கோரிக்கை தொடர்பாக மக்கள் மனுக்கொடுக்கத் தேவையில்லை, 1100 என்ற எண்ணில் புகார் செய்தால் உடனே நடவடிக்கை - முதலமைச்சர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் பிரச்னை குறித்து மனுக்கள் அளிக்க வேண்டாம் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 1100 என்ற எண்ணில் புகார் செய்தால் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே நடந்த தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, எடப்பாடி தொகுதியில் மக்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். 20 கோடி ரூபாய் மதிப்பில் தனி குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டதையும், அரசு கலைக்கல்லூரி உருவாக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.
அனைத்து குடும்பத்திற்கும் 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று கூறிய முதலமைச்சர், அனைத்து குடும்பங்களுக்கும் வாஷிங் மெஷின் தரப்படும் என்று உறுதியளித்தார்.
கோரிக்கை தொடர்பாக மக்கள் மனு கொடுக்க தேவையில்லை என்று கூறிய முதலமைச்சர், 1100 எண்ணில் பிரச்சினைகளை தெரிவித்தால் அதன் மீது அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பார்கள் என்று குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் 52 லட்சத்து 32 ஆயிரம் மடிக்கணினிகள் கொடுக்கப்பட்டதன் மூலம் ஏழை எளிய மாணவ மாணவிகள் கல்வி தரம் உயர்ந்திருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். மேலும், தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால்
புதிய தொழில்கள் தமிழகத்தில் வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், 304 தொழிற்சாலைகள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழகம் தொழில் துறையில் சிறந்து விளங்குவதாகப் பேசிய முதலமைச்சர் உள்ளாட்சித் துறையில் 103 விருதுகள் தமிழகம் பெற்றிருப்பதாகவும், மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளில் தேசிய விருது பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments