'அவர்கள் படும் வேதனைக்கு முன் அழகு ஒரு பொருட்டே இல்லை !'- 1000 பெண்கள் சேர்ந்து 78 கிலோ முடி தானம்

0 1963

திருப்பூரில் கேன்சர் நோயாளிகளுக்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சேர்ந்து 78 கிலோ முடியை தானம் செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

கேன்சர் நோய்க்கு சிகிச்சை பெறும்போது நோயாளிகளுக்கு முடி உதிர்வது வழக்கம். கீமோதெரபி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும்போது முடி மிக அதிக அளவில் கொட்டி விடும். இதனால், கேன்சர் நோயாளிகள் தங்கள் தன்னம்பிக்கையை இழப்பார்கள். இதனால், கேன்சர் நோயாளிகளுக்கு உதவிடும் வகையில், இளம் பெண்கள் தங்கள் முடியை தானம் செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அப்படி, தானமாகப் பெறப்படும் தலைமுடி பக்குவப்படுத்தப்பட்ட விக்காக மாற்றப்படுகிறது. அதனைப் பயன்படுத்தும் நோயாளிகள் அழகிய கேசத்துடன் தங்களின் பழைய உருவத்தை பெறுவார்கள். இதனால், கிடைக்கும் தன்னம்பிக்கையால் புற்று நோயை வென்றவர்களும் அதிகமுண்டு. அந்த வகையில் திருப்பூரில் 1,000 பெண்கள் சேர்ந்து 78 கிலோ முடி தானம் செய்து சாதனை படைத்துள்ளனர்.

கணியாம்பூண்டியில் உள்ள இந்திய மருத்துவர் சங்கத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்தியப் மருத்துவர் சங்கம், இந்திய பல் மருத்துவர் சங்கம் மற்றும் அனைத்து சமூக அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்ட அந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து, 78 கிலோ முடி, திருப்பூர் செலிப்ரேசன் ரோட்டரி கிளப் அமைப்பினர் மூலமாக, கேன்சர் நோயாளிகளுக்காகத் தானமாகப் பெறப்பட்டது. பின்னர் அதனைக் கொண்டு மகளிர் தின லோகோ அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சி யுனிவர்ஸ் அச்சீவ்மெண்ட் புக் ஆப் ரெகார்ட்ஸ் மற்றும் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் சாதனையாகப் பதியப்பட்டுள்ளது. அதற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் திருப்பூர் செலிப்ரேசன் ரோட்டரி கிளப் அமைப்பினரிடம் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments