளித்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்ற மு.க.ஸ்டாலின், ஒரு வேளை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக நிரூபித்தால் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றிக் கவலைப்படும் ஒரே கட்சி திமுக தான் என்ற மு.க.ஸ்டாலின், 14 வயதில் தாம் அரசியலுக்கு வந்து படிப்படியாக தலைவராகியிருப்பதாக தெரிவித்தார்.
கொரோனா மீண்டும் பரவி வரும் சூழலில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதோடு, கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். திமுக வின் தேர்தல் அறிக்கை கதாநாயகன், கதாநாயகி என வர்ணித்த மு.க.ஸ்டாலின் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வில்லனாகவும், காமெடி வில்லனாகவும் இருக்கிறது என விமர்சித்தார்.
தொடர்ந்து, மதுரை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் கோ.தளபதி, மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர் சின்னம்மாள், மத்திய தொகுதி வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளர் பூமிநாதன் ஆகியோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
Comments