தமிழகம் முழுவதும் சூடு பிடிக்கிறது தேர்தல் பிரசாரம்: வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

0 1396
தமிழகம் முழுவதும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

தமிழகம் முழுவதும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

விழுப்புரத்தில் போட்டியிடும் அமைச்சர் சி.வி.சண்முகம், கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள தரைப்பாலத்தில் தொடங்கி, திரௌபதி அம்மன் கோயில் வரையில், பொதுமக்களை சந்தித்து, இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

பண்ருட்டியிலிருந்து முந்திரி,பலா ஆகியவை ஏற்றுமதி செய்யும் நிலையில், அங்கிருந்து வேட்பாளரை பாமக கீழ்பெண்ணாத்தூருக்கு இறக்குமதி செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விமரிசித்துள்ளார்‍. கீழ்பெண்ணாத்தூர் திமுக வேட்பாளர் பிச்சாண்டியை ஆதரித்து மேற்கொண்ட பரப்புரையில் இதனை அவர் கூறினார்‍.

கோவில்பட்டி தொகுதியில் குக்கர் சின்னம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டுமென்று அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன்தெரிவித்துள்ளார். கயத்தாறில் பேசிய அவர், மக்கள் யாருக்கும் விலை போகமாட்டார்கள் என்பதை இந்தத் தேர்தல் மூலம் காட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தேர்தல் அறிக்கையை சிறப்பாக வெளியிட்ட  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் ஹீரோ  என திண்டுக்கல் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். குமரன் திருநகர் பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அவர் லட்சுமி சுந்தரம் காலனி, ரவுண்டு புதூர், அனுமந்த நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

மக்களின் அத்தியாவசிய தேவைகளான நியாய விலை கடை, முதியோர் உதவித்தொகை, மற்றும் இளைஞர்களின் வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றை  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கட்டாயமாக நிறைவேற்றுவோம் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மார்க்கண்டேயனை ஆதரித்து  அவர் விளாத்திகுளம்,நாகலாபுரம் மற்றும் குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில்  பிரச்சாரம் மேற்கொண்டார். 

வரும் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் முழு ஈடுபட்டுடன் செயல்பட வேண்டும் என்று பெரியகுளம் தொகுதி வேட்பாளரும், தேனி வடக்கு மாவட்ட செயலாளருமான தங்கத்தமிழ்செல்வன் கேட்டுக் கொண்டார். முன்னதாக பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் பெரியகுளம் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.

திருவள்ளூரில் திமுக சார்பாக போட்டியிடும் வி.ஜி.ராஜேந்திரன், இத்தொகுதிக்குட்பட்ட இறையூர் சிற்றம்பாக்கம்,மொன்னவேடு உள்ளிட்ட பகுதிகளில்   ஏராளமான திமுக தொண்டர்களோடு, வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

தேர்தல் அறிக்கையை சிறப்பாக வெளியிட்ட  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் ஹீரோ  என திண்டுக்கல் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். குமரன் திருநகர் பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அவர் லட்சுமி சுந்தரம் காலனி, ரவுண்டு புதூர், அனுமந்த நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அதிமுக மக்களை ஏமாற்ற முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்  என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வருகிற 18ந் தேதி முதல் திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கப் போவதாக தெரிவித்தார். 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிக்கு  மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்படும் என்று பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தாராபுரத்தில் பேசிய அவர், பல்வேறு மாநிலங்களுக்கும் விதைநெல் செல்வதால் தாராபுரத்தில் விதைகளஞ்சியம் உருவாக்கப்படும் என்றார். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதிமுக வேட்பாளரான சதன் பிரபாகர், கடைவீதியில் ஆதரவாளர்களுடன் நடந்து சென்று வியாபாரிகளிடம்  வாக்குசேகரித்தார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆவடி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் அவர்,இத்தொகுதிக்குட்பட்ட
திருவேற்காடு, வேலப்பன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்றும்,வாகனத்தில் சென்றும் பரப்புரை மேற்கொண்டார்‍.

