உதார் விட்டு வேட்பாளர் தேடும் உதிரி கட்சிகள்..!
கூட்டணியில் இடம் கிடைக்கததால், தனித்து போட்டியிடுவோம் என்று உதார்விட்ட உதிரிகட்சி தலைவர்கள் தங்கள் கட்சிக்கு வேட்பாளர் கிடைக்காமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .
ஒரு காலத்தில் அதிமுக கூட்டணியில் ஒரு இடம் கிடைத்தாலும் பெருமையோடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட சமத்துவ மக்கள் கட்சி இந்தமுறை மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றது.
அந்தக் கூட்டணியில் சரத்குமாரே எதிர்பார்க்காத அளவிற்கு 40 இடங்களை ஒதுக்கி அசரவைத்தார் கமல், தற்போது 40 இடங்களை பெற்றுக் கொண்ட சமத்துவமக்கள் கட்சிக்கு முதல் கட்டமாக 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மீதம் உள்ள 13 இடங்களுக்கு வேட்பாளர்களை தேடும் பணி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பலருக்கு இன்னும் வங்கி கணக்கே இல்லை என்ற நிலைமையில் வங்கி ஊழியர்களின் போராட்டம் காரணமாக வங்கி கணக்கு தொடங்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கணக்கு பாடத்துக்கு டிமிக்கி கொடுக்க வயிற்றுவலியை காரணம் காட்டி பள்ளிக்கு விடுப்பு கேட்கும் மாணவன் போல, வேட்பு மனுதாக்கலுக்கான கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று சமத்துவமக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்
கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றாலும் சரத்குமாரின் கோரிக்கையை ஏற்று ஒரு வேளை வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் நீடித்துவிட்டால் அப்போதாவது ச.ம.கவுக்கு வேட்பாளர்கள் கிடைப்பார்களா ? என்ற கேள்வியும் தொண்டர்களுக்கு எழுந்துள்ளது.
அதே போல தமிழக அரசியலில் புலிப்படை இல்லாவிட்டால் அவ்வளவுதான் என்று உதார் விட்டு பேசிவந்த அதிமுக கூட்டணி கருணாஸ் எம்.எல்.ஏ,, கூட்டணியை விட்டு வெளியேறி தாங்கள் 84 தொகுதிகளில் தனித்து களம் இறங்குவோம் என்றார்
பின்னர் தேர்தலில் போட்டியிடாமல் திமுகவுக்கு ஆதரவு என்றார், அதன் பின்னர் அதனை வாபஸ் பெற்று ஒருவாரம் கூட ஆகவில்லை சட்டப்பேரவை தேர்தலிலேயே போட்டியில்லை என்று பின்வாங்கியுள்ளார்.
உதார் பேச்சால் வாய்ப்பிழந்து தேர்தல் கூட்டணியில் இடம் கிடைக்காமல், தனித்தும் போட்டியிட ஆள் இல்லாமல் விரக்தி மன நிலையில் இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்வதென்பதே தெரியாமல் தவித்து நிற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன உதிரிகட்சிகள்..!
Comments