தேர்தல் பணியா... 20 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த செல்லமா...? குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்தில் தவித்த தாய்!

காஞ்சிபுரத்தில் தேர்தல் விடுமுறை அளிக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தத்தெடுத்த கைக்குழந்தையுடன் அங்கன்வாடி ஊழியர் ஒருவர் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட மொளசூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பத்மாவதி - சந்தோஷ்குமார் தம்பதி. பத்மாவதி அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தைபேறு இல்லை. பெற்றால் தான் பிள்ளையா என்று யோசித்த தம்பதியினர், மத்திய அரசின் தத்துப் பிள்ளைகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் குழந்தைக்காக பதிவு செய்து இருந்தனர்.
தொடர்ந்து , கடந்த 10 ஆம் தேதி பத்மாவதி - சந்தோஷ்குமார் தம்பதியினருக்கு மகாராஷ்டிராவில் பிறந்த ஒரு ஆண்குழந்தை வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த தகவல் தம்பதிக்கு வந்ததும் மகிழ்ச்சியுடன் மஹாராஷ்டிரா சென்ற தம்பதியினர் மத்திய அரசின் நடத்தை விதிகளோடு தங்களுக்கு 20 ஆண்டுகாலத்துக்கு பிறகு வரமாக கிடைத்த செல்லப்புத்திரனை பெற்றனர். தங்களுக்கு குழந்தை கிடைத்ததால், தம்பதியினர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குழந்தையை சீராட்டி பாராட்டி வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில், தேர்தல் வடிவில் தம்பதியின் அளப்பரிய மகிழ்ச்சிக்கு தடை வந்தது. அங்கன்வாடி ஊழியரான பத்மாவதிக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், தன் செல்ல மகனை பார்த்துக் கொள்ள வேண்டியது இருப்பதால், தனக்கு தேர்தல் பணி வேண்டாம் என்று கூறி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தேர்தல் அதிகாரியை சந்திக்க முயன்றுள்ளார். ஆனால் அங்கு தேர்தல் அதிகாரியை சந்திக்க முடியவில்லை. அங்கிருந்த ஊழியர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு சென்று பாருங்கள் என அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து கைக்குழந்தையுடன் தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலரை சந்திக்க சென்றுள்ளனர்.
அங்கேயும் தேர்தல் அலுவலரை சந்திக்க தாமாதமாகியது. இதனால் பிறந்து சில நாட்களே ஆன கைக்குழந்தையுடன் வந்த பத்மாவதி - சந்தோஷ்குமார் தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனைக் கண்டு வருத்தப்பட்ட அங்கிருந்த சிலர், குழந்தை தத்தெடுத்தற்காக மத்திய அரசு வழங்கியுள்ள சான்றிதழை இணைத்து விடுமுறைக்கு விண்ணப்பிக்குமாறு பத்மாவதிக்கு ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தனர்.
Comments