100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக மாற்றி 300 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று ராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் வாக்காளர்களுக்கு உறுதி அளித்தார். ராஜபாளையத்தில் பேசிய அவர், இந்த வேலைக்கு  நீங்கள் செல்லாமல் மண் வெட்டி வைத்து மண் வெட்டாமல் கூட சம்பளம் பெற்றுக் கொள்ளலாம் என்றார். 

அதிமுகவில் நேரம் வரும் போது பதவிகள் வழங்கப்படும் என்றும் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்றும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். மயிலம் தொகுதி பாமக வேட்பாளர் சிவக்குமாரை ஆதரித்து பேசிய அவர்,  நேரம் அறிந்து, தேவை அறிந்து  சரியான நேரத்தில் மக்களுக்கு உதவுபவர் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை புதிய வருவாய் மாவட்டமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார். ஆரணி ஆற்றுபாலம் அருகே நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அவர் பேசினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் சார்பில் மாமண்டூரில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர் கூட்டத்தில் மாற்று கட்சியிலிருந்து 300க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். பின்னர் இவர்கள் அனைவரும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு  அயராது பாடுபடுவோம் என  சூளுரைத்தனர். 

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மருத்துவ மற்றும் சட்டக் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என  அத்தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளி கூறியுள்ளார்‍.  தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தில் இந்த வாக்குறுதியை அளித்து அவர் இரட்டை இலைச் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

கடந்த முறை தவறான வழிகாட்டுதலால் ஆர்.கே நகர் தொகுதியின் வெற்றி கைமாறியதாக அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர். எஸ். ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர். எஸ்.ராஜேஷ் எழில் நகர், அன்னை சத்தியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக எழில் நகர் பகுதியில் உள்ள தொப்பை விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்திய அவர், மேள தாளங்கள் முழங்க வீடு வீடாக சென்று மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன், பிரச்சாரத்தின்போது சிறுவர்களுடன் பம்பரம் விட்டு விளையாடி பிரச்சாரம் மேற்கொண்டார். வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்தும் சூடம் ஏற்றி மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர். ஜோதி அம்மாள் நகர்ப்பகுதியில் சிறுவர்கள் பம்பரம் விட்டு விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்த மா.சுப்பிரமணியன், பம்பரம் விட்டு விளையாடி அந்த பகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

டீக்கடையில் பொதுமக்கள், துப்புரவு பணியாளர்களுடன் தேனீர் அருந்தியபடியே, சைதாப்பேட்டை தொகுதிக்கு செய்துள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் சீரமைப்பு பணிகளை பட்டியலிட்டார்.

ஒரு சிலிண்டர் விலை 4800 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரத்தின் போது 5 ஆயிரம் ரூபாய் வரை உள்ள சிலிண்டரை வருடத்திற்கு ஆறு இலவசமாக முதலமைச்சர் தர உள்ளதாக கூறினார்.

தொடர்ந்து ஐயன்குளம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசிக்கும் தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அனைவருக்கும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வேறு இடத்தில் வீடு கட்டித்தரப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதியளித்தார்.

திமுக சார்பில் கரூரில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் பாலாஜி வீடு, வீடாக சென்று பெரியவர்களின் காலில் விழுந்து வாக்குகளை சேகரித்தார். கரூர் நகராட்சி பகுதிகளுக்கு நடந்த சென்று வாக்குகளை சேகரித்தார். அவருக்கு, பொன்னாடை போர்த்தியும், ஆராத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் பெஞ்சமின், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா போல் உடை அணிந்த இளம்பெண் ஒருவர், அமைச்சர் பென்ஜமினுக்கு வாக்கு சேகரித்தார். இதேபோல் திருநங்கைகள் மத்தியில் வாக்கு சேகரித்த அமைச்சர் பெஞ்சமின், அவர்கள் ஆசீர்வதித்து கொடுத்த பணத்தை வாங்கி தனது சட்டை பையில் வைத்துக்கொண்டார். இதனிடையே தேங்காய் சுற்றிய அதிமுக பெண் நிர்வாகி ஒருவர், திடீரென சாமி வந்து ஆடியதோடு, கையில் சூடகம் ஏற்றினார்.

