'எனக்கே தெரியாம வேட்பாளரா அறிவிச்சுட்டாங்க!' - பா.ஜ.க சார்பில் போட்டியிட மறுத்த இளைஞர்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள மானந்தவாடி தொகுதியில் பழங்குடியினர் மட்டுமே போட்டியிட முடியும் . இந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக பனியா இனத்தை சேர்ந்த இளைஞர் மணிகண்டனுக்கு அறிவிக்கப்பட்டார். இத்தனைக்கும் பாரதிய ஜனதா கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட மணிகண்டன் இல்லை. மணிகண்டன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அது குறித்து உள்ளுர் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொலைக்காட்சிகளிலும் அவரின் பெயர் வேட்பாளர் என்று செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால், மணிகண்டன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட போவதில்லை என்று அறிவித்து விட்டார். தான் கட்சியிலேயே உறுப்பினராக இல்லாத போது தனக்கு சீட் கொடுத்தது ஆச்சரியமாக இருப்பதாகவும் தனக்கு எந்த காலத்திலும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லையென்றும் மணிகண்டன் கூறியுள்ளார். மேலும், தனக்கு தன் வேலையும் குடும்பத்தினர் மட்டுமே முக்கியம் என்றும் மணிகண்டன் தெரிவித்து விட்டார்.
இதனால், தற்போது வேறு வேட்பாளரை தேடும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி இறங்கியுள்ளது. வயநாடு தொகுதியில் மானந்தவாடி, பத்தேரி, கல்பெட்டா தொகுதிகளில் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். இதில், கல்பெட்டா தொகுதிக்கு மட்டுமே பாரதிய ஜனதா கட்சிக்கு வேட்பாளரை அறிவித்துள்ளது. மற்ற இரு தொகுதிகளிலும் வேட்பாளர் கிடைக்காமல் திண்டாடி வருகிறது.மணிகண்டன் பனியா இன மக்களின் முதல் பட்டதாரி ஆவார். எம்.பி.ஏ படித்துள்ள இவர், கேரளா கால்நடை மற்றும் அறிவியல் சயின்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இதனால், மணிகண்டனை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக தேர்வு செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், மணிகண்டன் தனது எண்ணோட்டத்துக்கு உகந்த கட்சியாக பாரதிய ஜனதா இல்லை என்று கருதுகிறார்.
Comments