திருவண்ணாமலை மாவட்டம் , கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி கிராம் கிராமமாக நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, கிராமத்தில் உள்ள குடிசைகள் அனைத்தும் காண்கிரீட் வீடாக மாற்றப்படும் என்றும், ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் நான்காயிரம் ரூபாய் வீடு தேடி வரும் என்றும் கிராம மக்கள் மத்தியில் கூறினார். 

நாம் தமிழர் கட்சி சார்பில் தியாகராய நகர் தொகுதியில் களமிறங்கியுள்ள மென் பொறியாளர் சிவசங்கரி,தீவிர வாக்குசேகரில் ஈடுபட்டார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சிவசங்கரி, உஸ்மான் சாலை, ரெங்கநாதன் தெரு, பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் எவ்வித ஆர்ப்பாட்டமோ, ஆடம்பரமோ இன்றி பொதுமக்களில் ஒருவராய் வாக்கு சேகரித்தார். தியாகராய நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சத்யாவையும், திமுக சார்பில் போட்டியிடும் ஜெ. கருணாநிதியும் எதிர்த்து சிவசங்கரி களம்காண்கிறார்.

ஏற்கெனவே தமிழகத்தை டெல்லியில் அடகு வைத்த ஆட்சியாளர்கள், விட்டால் தமிழகத்தையே விற்றுவிடுவார்கள் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காந்தியை ஆதரித்து வாக்குசேகரித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியை தோற்கடித்த கோபத்தில்தான் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவை தொகை தர மத்திய அரசு மறுப்பதாக குற்றஞ்சாட்டினார். 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சரோஜா மார்கெட் பகுதியில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, விசைத்தறி தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 250 யூனிட் மின்சாரம் ஆயிரம் யூனிட்டாக உயர்த்தப்படும், விசைதறியாளர்கள் வாங்கிய  கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனும் அதிமுக தேர்தல் வாக்குறுதியை சட்டிக்காட்டி அவர் வாக்கு சேகரித்தார்.

வீடுதோறும் சோலார் அடுப்பு வழங்கப்படும் எனவும், இந்த அடுப்பு மின்சாரமோ, டீசலோ தேவையில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.அப்போது, 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆறு சிலிண்டரை முதலமைச்சர் இலவசமாக தர உள்ளதாக அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து ஐயன்குளம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசிக்கும் தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அனைவருக்கும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வேறு இடத்தில் வீடு கட்டித்தரப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதியளித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை மற்றும் ஆற்காடு உள்ளிட்ட தொகுதிகளில் களமிறங்கும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியை தோற்கடித்த கோபத்தில்தான் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவை தொகை தர மத்திய அரசு மறுப்பதாக குற்றஞ்சாட்டினார். 

திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் முடிந்த கையோடு தேர்தல் அலுவலகத்தில் வைத்தே போட்டோ சூட் நடத்தினார்.

திருவொற்றியூர் தொகுதியில் அம்பேத்கர் மக்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ரமேஷ்குமார் சுயேட்சையாக களம்கான்கிறார். இதனையடுத்து திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் பேண்டு வாத்தியங்கள் முழங்க வந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அத்தோடு அங்கு வைத்தே விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ சூட்டும் நடத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் இளம்பெண் பத்மபிரியா வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அக்கட்சியின்  சுற்றுச்சூழல்  பாதுகாப்பு அணி மாநில செயலாளராக உள்ள 25 வயதுடைய முதுகலை பட்டதாரி பத்மபிரியா வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஆதரவாளர்களுடன் திறந்தவெளி வேனில் ஊர்வலமாக வந்தார். இதனையடுத்து மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற திமுகவின் அறிவிப்பால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவர் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் ஒத்தக்குதிரையில் உள்ள தனியார் மண்டபத்தில் அந்தியூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக வேட்பாளார் சண்முகவேலை அறிமுகம் செய்துவைத்தார். 

பொருளாதார வல்லுநர்களிடம் கலந்தாலோசித்த பிறகே திமுக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டது என திமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு கூறினார்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கே.என்.நேரு கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், திருச்சி கிழக்குத் தொகுதி அமமுக வேட்பாளர் மனோகரன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் பணியாற்றியவர் என்றும் தற்போது முதலாளியும் தொழிலாளியும் ஒரே இடத்தில் போட்டியிடுவது திமுகவுக்கு சாதகமாகவே அமையும் என்றும் கூறினார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர், வழக்கறிஞர் ப.அருள் கரும்புடன் வந்து வருவாய் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக கரும்பு, சின்னம், வேட்பாளர் பெயர், புகைப்படம், வாக்குறுதிகள் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்தி டிராக்டர் ஓட்டியபடி பேரணியாக வட்டாச்சியர் அலுவலகத்திற்கு ப.அருள் வந்தார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீதி வீதியாகச் சென்று வணிகர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நன்னிலம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகக் களமிறங்கும் அமைச்சர் காமராஜ், தொகுதிக்குத் தாம் செய்த பணிகளையும் சாதனைகளையும் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் இசக்கி சுப்பையா வேட்புமனு தாக்கல் செய்தார். சேரன்மாதேவியில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி காரில் ஊர்வலமாக வந்த இசக்கி சுப்பையா சார் ஆட்சியர் பிரதீக் தயாலிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திமுக ஆட்சி அமைத்த முதல் மாதமே ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 5 ஆயிரம் வந்து சேரும் என அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தாம்பரம் முடிச்சூர் சாலையில், கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில், தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவை அறிமுகம் செய்து பேசிய அவர் திமுக தேர்தல் அறிக்கையின்படி, கொரோனா உதவி தொகையாக 4 ஆயிரம் ரூபாயும், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரமும் சேர்த்து என 5 ஆயிரம் ரூபாய் வழங்கபடும் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மாட்டு வண்டியில் வந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேந்திரன் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, கரும்புகள் கட்டிய மாட்டு வண்டியில் வேதாரண்யம் வடக்கு வீதியில் இருந்து வேட்பாளர் ராஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் அந்த தொகுதியின் வேட்பாளர் சண்முகையா-விற்கு கூட்டணி கட்சியினர் ஆதரவு தெரிவிப்பது தொடர்பான நிகழ்சபுதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண  மண்டலத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, தமிழகத்தின் சுய மரியாதையை பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான தேர்தல் இது என்று குறிப்பிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் 6-வது முறையாக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி ராஜசேகரிடம் தனது வேட்புமனுவை அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 234 தொகுதிகளிலும் ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். 

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.பி.துரைராஜ், வேட்பு மனுதாக்கல் செய்ய ஆயிரக்கணக்கானோருடன் திரண்டுவந்தார். வாத்திய இசை முழங்க தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த கேபி துரைராஜ்-ஐ இடையிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பிறகு தன்னுடன் இரண்டு பேரை மட்டும் அழைத்தக் கொண்டு சென்று துரைராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக ஆயிரக்கணக்கான கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக சென்று மதுராந்தகம் பஜார் வீதியில் உள்ள அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் மதுராந்தகம் கோட்டாட்சியர் லட்சுமி பிரியாவிடன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

கட்சியில் சீட் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், ஆளும் அதிமுகவின் வெற்றி பாடுபடுபவர்களே, உண்மை தொண்டன் என்றும், அவ்வாறு இல்லாதவர்கள் சந்தர்ப்பவாதிகள் என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் அறிமுகம் செய்து வைத்து பேசிய அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 

ஈரோடு மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சூரம்பட்டி ஓங்காளியம்மன் கோவிலில் வழிபட்ட அவர் சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு, பழைய பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக அரசின் சாதனை பட்டியல் அடங்கிய துண்டு பிரசுங்களை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்..

தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி கே ஜி நீலமேகம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அண்ணா சிலையிலிருந்து தனது தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த அவர், வேட்பு மனுவை அளித்தார்.இவர் அதிமுக வேட்பாளர் அறிவுடை நம்பியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன் பாலிநாயனபள்ளியில் உள்ள பாரத மாதா கோயிலில் சாமி தரிசனம் செய்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இதனையடுத்து ஒரப்பம், பாலிநாயனபள்ளி, அச்சமங்கலம், அஞ்சூர், சூளமலை, பாலேப்பள்ளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாலிநாயனபள்ளியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், படேதளாவ் கால்வாயில் இருந்து பர்கூர் தொகுதியின் கடைமடை பகுதி வரை தண்ணீரை கொண்டு சென்று நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவேன் என வாக்குறுதி அளித்தார்.

பாண்டியாறு-புன்னம்புழா நீர்மின் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் குமார் என்ற சுயேட்சை வேட்பாளர் தண்ணீர் குடத்துடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இரும்பு பட்டரை தொழிலாளியான இவர், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து தண்ணீர் குடத்தை தலையில் சுமந்து இரண்டு சிறுவர்களுடன் நடைபயணமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.என்.ரவி, கட்சி தொண்டர்கள் கூட்டணி கட்சியினருடன், தாரை தப்பட்டை முழங்க முத்தமிழ் நகர், காந்திநகர், அம்பேத்கர் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆரத்தி எடுத்தும், மாடியில் இருந்து மலர் தூவியும் வரவேற்றனர்.

முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த கட்சியை சேர்ந்த ஒருவர் தனது பிறந்த நாளையொட்டி வேட்பாளருக்கு இனிப்பை ஊட்ட வந்தார். ஆனால் வேட்பாளரோ அவரிடம் இருந்த இனிப்பை வாங்கி, இளைஞருக்கே ஊட்டி விட்டார். மேலும் தம்பதியினரின் ஆண் குழந்தையை கையில் ஏந்தி, ராமச்சந்திரன் என அவர் பெயரிட்டார்.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தானே தேநீர் தயாரித்து வழங்கி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், இறையூர் பகுதியில் வீதிவீதியாக பரப்புரை மேற்கொண்டார். டீக்கடை ஒன்றிற்கு வந்த அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம், மிக இயல்பாக அடுப்பை பற்றவைத்து, தேர்ந்த டீ மாஸ்டர் போல் தேநீர் தயாரித்து, தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கி, வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.தமிழரசு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால், அவர் போட்டியிடும் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மு.க.தமிழரசு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை எழும்பூரில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் பிரியதர்ஷினி மூன்றாவது நாளாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். சூளை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் அவர் டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கடந்த 10 ஆண்டுகளாக எழும்பூர் தொகுதி வளர்ச்சியில் பின்தங்கி உள்ளதாகத் தெரிவித்த அவர் தான் வெற்றி பெற்றால் அதை மாற்றி காட்டுவேன் என்றார்.

இருபது ஆண்டுகால அரசியல் சேவையில் மக்கள் அனைவரையும் சந்தித்து அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றியுள்ளதாகவும் எளிதில் அனைவரையும் சந்திக்கும் சாமானியனாக பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் தங்கமணி, பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து நலத்திட்டங்களையும் அதிமுக செய்து முடித்துள்ளது என்றார்.

சென்னை ஆலந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஐயப்பன்தாங்கல், கெளுத்துவான் சேரி, தெள்ளியார் அகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து மலர்தூவி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments